இல்லை.

சுருக்கமாக: மடங்கள், அதுவும் பழைய மடங்களிடம் சொத்து நிறைய இருக்கும்; பல அபூர்வமான ஆவணங்கள் இருக்கும்; சிலவற்றுக்கு பிரஸ்டிஜ் இருக்கிறது. சொத்தை வைத்துக் கொண்டு நிறைய செய்யலாம். மேல் மருவத்தூர் ஒரு நல்ல உதாரணம். மிஷனரி பள்ளிகள் ஒரு நல்ல உதாரணம். பிரஸ்டிஜ் நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட்டால் அருமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஊரில் ஓரளவு நல்ல பேர் இருந்தபோது ஜெயேந்திர சரஸ்வதி சேரிகளுக்கு போனார். அப்புறம் தலித் தாழ்ந்தவன் என்று பேசுவது இன்னும் கொஞ்சம் கஷ்டம். அதர்வண வேதம் அழிந்தே விட்ட நிலையில் அதை மீண்டும் உயிர்ப்பிக்க சந்திரசேகரர் மிகவும் பாடுபட்டாராம். அப்படி எல்லாம் செய்ய மடங்களால் மட்டுமே முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக கோவில்கள், சர்ச்கள் மக்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் சக்தி உள்ளவை. இந்த காரணங்களால் மடம் potentially நல்ல விஷயமே என்றுதான் நான் நினைக்கிறேன்.

மடங்கள் லௌகீக ரீதியில் நல்ல முறையில் பணி ஆற்றலாம். மிஷனரிகள் பள்ளிகள் நடத்தியது/நடத்துவது போல் (மத மாற்றமே மிஷனரிகளின் குறிக்கோள் என்று சொல்பவர்கள் உண்டு, இப்போதைக்கு நான் அங்கே போகவில்லை) காஞ்சி மடமும் சிருங்கேரி மடமும் குன்றக்குடி ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனமும் ஓரளவு சேவை மனப்பான்மையுடன் பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் நடத்தலாம். இங்கே என்ன பணம் வருகிறது என்பது இரண்டாம் பட்சமாக இருந்தால் நல்ல பேர் கிடைக்கும்; அந்த நல்ல பேர் நாளடைவில் நிறைய பணம் கொண்டு வரும். ஜெயேந்திரர் பேர் கெட்டுப் போகும் வரை காஞ்சி மடத்துக்கு நன்கொடைகள் நல்லபடி வந்துகொண்டிருந்தன என்று நினைக்கிறேன். யார் கண்டது, இன்றைக்கும் வருகிறதோ என்னவோ?

மடாதிபதிகளுக்கு (பேர் கெடும் வரையிலாவது) நம் ஊரில் ஓரளவு பிரஸ்டிஜ் இருக்கிறது. போலி சாமியார்கள் பற்றி இத்தனை நியூஸ் வரும்போதே கூட்டம் அவர்களிடம் அம்முகிறது. மக்கள் யாராவது உத்தமன், உண்மையான துறவி என்று நம்ப விரும்புகிறார்கள். அந்த பிரஸ்டிஜ் சரியான வழியில் பயன்படுத்தப்பட்டால் மாற்றங்களை கொண்டு வரலாம். ஜெயேந்திரர் சேரிகளுக்கு போனது நல்ல விஷயம். அவர் நாலு தலித்களை மடத்தில் தன் செயலாளர் மாதிரி போஸ்ட்களில் நியமித்திருந்தால் குறைந்த பட்சம் காஞ்சி மடத்துக்கு வருபவர்கள் ஜாதி கீதி என்று சொல்ல முடியாது. (myownquiver சந்திரசேகரர் வர்ணாசிரமத்தை நம்பியவர் என்று சொல்கிறார், அப்படி என்றால் செயலாளர் எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.) மதுரை ஆதீனம் பாப்பாப்பட்டி சேரிக்கு போனால் அந்த ஊர் மக்கள் மீது இன்னும் கொஞ்சம் பிரஷர் அதிகரிக்கும். ஆனால் அதற்கு மனம் வேண்டும், தைரியமும் வேண்டும். ஹிந்து மதம் மிக சுலபமான மதம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கும். தலித்களை ஒடுக்கக்கூடாது என்று சொல்ல வேண்டுமா, ஆதி சங்கரருக்கு ஒரு “சண்டாளன்” உபதேசித்ததை காட்டலாம். ஒடுக்க வேண்டுமா, அந்த “சண்டாளன்” சாட்சாத் சிவபெருமானே என்ற ஐதீகத்தை காட்டலாம். ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், விதவைக்கு மறுமணம் செய்யலாம் என்று நினைத்தால் சேரிக்கு போகலாம், மடத்திலேயே கல்யாணம் பண்ணி வைக்கலாம், அதற்கு ஆதாரமாக நாலு ஸ்லோகத்தை படிக்கலாம். (யாருக்கும் புரியப் போவது இல்லை) “ஜன்மணா ஜாயதே சூத்திர கர்மணா ஜாயதே த்விஜ” என்று சொன்னால் ஜாதி பிறப்பால் வருவது இல்லை. மனு ஸ்மிருதியை காட்டினால் ஜாதி பிறப்பால்தான். எதை இந்த மடாதிபதி நம்புகிறார் என்பதை பொறுத்தது.

