இணையத்தில் அதிகமாக திட்டு வாங்குபவர்களில் காஞ்சி மடத்தின் இன்றைய தலைவரான ஜயேந்திர சரஸ்வதியும் ஒருவர். நான் ஒரு அய்யர் குடும்பத்தில் பிறந்தவன். அய்யர்களில் பலரும் காஞ்சி சங்கர மடத்தை மதிப்பவர்கள். அதனால் எனக்கு ஒரு insider perspective இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த மடம் கிடம் ஆகியவற்றில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. நான் எழுதுவது என் சொந்த அனுபவம், perspective. இதை படித்தால் உங்கள் மனம் புண்படலாம். என் அம்மா அப்பா படித்தால் ஏண்டா இப்படி எழுதினே என்று கோபப்படலாம். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை, என் கருத்து எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். காஞ்சி மடத்தை பற்றிய ஐதீகங்களையும் ஆதி சங்கரர் ஐதீகங்களையும் ஓரளவு படித்திருக்கிறேன். மடத்திலேயே சில புத்தகங்கள் கிடைத்தன என்று நினைவு. காஞ்சி மடம் என்பது கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்தது, பிறகு காஞ்சிபுரத்தில் தனி மடமாக மாறிவிட்டது என்பது காஞ்சி மட ஐதீகங்களிலேயே இலைமறைகாயாக தெரிகிறது. ஆனால் official காஞ்சி மடத்து ஐதீகமோ, இது ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம் என்கிறது. ஆதி சங்கரர் முதல் மடாதிபதியாக இருந்ததாகவும் சுரேஸ்வரர் இரண்டாவாது மடாதிபதி என்றும் official காஞ்சி மடாதிபதிகள் லிஸ்டில் இருக்கிறது. சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தை நிறுவியர் என்பது எல்லா சங்கர மடங்களும், ஆதி சங்கரர் ஐதீகங்களும் தெளிவாக சொல்லும் விஷயம். ஒரு பொய்யின் மீது ஒரு ஆன்மீக மடம் எழுப்பப்பட்டிருப்பது எனக்கு சிறு வயதிலேயே பெரிய உறுத்தலாக இருந்தது. கிளை மடமாக இருந்தோம், இப்போது தனியாக பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் மடத்தின் மகிமை குறைந்துவிடுமா? அப்படி குறைந்துவிடுமென்றால் மடத்துக்கு உண்மையிலேயே ஏதாவது மகிமை இருக்கிறதா?

காஞ்சி மடத்தை பலரும் மதிக்க முக்கிய காரணம் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள்தான். காந்தி வந்து அவரை சந்தித்ததை, அவர் யாரோ ஒரு வெள்ளைக்காரருக்கு திருவண்ணாமலை ரமணரை கை காட்டியதை, சிவாஜி திருவருட்செல்வரில் அப்பருக்கு அவரை ரோல் மாடலாக வைத்துக் கொண்டதை, ஜெயகாந்தன் எழுதிய ஜய ஜய சங்கர சீரிஸ் புத்தகங்கள எல்லாம் பெருமையாக பேசுவார்கள். அவரை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். என் சிறு வயதில் காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் உள்ள கலவையோ என்னவோ ஒரு கிராமத்தில் இருந்தார் என்று நினைவு. அங்கே ஒரு முறை போயிருக்கிறேன். பெரிய இடம், அவரைப் பார்க்க இரண்டு மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் அங்கே சும்மா சுற்றி நடந்து வந்து பொழுது போய்விட்டது. அவர் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவார், அதுவும் உப்பு இல்லாமல் வாழைப்பூவும் சாதமும் கலந்து ஒரு கவளம் இரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொன்னார்கள். அட சுகமாக வாழும் சந்நியாசி இல்லை போலிருக்கிறதே என்று தோன்றியது.

அவர் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு 13-14 வயது இருக்கலாம். என்னுடைய விதவை உறவினர் ஒருவர் அவரை பார்க்க கிளம்பவில்லை. ஏனென்றால் அவர் தலை மழிக்காத விதவையை பார்த்தால் அன்று சாப்பிட மாட்டாராம். அவர் சாப்பிடும் ஒரு கவளம் இரு கவளத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று அவர் வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார். விதவை என்றால் தலையை மழித்துக் கொள்ளத்தான் வேண்டுமா, இது என்னடா கொடுமை என்றுதான் தோன்றியது. அதுவும் அந்த வயதுதான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வயது, தனக்குத்தான் எல்லாம் தெரியும், இந்த பெரிசுகள் எல்லாம் நாட்டைக் கெடுக்கின்றன என்று ஒரு நினைப்பு இருக்கும் வயது. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அப்புறம் அவருக்கு வயதாக வயதாக senile ஆகிவிட்டார், அதை யாரும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள் என்று தோன்றியது. தீபாவளி மலரில் அவர் படம் போடுவார்கள். ஒரு தீபாவளி மலரில் அவர் குத்துக்காலிட்டு அடி தொடை தெரிய உட்கார்ந்திருந்தார். தீபாவளியும் அதுவுமாக திவ்ய தரிசனம். வெளியிலும் வரவே மாட்டாராம். வெளியில் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது என்று அவரை உள்ளேயே வைத்திருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது. அவர் மறைந்ததும் அவரை கடவுள் என்று கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆழ்வார் என்று ஒரு காரக்டர் வருவார். அவர் ஒரு icon, senile ஆனாலும் அவரை வைத்து ஷோ காட்டுவார்கள். அந்த இடத்தை படித்தபோது இவர் ஞாபகம் வந்தது.

உண்மையில் பல அய்யர்கள் அவரை கொண்டாடுவது ஜெயேந்திரர் மீது உள்ள அதிருப்தியால்தான் என்று நினைக்கிறேன். ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய போதே இந்த அதிருப்தி தொடங்கிவிட்டது. அரசியல் தலையீடு, மடத்தை புது வழிகளில் – மற்ற ஜாதியினரை போய் பார்ப்பது, கல்வி, சங்கரா யூனிவர்சிடி எல்லாம் இந்த அதிருப்தியை அதிகரித்தது. அப்புறம் கொலை கேஸ், பெண்கள் உறவு என்றெல்லாம் நியூஸ் வர ஆரம்பித்ததும் எல்லாருக்கும் அருவருப்பு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயேந்திரர் சேரிகளுக்கு போனதும், காலேஜ் திறந்ததும், மடத்தின் சொத்துகளை வைத்து, சமூகத்துக்கு ஏதோ செய்ய நினைத்ததும் எனக்கு பிடித்திருந்தது. ஏதோ கொஞ்சமாவது உருப்படியாக ஏதோ செய்கிறார் என்று தோன்றியது. இவரது முயற்சிகளுக்கு பழமையில் ஊறிய பெரியவர் முட்டுக்கட்டை போட்டிருப்பார், அதனால்தான் தாங்க முடியாமல் ஓடியிருப்பார் என்று தோன்றியது. ஆனால் அது அரசியலில் இலைமறைகாயாக தலையிடுதல், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவு என்று மாற ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால் கொலை கேஸ், பெண்கள் என்று முடிந்திருக்கிறது.

ஜெயேந்திரர் மாசு மறுவற்ற உத்தமர் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நெருப்பிலாமல் புகையாது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு மடாதிபதி, அதுவும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஒரு மடத்தின் அதிபதி என்று சொல்லிக் கொள்பவர் கொலை எல்லாம் செய்ய வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஜெயலலிதாவுடன் ஏதோ தகராறு, அதனால்தான் அவரை பழி வாங்கவே ஜெ இப்படி எல்லாம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஜெ ஒருவரை ஒழிக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். கைது செய்த போலீஸ் அதிகாரி பற்றியும் சில நெகடிவ் செய்திகள் வந்தது மங்கலாக நினைவிருக்கிறது. கலைஞர் ஆட்சியிலும் கேஸ் விரைந்து நடத்த முயற்சி எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. ஆனால் ஜெயேந்திரர் மேல் தப்பே இல்லை என்றாலும், இது காழ்ப்பு உணர்ச்சியால் மட்டுமே போடப்பட்ட கேஸ் என்றாலும் ஜெயேந்திரர் கேசை கிடு கிடு என்று முடிக்க முயற்சி செய்ய வேண்டாமா? அப்படி அவரும் முயற்சி செய்வது போல் தெரியவில்லை. அப்படி அவர் முயற்சி செய்யாததுதான் அவர் மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

Ceaser’s wife must be above suspicion என்று சொல்வார்கள். கேஸ் முடியும் வரைக்கும் என்னை நானே சஸ்பெண்ட பண்ணிக் கொள்கிறேன், மடத்தின் லௌகீக விஷயங்களை ஒரு கமிட்டி கவனிக்கும், ஆன்மீக விஷயங்களை கவனிக்க இன்னொரு வாரிசை தேர்ந்தெடுக்கிறேன், கேஸ் முடிந்த பிறகுதான் நான் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று சொன்னால், அது அவருக்கும் கௌரவம். அப்படி அவர் செய்ய விரும்புவதாகவே தெரியவில்லை. எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் கேசை இழுத்தடிப்போம் என்றுதான் முனைவதாக தோன்றுகிறது. இது அவருக்கும் இழுக்கு, சங்கர மடம் என்ற அமைப்புக்கும் இழுக்கு.

இன்றைக்கும் அய்யர்கள் காஞ்சி மடத்துக்கு போகத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு காஞ்சி மடம் ஒரு ஆன்மீக ஸ்தலம் மாதிரி. குல தெய்வம் கோவிலில் பூசாரி சரி இல்லை என்றாலும் கடா வெட்டி பூசை செய்வது நிறுத்தாமல் நடப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் எல்லாருக்கும் ஒரு தயக்கம், இங்கே போகிறோமே என்று கொஞ்சம் கவலை எல்லாம் இருக்கிறது. அது எல்லாம் மூத்தவரை கடவுளாகவே பாவிக்கும் நிலையாக உருவாகி இருக்கிறது.

உண்மையில் நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. இந்த கால கட்டத்தில் மடங்கள் போன்ற மத அமைப்புகள் (முஸ்லிம், கிருஸ்துவ, சீக்கிய அமைப்புகளுக்கு பேர் தெரியவில்லை) தேவைதானா? ஒரு மடாதிபதியின் கடமைகள் என்ன? அதை பெரியவரும் ஜயேந்திரரும் செய்தார்களா? பெரியவர் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவரா? ஒரு நல்ல மடத்தின், மடாதிபதியின் இலக்கணம் என்ன? இன்றைய கால கட்டத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும்? Does a mutt have any relevance today? அதை பற்றி இன்னொரு பதிவில்.

இன்றைய சமுதாயத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காஞ்சி மடாதிபதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? முடிந்தால் எழுதுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியது இல்லை

Advertisements