தமிழ் சிறுகதைகளை பற்றி இங்கே மற்றும் இங்கே எழுதி இருந்தேன். இப்போது பிற இந்திய மொழிகள்.

தமிழுக்கு புதுமைப்பித்தன் என்றால் ஹிந்திக்கு பிரேம்சந்த். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். (இஸ்திஃபா (Resignation) கதையை படியுங்கள்) ஆனால் புதுமைப்பித்தன் போல நக்கல் அடிக்கமாட்டார். அவர் எழுதிய பல கதைகள் எனக்கு தேறும். நான் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில்தான். ஹிந்தியில் நான் எழுத்துக் கூட்டி படிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும். மொழிபெயர்ப்பில் கதையின் பிளாட் சரியாக வரலாம், ஆனால் பல nuances விட்டுப்போகும். அப்படி இருந்தும் அவரது கதைகளின் பிரமாதமான charm எனக்கும் புரிந்தது.

வழக்கம் போல எனக்கு கதை தலைப்புக்கள் நினைவிருப்பதும் இல்லை. ஆனால் மனைவியின் உடலை எரிக்க கிடைத்த பிணத்தில் குடிக்கும் மகனும் அப்பனும், வறுமையினால் விற்கப்படும் இரண்டு மாடுகள் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வரும் கதை, கடமையை செய்வதில் உறுதியாக நின்று வேலையை இழக்கும் சால்ட் இன்ஸ்பெக்டர், தனக்கே சாப்பாடு இல்லாவிட்டாலும் திண்ணையில் வந்து குந்தும் சாமியாருக்கு சாப்பாடு போடும் கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய பிரேம்சந்த் சிறுகதைகள் காப்பி எங்கே என்று தெரியவில்லை. அது கிடைக்கும்போது இவரைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

பிரேம்சந்த் சிம்பிளாக எழுதக் கூடியவர். அழகிரிசாமி, கி.ரா., பூமணி போன்றவர்கள் இவர் மாதிரி கதை எழுதுபவர்கள். அவருடைய கதையில் எல்லாம் வெட்ட வெளிச்சம். சிந்தனையை தூண்டும் தன்மை, சொல்லாமல் சொல்லும் தன்மை எதுவும் கிடையாது. அதே நேரத்தில் உபதேசம் எல்லாம் செய்யமாட்டார். அவர் கதைகள் வாழ்க்கையை, குறிப்பாக கிராம வாழ்க்கையை, அங்கங்கே ஃபோட்டோ பிடித்தது மாதிரி இருக்கும்.

அவருடைய கதைகள் பரவலாக காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன. வேறு பல கதைகளுக்கு தூண்டுதலாக அமைந்திருக்கின்றன. கல்கி அவரது சால்ட் இன்ஸ்பெக்டர் கதையை புது ஓவர்சீயர் என்று அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார். தங்கர் பச்சானின் வெள்ளை மாடு கதை அவரது இரண்டு எருமைகளின் கதையை நினைவுபடுத்துகிறது. (காப்பி இல்லை, inspiration ஆக இருக்கலாம்.) அவரது கதைகள் சாகாது.

அடுத்தபடி நினைவு வருபவர் மணிக் பந்தோபாத்யாய். வங்க மொழி எழுத்தாளர். மிக powerful கதைகள். அவர் கதைகளில் வருபவர்கள் ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள். Life courses through the characters in his stories. அவரது Primeaval என்ற கதை அவசியம் படிக்க வேண்டியது. ஒரு திருடன் திருடுகிறான், மாட்டிக் கொள்கிறான், தப்பித்து ஓடுகிறான், ஒரு கை போய்விடுகிறது, ஒரு பிச்சைக்காரியை சேர்த்துக் கொள்கிறான். இதெல்லாம் ஒரு கதையா? படித்தால்தான் புரியும். லிங்க் கொடுத்திருக்கிறேன், கட்டாயமாக படியுங்கள்.

இஸ்மத் சுக்டையின் உருது மொழி லிஹாஃப் என்ற கதை மிக அபாரமானது. பாரம்பரிய முஸ்லிம் குடும்பம். கணவனுக்கு பையன்கள்தான் வேண்டும். மனைவி என்ன செய்வாள்? இந்த கதையை எழுதியதற்கு அவர் மேல் ஆபாச கதை என்று கேஸ் போட்டிருக்கிறார்கள். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ஆர். கே. நாராயணின் A Horse and Two Goats என்ற கதையை படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது சில கதைகளில் நல்ல craft தெரிகிறது.

