வினவு தளத்தின் மீது கொஞ்ச நாட்களாகவே மனக்கசப்பு. அந்த தளத்தை படிப்பதும், அங்கே என் கருத்துகளை பதிவு செய்வது நேர விரயம் என்ற முடிவுக்கு வந்து இரண்டு மூன்று வாரம் ஆகிவிட்டது. இன்று காலைதான் என் ஆர்எஸ்எஸ் ரீடரிலிருந்து வினவு தளத்தை இன்னும் நீக்கவில்லை என்று நினைவு வந்தது. அதை நீக்கப் போனபோது அவர்கள் தினமலரைப் பற்றி எழுதி இருந்த பதிவு கண்ணில் பட்டது. தினமலர் எப்படி கதைகள், “ஆன்மீக” கருத்துகள் மூலம் சாதீயத்தை பரப்புகிறது, அதனால் எல்லாரும் தினமலரைப் புறக்கணியுங்கள் என்பதுதான் பதிவின் கரு. அதிலிருந்து ஒரு பகுதி. // நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். //

வினவு தளம் எனக்கு கசந்து போனதற்கு டாக்டர் ருத்ரன் என் கருத்துகளுக்கு என் ஜெநோடைப்பே என்று சொன்னதும், அதற்கு அங்கே விளக்கம் என்ற பேரில் செய்யப்படும் விதண்டாவாதமும், சப்பைக்கட்டும்தான் காரணம். டாக்டர் ருத்ரன் பிறகு ஜெநோடைப் என்றால் வளர்ப்பு முறை என்று ஜல்லி அடித்தார். வினவு குழுவினரும் வளரும் சூழ்நிலையில் உள்ள விழுமியங்களே உங்கள் கருத்தை தீர்மானிக்கிறது என்பதைத்தான் டாக்டர் ருத்ரன் ஜெநோடைப் என்று சொல்கிறார், இந்த “எளிய உண்மையை” புரிந்து கொள்ளுங்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். இன்று வரை பிறப்பே – அதாவது ஜெநோடைப்பே – என் கருத்துகளுக்கு காரணம் என்று சொன்ன டாக்டர் ருத்ரனை இது வரை யாரும் அங்கே விமரிச்த்ததில்லை. டாக்டர் ருத்ரன் சொன்னது தவறு இது மனு தர்மம் என்று யாருக்கும் அங்கே தோன்றியதில்லை.

டாக்டர் ருத்ரன் என் பிறப்பே என் கருத்துகளுக்கு காரணம் என்று சொல்லலாம். பிறகு பிறப்பு என்றால் பிறப்பு இல்லை, அது வளர்ப்பு, பார்ப்பனர்கள் அவர்கள் வளர்ப்பினால் ஜாதி பார்க்கிறார்கள் என்று விளக்கலாம். இந்த எளிய உண்மைதான் ஜெநோடைப் என்று வினவு விதண்டாவாதம் செய்யலாம். இது சரியா என்று பல முறை கேட்ட பின்னும் அது கிடக்கட்டும், ஜாதி கொடுமைகளைப் பற்றி பேசுவோம் என்று அதை புறம் தள்ளலாம். ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் “பார்ப்பனீய” அதவாது “ஜாதீய” விழுமியங்களுடந்தான் வளரும் என்று சொல்லலாம். ஆனால் தினமலரில் எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணம் என்று எழுதினால் அது தவறு, அதற்கு ஒரு பதிவு, அதை புறம் தள்ள வேண்டிய அவசியம் இல்லை. வினவு குழுவினருக்கு உண்மையில் என்ன பிரச்சினை? பார்ப்பனர்கள் மட்டும் என்று சொல்லாமல் “எந்த ஒரு மனிதனும்” என்று சொன்னதா? பார்ப்பனர்கள் (மட்டும்) தான் பிறந்த குலத்தினால் ஜாதி பார்ப்பார்கள் என்று தினமலர் சொல்லி இருந்தால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்!

மாற்று கருத்து உள்ளவர்களுடன் விவாதிப்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. வினவு தளத்தில் பல முறை விவாதித்திருக்கிறேன். அங்கே தனிப்பட்ட முறையில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை என்னை தாக்கி இருக்கிறார்கள். நான் சாதாரணமாக இந்த தாக்குதல்களை பொருட்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த தாக்குதல்களுக்கு பின்னால் ஏதாவது கருத்து இருந்தால் அந்த கருத்தோடு மட்டுமே விவாதித்திருக்கிறேன், குறைந்த பட்சம் விவாதிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இப்படி இரட்டை நிலை எடுப்பவர்களிடம், இது இரட்டை நிலை என்று கூட புரியாதவர்களிடம் அல்லது புரியாதது போல நடிப்பவர்களிடம் என்ன எழவை விவாதிப்பது?

வினவு குழுவினருக்கும் அங்கே ஜல்லி அடிக்கும் கேள்விக்குறி மாதிரி பலருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் – ஊரை ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டுமானால் சரி செய்யுங்கள். அது உங்கள் இஷ்டம், உரிமை. ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

Advertisements