என் கருத்தில் இந்த லௌகீக சமாசாரங்களை எல்லாம் செய்யாவிட்டால் மடங்களுக்கு எதிர்காலம் இல்லை. மடங்களுக்கு முன்பு இருந்த மரியாதை இப்போது இல்லை. மரியாதை குறைந்தால் வருபவர்கள் குறைவார்கள், நன்கொடைகள் குறையும், இரண்டு மூன்று தலைமுறைகளில் யாரும் இந்த மடங்களை சீந்த மாட்டார்கள். ஆனால் எல்லாருக்கும் ஸ்கூலும், ஆஸ்பத்திரியும் தேவைப்படுகிறது. அதை எல்லாம் நடத்தி மரியாதையை வளர்த்துக் கொண்டால் ஒழிய எதிர்காலம் இல்லை. மிஷனரிகள் மீது குறை சொல்பவர்கள் அநேகம். ஆனால் இன்றும் மக்கள் செயின்ட் கொலம்பஸ் ஸ்கூல், செயின்ட் ஜோசஃப் ஸ்கூல், செயின்ட் மேரி ஸ்கூல் என்று தேடிக்கொண்டு போகத்தான் போகிறார்கள். இந்த மாதிரி சொல்லக்கூடிய ஹிந்து மட ஸ்கூல்கள் மிகக் குறைவே. ராமகிருஷ்ணா ஸ்கூல் ஒன்றுதான் எனக்கு தெரிகிறது. கௌடியா மட ஸ்கூல், ஜீயர் ஸ்கூல், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்கூல் என்று ஏன் இல்லை?

நாலு தலைமுறைக்கு முன்னால் சாமியார்கள் அயோக்கியர்கள் என்று திராவிட இயக்கத்தினரைத் தவிர வேறு யாரும் பேசியதில்லை. அப்போது ஊருக்கு ஒரு திராவிட இயக்கத்தினர் இருந்தால் அதிகம். இன்றைக்கு ஜூனியர் விகடனில் வாராவாரம் ஒரு போலி சாமியாரின் காம லீலை என்று ஏதாவது வருகிறது. கோவில் அப்போதெல்லாம் பராசக்தி மாதிரி சினிமாவில் மட்டும்தான் கொடியவர்களின் கூடாரம் ஆகும். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் யாரோ அர்ச்சகராமே, கேட்கவே கேவலமாக இருக்கிறது. இன்று போலி ஆன்மீகவாதிகள் சுலபமாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். அவர்களை அடையாளம் காட்டுவதற்காகவே பத்திரிகைகள் அலைகின்றன. கேள்வி கேட்காமல் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் காலம் மலையேறி வருகிறது. இதை மடங்களும் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கு நல்லது.

மடங்கள் மிக சுலபமாக செய்யக் கூடிய விஷயம் – ஆவணங்களை முறைப்படுத்துதல், வெளியிடுதல். சந்திரசேகரர் அதர்வண வேதத்தை மீண்டும் உயிர்ப்பித்தார் என்று சொல்கிறார்கள். இதை சங்கர மடம், ஏஷியாட்டிக் சொசைடி, சரஸ்வதி மஹால் நூலகம் மாதிரி யாராவதுதான் செய்ய முடியும். வேதம் புனிதமானதா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அது ஒரு முக்கியமான சரித்திர ஆவணம்! அட அதர்வண வேதத்தை விடுங்கள், மனு ஸ்மிருதியையாவது ஒரு செம்பதிப்பு வெளியிட வேண்டாமா? அப்போதுதானே பிராமணர்களை திட்ட வசதியாக இருக்கும்? 🙂

இதெல்லாம் போனால் வராது, பொழுது போனால் கிடைக்காது. இன்னும் ஆதீனங்களில் எத்தனை ஓலைச்சுவடிகள் மக்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியாது. எத்தனை உ.வே.சா., தாமோதரம் பிள்ளை வருவார்கள்? எத்தனை சித்தர் பாடலும், காளமேகம் கவிதைகளும் எறும்புக்கு உணவாக்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. சிருங்கேரி மடமும் பூரி மடமும் ஏன் இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை? அவர்களுக்கே ஸ்காலர்ஷிப் குறைவோ என்னவோ. எனக்கு சந்திரசேகரர் ஸ்காலர் என்று தோன்றுகிறது. ஜெயேந்திரர் அப்படிப்பட்டவர் இல்லை என்று நினைக்கிறேன்.

கடைசியாக ஆன்மிகம்; எல்லா மடமும் பக்தியை பரப்ப ஏற்படுத்தப்பட்டவைதான். (அதுதான் தியரி). எனக்கு பக்தி என்றால் என்ன என்று சரியாக சொல்ல முடியவில்லை. முருகா முருகா என்று உருகுவதுதான் பக்தி என்றால் நான் நிச்சயமாக பக்திமான் இல்லை. எனக்கு அப்படி உருகுபவர் ஒருவரைத்தான் தெரியும். ஆனால் மனம் குழம்பும் வேளைகளில் கோவிலுக்கு போனால் எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது. உளைச்சல் குறைகிறது. எனக்கு தெரிந்த நிறைய பேருக்கு அப்படித்தான். இது வளர்ந்த விதம் மட்டுமே என்று நீங்கள் சொல்லலாம். (என் குழந்தைகளுக்கு கோவிலுக்கு போவதில் பெரிய விருப்பம் இல்லை, அவர்கள் வளரும் விதம் நான் வளர்ந்த விதத்தை விட மிகவும் வேறானது.) இருக்கலாம், அதனால் என்ன? கொஞ்சம் உற்சாகம் பிறக்கிறது, யாருக்கும் கெடுதல் இல்லை, இதில் என்ன பிரச்சினை? அப்படி மடத்துக்கு போவது – குறிப்பாக காஞ்சி மடத்துக்கு சந்திரசேகரர் இருந்தபோது போனது – பலருக்கும், குறிப்பாக ஐயர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்றால் மடாதிபதி சிறந்த ஆன்மீகவாதி என்று புகழ் பெற்றிருக்க வேண்டும். விவேகானந்தர் மாதிரி, நித்ய சைதன்ய யதி மாதிரி, அய்யாவழி மாதிரி, மேல்மருவத்தூர் சாமி மாதிரி, நாராயண குரு மாதிரி. இது கஷ்டம்தான். ஆனால் பழைய மடங்களுக்கு உள்ள பாரம்பரியத்தை, காலத்துக்கு ஏற்றார்போல மாறுதல்களோடு காப்பற்றுவது எந்த நல்ல மானேஜருக்கும் செய்யக் கூடிய காரியம்தான். அதை செய்துகொண்டே இந்த லௌகீக விஷயங்களில் ஆர்வம் காட்டினால் மடங்கள் சமுதாயத்தில் நல்ல பங்காற்ற முடியும்.

ராமகிருஷ்ணா மிஷன், அய்யாவழி போன்றவை இந்த பாதையில்தான் போக முயற்சி செய்கின்றன என்று நான் நினைக்கிறேன். பெருவாரியான மடங்கள், ஆதீனங்கள் தேங்கிக் கிடக்கின்றன என்று எனக்கு தோன்றுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சி சங்கர மடம்
அதர்வ வேதம் பற்றி சில கேள்விகள், அதர்வ வேதம் பற்றி மறைந்த சந்திரசேகரேந்திர சுவாமிகள்

Advertisements