எனக்கு பிடித்த இந்திய non-fiction எழுத்தாளர்களில் ராமச்சந்திர குஹாவுக்கு பெரிய இடம் உண்டு. அவரது “A Corner of the Foreign Field” கிரிக்கெட் பற்றி எழுதப்பட்ட மிக சிறந்த புத்தகங்களில் ஒன்று.

ஜெயமோகன் சமீபத்தில் இந்திய வரலாறு பற்றி படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று “காந்திக்கு பிந்திய இந்தியா” புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார். ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைத்தது. இப்போது கிழக்கு பதிப்பகம் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறதாம்.

புத்தகம் மிக நன்றாக இருந்தது. சுலபமான நடையில் சுவாரசியமாக எழுதப்பட்ட புத்தகம். காஷ்மீர், இந்திய-சீன எல்லை தகராறு, மொழிவாரி மாநில சீரமைப்பு போன்ற பல விஷயங்களை பற்றி அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. பல (எனக்கு) தெரியாத விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறார். உதாரணமாக ஆந்திர மாநிலம் அமையவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து இறந்த பொட்டி ஸ்ரீராமுலு பற்றி – ஐம்பது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்த பிறகுதான் ராஜாஜி அவரை அணுக முயற்சி செய்திருக்கிறார். ஆனானப்பட்ட ராஜாஜியே கோட்டை விட்ட விஷயம் இது. நேரு இறப்பதற்கு முன் ராஜாஜி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன் வைத்த ஒரு வழி மிக தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது – ஜம்மு, லடாக் இந்தியாவுக்கு; “ஆசாத் காஷ்மீர்” பாகிஸ்தானுக்கு; காஷ்மீர் பள்ளத்தாக்கு “சுதந்திர” நாடு, ஆனால் வெளிநாட்டு உறவும், ராணுவமும் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கூட்டாக பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அன்டோரா (விகி குறிப்பு) என்று ஒரு இத்துனூண்டு நாடு இப்படித்தான் ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ் நடுவில் இருக்கிறதாம். நேரு இறந்ததால் இதை மறந்துவிட்டார்கள்.

புத்தகத்தில் எனக்கு குறையாக படுவது டெல்லியின் கோணத்திலிருந்தே இந்திய வரலாற்றை பார்ப்பதுதான். இருந்தாலும் நல்ல புத்தகம், படிக்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனின் “வரலாற்றை வாசிக்க” பதிவு – முக்கியமான இந்திய வரலாற்று நூல்களை பற்றி.
ஜெயமோகனின் முக்கிய இந்திய வரலாற்று நூல் லிஸ்டில் இன்னொன்று – ராஜேந்திர பிரசாத்தின் At the Feet of Mahatma Gandhi
2009 பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் (குஹாவுக்கு பத்மபூஷன்)