புதுப்பிக்கப்பட்டது. புதிய வரிகள் நீல நிறத்தில்.

 1. வாதாபி ஜீர்னோ பவ என்று வாதாபியை ஜீரணித்தவர் பிராமண அகத்தியர். அப்புறம் எப்போது, ஏன், பிராமணர்கள் வெஜிடேரியன்களாக மாறினார்கள்?
  ஒரு காலத்தில் பிராமணர்கள் மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்த, ஜைன தாக்கத்தால் வெஜிடேரியனிசம் பரவியதாகவும் வித்தகனும் மணியும் சொல்கிறார்கள். யாக்ஞவல்க்யர் மாமிசம் சாப்பிட்டதைப் பற்றி எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறது.
 2. தசாவதாரம், தசாவதாரம் என்கிறார்கள். அப்புறம் இந்த ஹயக்ரீவர், மோகினி, பிருது, ரிஷப தேவர், புத்தர் எல்லாம் என்ன கணக்கு? அதுவும் மோகினி கூர்ம அவதாரக் கதையிலேயே குறிப்பிடப் படுகிறாள்! ஆனாலும் தசாவதாரம்தான், ஏன்?
  மணியும் வித்தகனும் புத்த அவதாரம் புத்த மதத்தை ஹிந்து மதத்துக்குள் இழுத்துக் கொள்ள நடந்த முயற்சி என்கிறார்கள். ரிஷப தேவரும் (முதல் தீர்த்தங்கரர்) ஜைன மதத்தை இழுக்க நடந்த முயற்சி என்கிறார்கள். பொருந்துகிறது. ஆனால் மோகினி, ஹயக்ரீவர் எல்லாம் எந்த மதத்தையும் இழுக்க நடந்த முயற்சியாக இருக்க முடியாது இல்லையா? அதுவும் கூர்மாவதாரத்தில் விவரிக்கப்படும் மோகினி அவதாரத்தை எப்படி கணக்கில் எடுக்கவில்லை?
  ராகவன் 18 அவதாரங்கள் என்கிறார், நர நாராயணர் இரண்டு என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியும் ஒன்று வரவில்லை.
 3. சுக்ராச்சாரியார் அசுரர்களில் பர்மனென்ட் குல குரு. நவகிரகங்களில் ஒருவர். அவருக்கு மட்டும் அமிர்தம் எங்கிருந்து கிடைத்தது? அசுரர்கள் எல்லாம் சாகிறார்கள் என்றால் அவருக்கு மட்டும் ஏன் சாவே இல்லை?
  சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர் ஆயிற்றே என்கிறார் ராகவன். அது தெரிந்தால் இறந்தவரை உயிர்ப்பிக்கலாம்தான். ஆனால் தான் இறந்துவிட்டால் தன்னைத் தானே பிழைக்க வைக்க முடியாது. அதனால்தான் கசனுக்கு அவர் மந்திரத்தை சொல்லித் தரும்படி ஆயிற்று. அசுரர்களை விட்டு அவர் மட்டும் அமிர்தம் குடித்திருக்கிறார்.
  மணி நோவா, வெள்ளம் பற்றி என்னவோ சொல்கிறார், என்ன என்று புரியவில்லை.
 4. கைகேயி இரண்டு வரம் கேட்கிறாள். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள என்று ஒன்று. தாழிரும் சடைகள் தாங்கி ராமன் காட்டுக்கு 14 வருஷம் போக வேண்டும் என்று ஒன்று. அது என்ன 14 வருஷம்? ஒரேயடியாக போக சொல்ல வேண்டியதுதானே? அதுதானே பரதனுக்கு safety?
  அந்தக் காலத்தில் 14 வருஷம் என்றால் ஒரு phase முடிந்துவிட்டது என்று ராகவனும் மணியும் சொல்கிறார்கள். அந்த மாதிரி ஏதாவது இருக்க வேண்டும்.
 5. வால்மீகி வேடர். முதலில் வழிப்பறி செய்துகொண்டிருந்தார். அவர் தவம் செய்ய முடிகிறது, ரிஷி ஆக முடிகிறது, ஒரு குழந்தையையே (குசன்) தன தவ பலத்தால் உருவாக்க முடிகிறது. உத்தர காண்டத்தில் அவர் காரக்டருக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் ராமன் சம்பூகன் என்ற சூத்திரனை தவம் செய்ததற்காக கொன்றானாம். வால்மீகியை மட்டும் ஏன் விட்டுவிட்டான்? சம்பூகன் பிற்காலத்திய இடைச்செருகலா? (குரங்கு ஹனுமான் கூட வேதம், சாஸ்திரம் தெரிந்தவர். ஒரு வேளை பிராமணக் குரங்கோ?) குகனோடும் ஐவரான ராமன், குரங்கு சுக்ரீவனோடு அறுவரான ராமன், அரக்கன் விபீஷனனோடு எழுவரான ராமன், ஒரு வண்ணான் சொன்னதற்காக மனைவியை கைவிட்ட ராமன், திடிரென்று தன பிரஜை ஒருவனை கொன்றே விடுகிறான்!
  மணி சம்பூகனால் ராமனுக்கு லாபமில்லை, அதனால்தான் சம்பூகனை மட்டும் கொன்றான் என்று சொல்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வண்ணானால் என்ன லாபம்? சூத்திரர்கள் ஆரிய சமூகத்தில் ஒரு அங்கம். வேடர்கள் (குகன், வால்மீகி மாதிரி) சமூகத்தில் fringe -இல்தான் இருக்கிறார்கள். ஏகலைவன், மச்சகந்தி போன்றவர்களை இங்கே நினைத்துப் பார்க்கலாம். குரங்குகள் சமூகத்தில் பங்கே இல்லாதவர்கள். அவர்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் – இல்லை வரவேற்கும் ராமன், தன பிரஜையை மட்டும் கொன்றான் என்பது ராமனின் காரக்டருக்கு முரணாகத்தான் இருக்கிறது. இது பிற்சேர்க்கையாகத்தான் இருக்க வேண்டும். ராகவன், உத்தர காண்டம் கம்பன் விட்டுவிட்டது. சம்பூகன் கதை வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள்.
  மணி, வியாசர் பிறந்த உடனே தவம் செய்ய போய்விடுகிறார். வழிப்பறி எல்லாம் வால்மீகிதான்.
 6. பரசுராமர் க்ஷத்ரிய குல விரோதி. கர்ணனை க்ஷதிர்யன் என்று இனம் கண்டு சபிக்கிறார். பிறகு பீஷ்மருக்கு மட்டும் எப்படி ஆசிரியராக ஒத்துக் கொண்டார்?
  ராகவன் கர்ணன் பொய் சொன்னதால் சபிக்கப்பட்டான் என்கிறார். கர்ணன் பொய் சொன்னதற்கு காரணம் என்ன? பரசுராமன் பிராமணர்களுக்கு (பிராமணர்களுக்கு வில் வித்தை எதற்கு என்று அப்புறமாக ரூம் போட்டு யோசிப்போம்) மட்டும்தான் சொல்லித் தருவேன் என்று ஒரு நியதி வைத்துக் கொண்டிருந்தார். (துரோணருக்கும் அவர்தான் குரு என்று நினைவு) பீஷ்மருக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கொடுத்தார்?
  மணி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
 7. அஸ்வத்தாமா, மகாபலி, வேத வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஏழு பேரும் சிரஞ்சீவிகள். (இந்த ஜாம்பவான், மார்க்கண்டேயன் எல்லாம் ஏன் லிஸ்டில் இல்லை என்று தெரியவில்லை). அஸ்வத்தாமாவுக்கு சாவு இல்லை என்பது சாபம். மார்க்கண்டேயனுக்கு வரம். மிச்ச பேருக்கு எப்படி?
 8. மனு நீதி சோழன் கன்றுக்குட்டியின் உயிருக்கு பதில் தன மகனின் உயிரைக் கொடுத்தானாம். ஒரு மிருகத்தை மனிதனுக்கு சமமாக நடத்துவதுதான் மனுநீதி என்றால் மனு ஸ்மிருதியில் உள்ள ஜாதி கோட்பாடு எங்கிருந்து வந்தது?
  மணி ஆர்வி என்கிறார், தி.மு.க. என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
  மனு அந்தக் காலத்தில் ஒரு legendary lawgiver ஆகவே இருந்திருக்க வேண்டும். யாராவது நல்ல நீதிமான் என்றால் பாருடா மனு மாதிரி நீதி வழங்குகிறான் என்று பேசி இருக்கலாம். மனு சட்டத்தை தொகுத்தார் என்பது அவர் தொகுத்த சட்டம் என்ன என்பதை விட அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம். காந்தியம் என்ன என்று தெரியாமலே காந்தியை மதிப்பவர்கள் மாதிரி…
 9. ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடிய அவ்வையார் எப்படி குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுகிறார்? வேறு வேறு அவ்வையாரா?
  மணி இரட்டை நிலை என்று சுலபமாக முடித்துவிட்டார். எல்லாவற்றுக்கும் இதையே சொல்லிவிடலாமே? ராமன் ஏன் வால்மீகியை விட்டுவிட்டான்? இரட்டை நிலை. பரசுராமர் ஏன் பீஷ்மருக்கு குருவானார்? இரட்டை நிலை. கைகேயி ராமனை ஏன் 14 வருஷம் மட்டும் காட்டுக்கு அனுப்பினாள்? இரட்டை நிலை. விஷயம் முடிந்துவிட்டது.
  குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பாடியவர் வேறு அவ்வையார் என்று தோன்றுகிறது.
  விக்கி அவ்வையார் என்று மூன்று பேர் இருந்ததாக சொல்கிறது. அபிதான சிந்தாமணியும் அப்படித்தான் சொல்கிறதாம்.
 10. தேசிங்கு என்று ஒரு பேரா? சரி ஏதோ ஒரு வடநாட்டு சிங் இங்கே வந்து நம் மக்கள் வாயில் பேர் நுழையாததால் தேசிங்காக மாறிவிட்டார் போல. அவருடைய நிஜமான பேர் என்ன? எனக்கு தோன்றுவது தேஜ் சிங். யாருக்காவது தெரியுமா?
  விக்கிபீடியாவில் தேஜ் சிங் என்று போட்டிருக்கிறது. செஞ்சி பற்றிய குறிப்பைப் பாருங்கள்.
 11. குரோம்பேட்டை புரிகிறது. வண்ணாரப்பேட்டை புரிகிறது. ராயப்பேட்டை புரிகிறது. அது என்ன சைதாப்பேட்டை?
  மணி சைதாப்பேட்டை என்பது சையதுகான்பேட்டை என்பதின் திரிபு என்று கூறுகிறார். விக்கி குறிப்பு இது சையது ஷா என்பவரின் பேரால் அழைக்கப்பட்டது என்று சொல்கிறது. மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் அந்த காலத்தில் ஜெயராஜ் தியேட்டர் இருந்த இடத்தை தாண்டினால் வரும் அடுத்த ஊர் ஜாஃபார்கான்பேட்டை.

தொடர்புடைய பதிவுகள்:
அவ்வையார் பற்றி விக்கி
செஞ்சிக் கோட்டை பற்றி விக்கி
சைதாப்பேட்டை பற்றி விக்கி

Advertisements