ஃபநீஸ்வர்நாத் ரேனு மிக அருமையான கதைகள் எழுதுபவர். அவர் எழுதுவது ஹிந்தியின் மிதிலா dialect. ரேணுவின் தீஸ்ரி கசம் கதை அதே பேரில் திரைப்படமாகவும் வந்தது. வேறு கதைகள் இப்போது ஞாபகம் வரவில்லை. என்னிடம் இருக்கும் புத்தகத்தை தேடித் பிடிக்க வேண்டும். சமீபத்தில் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவருக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் கலைத்துப்போட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை, ஹேமா கஷ்டப்பட்டு என்னை திட்டாமல் பொறுத்துக் கொண்டாள்.

சாதத் ஹாசன் மாண்டோ சிலாகிக்கப்படும் இன்னொரு எழுத்தாளர். உருது. அவரது டோபா டேக் சிங் பெரிதும் புகழப்படுகிறது. என் கண்ணில் சுமார்தான். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ரவீந்த்ரநாத் தாகூர் கவிதை எழுதி நோபல் பரிசு எல்லாம் வாங்கினார். அவர் பல நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு இப்போது ஞாபகம் வருவது காபூலிவாலா(ஹிந்தி படமாகவும் வந்தது), போஸ்ட்மாஸ்டர் (சத்யஜித் ரேயின் தோ கன்யா படத்தின் முதல் பகுதி), Hungry Stones என்ற கதைகள்தான். படிக்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. Hungry Stones கதை ஒரு gimmick என்றாலும் நல்ல craft உள்ள கதை. இவை கூடன்பர்க் தளத்தில் கிடைக்கும்.

அமேரிக்கா வந்த பிறகு – ஒரு 15-20 வருஷங்களாக – தமிழ் தவிர்த்த வேறு இந்திய மொழிப் புத்தகங்களை படிப்பது அற்றே போய்விட்டது. தமிழ் தெரியாத நண்பர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்கிக் கொடுத்தால் உண்டு. ரேனு, குல்சார், பிரேம்சந்த் புத்தகங்கள் எல்லாம் மனீஷ் ஷர்மா பரிசாகத் தந்தவை. அதே போல் அவனுக்கு தமிழ் புத்தங்களின் மொழிபெயர்ப்பை பரிசாகத் தருவதில் எனக்கு விருப்பம் உண்டு. வெகு அபூர்வமாகவே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. கடைசியாக கிடைத்தது ஒரு புளிய மரத்தின் கதை.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டியது மிக அவசியம். நானும் மனீஷுக்காக ஓரளவு தேடி இருக்கிறேன். புதுமைப்பித்தனின் சில கதைகள் கிடைத்தன. ஜெயகாந்தன் கிடைத்தார். (எனக்கு ஜெயகாந்தனைப் பற்றி உயர்வான எண்ணம் கிடையாது, அதனால் வாங்கவில்லை.) மொத்தமாக ஒரு நாலைந்து புத்தகம் கிடைத்திருந்தால் அதிகம்.

பொதுவாக சிறுகதைகளை விட நாவல்களை மொழிபெயர்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. ஏனோ தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு என்பது முக்கியமான கலை. அதுவும் இந்தியா மாதிரி செப்பு மொழி பதினெட்டுடையாள் நாட்டில் மிக மிக அவசியம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி ராம்நாத், த.நா. குமாரசாமி மாதிரி சிலர் இதை ஒரு சேவையாக செய்தார்கள். அவர்கள் மொழிபெயர்ப்புகள் மிக அருமையாக இருந்தன. இப்போது பாவண்ணன் மட்டுமே கன்னடத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்க்கிறார். அது சரி, தமிழர்கள் ஒரிஜினல் புத்தகங்களையே வாங்குவதில்லை, மொழிபெயர்ப்புதான் முழு நேர வேலை என்றால் மொழிபெயர்ப்பாளன் கதி அதோகதிதான்.

நீங்கள் படித்த பிற இந்திய மொழி சிறுகதைகள் பற்றி சொல்லுங்களேன்! நான் தேடிய காலத்தில் ஹிந்தி, வங்கம், கன்னடம், மலையாளம் ஓரளவு கிடைக்கும். ஆனால் அஸ்ஸாமீஸ், ஒரியா, மராத்தி, தெலுங்கு, உருது புத்தகங்கள் எல்லாம் சான்ஸ் இல்லை. (எண்டமூரி வீரேந்திரநாத்தை தவிர்த்து) இப்போது மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றனவா?

தொடர்புடைய பதிவுகள்
மணிக் பந்தோபாத்யாயின் Primeaval
இஸ்மத் சுக்டையின் லிஹாஃப் (Quilt)
சாதத் ஹாசன் மான்டோவின் டோபா டேக் சிங்
கூடன்பர்க் தளத்தில் தாகூரின் கதைகள்

சிறுகதை வாரம்
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் பகுதி 1, பகுதி 2
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisements