சேதுராமன்

சேதுராமன்

இந்த பதிவு கொஞ்சம் நீளமானது. ஆனாலும் எங்கள் வருத்தம் எல்லாம் இங்கே வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. சேதுராமனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் பெரிய இழப்புதான்.

மகாபாரதத்தில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி உண்டு. ஒரு நச்சுப் பொய்கையின் கரையில் தன் நாலு தம்பிகளும் பிணமாக கிடக்க மாய யக்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார். ஒரு கேள்வி – உலகின் மிக பெரிய அதிசயம் எது? யுதிஷ்டிரரின் பதில்: தினமும் கண் எதிரே மக்கள் இறந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும் தானும் ஒரு நாள் இறக்கப் போகிறவன்தான் என்று யாரும் நினைப்பதில்லை.

போன ஞாயிறு காலை சேதுராமனின் நண்பர் திரு ஸ்ரீனிவாசன் என்னை அழைத்தார். ஒரு துக்க சமாசாரம், சேதுராமன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் என்று சொன்னார். அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. சேதுராமனை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. எங்கள் உறவு இணையம், ஈமெயில் மூலம் வளர்ந்ததுதான். அவருக்கு என்னைப் போல இரண்டு மடங்கு வயதிருக்கும். ஆனால் நீண்ட நாள் பழகிய நண்பர் ஒருவரை இழந்தது போன்ற துக்கம் ஏற்பட்டது.

கேள்விப்பட்ட கணத்தில் முதலில் எழுந்த உணர்ச்சி regret-தான். அடுத்த முறை இந்தியா போனால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரிடம் ஃபோனில் பேச வேண்டும் என்று தோன்றவே இல்லையே என்ற வருத்தம்தான் மேலெழுந்தது. பக்சும் அதையேதான் சொன்னான். என்னவோ இந்தியா போகும்போது பார்த்துக்கொள்ளலாம், பேசலாம் என்று முட்டாள்தனமாக நினைத்தோமே என்ற உணர்ச்சிதான் இப்போது மேலோங்கி நிற்கிறது.

சேதுராமன் பெரிய மனிதர். ஒரு விமானக் கம்பெனியில் பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் ஒரு ட்ராவல் ஏஜென்சி நடத்தி இருக்கிறார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அமேரிக்கா போவதற்கான ஏற்பாடுகள் செய்தவர் இவர்தான். திரு ஸ்ரீனிவாசன் ஒரு காலத்தில் அமேரிக்கா போக வேண்டுமென்றால் இவரைத்தான் அணுகுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இந்த தளம் என்னுடையதும் பக்சுடையதும் மட்டுமல்ல, சேதுராமனுடையதும் கூட. நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துகள் பற்றி ஒரு மறுமொழி எழுதும்போது ராய. சொக்கலிங்கம் பற்றி எனக்கு தெரியவில்லை, நீங்கள்தான் சொல்லுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதை ஒரு சீரிசாக ஆக்கியது அவர்தான். 28 எழுத்தாளர்களை பற்றிய விவரம் சேகரிக்க படாத பாடு பட்டிருக்கிறார். ராய. சொ. பற்றி தெரிந்துகொள்ள காரைக்குடி வரைக்கும் பயணம் செய்து அவரது நண்பர்களிடம் பேசி தகவல் சேகரித்திருக்கிறார். வேதங்கள், கோத்திரங்கள், மந்திரங்கள் குறித்து நிறைய தெரிந்தவர், அவற்றை பற்றி எல்லாம் இங்கே எழுதி இருக்கிறார்.

இந்த தளத்தில் நான்(RV) பக்ஸ் இரண்டு பேரும் எழுதுகிறோம் என்று சொன்னாலும் உண்மையில் மூன்று பேர் எழுதுகிறோம். சேதுராமன் அவர்கள் இந்த தளத்தின் அங்கீகரிக்கப்படாத, அங்கீகாரம் வேண்டாத, மூன்றாவது collaborator. இந்த தளத்தில் அவர் எழுதி என்னையும் பக்சையும் கௌரவப்படுத்தினார்.

சேதுராமன் பொதுவாக அரிய தகவல்களை சேகரித்து தருவார். ஆனால் தன் கருத்து என்ன என்பதை அவ்வளவு சுலபமாக வெளியே சொல்ல மாட்டார். நான் நேர் எதிர். கருத்து கந்தசாமி. தெரியாத விஷயம் என்றாலும் பொழிந்து தள்ளுவேன். அவரையும் எப்படியாவது தான் நினைப்பதை வெளியே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அவரை பிரிந்து வருந்தும் அவர் குடும்பத்தினருக்கு என் condolences.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ்வுலகு
என்று எழுதிய திருவள்ளுவரை என்றாவது பார்த்தால் தாடியை பிடித்து இழுத்து இதில் என்னய்யா பெருமை என்று கேட்க வேண்டும்.

பக்ஸ் எழுதுவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நானும் RVயும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுத்தான் ஸ்ரீ சேதுராமன் அவர்களின் மறைவு பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தி அறிந்தேன். மிக வருத்தமடைந்தோம். நினைத்து நினைத்து பார்த்து, கண்ணில் ஈரம் கசிகிறது.

ஒரே ஒரு முறை சர்வ அலட்சியமாக மு.வ.வின் ”அகல் விளக்கு” நாவலை படிக்க ஆவலாயிருக்கிறேன் என்று ஒரு காமெண்ட் எழுத, உடனே அந்த வார்த்தைகளுக்கு அவர் பெரு மதிப்பு அளித்து, அடையாறிலிருந்து பாரிமுனைக்கு சென்று, ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வந்து (”அகல் விளக்கு”, மற்றும் “கரித்துண்டு” ), அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அவருடைய வயது 80க்கும் மேல்.

கூட்டாஞ்சோற்றை எங்களுடன் சேர்ந்து சமைத்தார். ப்ளாக்கிற்கு 50000 ஹிட் எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார். அதை அடைந்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் ”நாட்டுடமை” தொடருக்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் மிக அதிகம். பல இடங்களுக்குச் சென்றதாக RV கூறினான். சொல்லப்போனால், நாங்கள் அப்படி போயிருப்போமா என்பது சந்தேகம்.

தீபாவளியை முன்னிட்டு கீழ் காணும் ”சஹனா வவத்து” வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

__________________________________________________________________________________
HAPPY DEEPAVALI GREETINGS TO YOU ALL !!

Let us exist together !
Let us share the result of the work together !
Let us enlighten together !
Let us not have hatred towards anyone !
Let there be Shanthi and Peace for all of us !!

(Sanskrit Couplet ‘Sahana vavathu’)

Janaki, Sethuraman and family
Shastrinagar, Adyar – Oct. 2009
__________________________________________________________________________________

அவருக்கு பதில் வாழ்த்து எழுதியிருந்தேன். அதில் சஹனா வவத்துவின் சமஸ்கிருத வார்த்தைகளையும் கேட்டிருந்தேன். அவர் அதை அனுப்புவதற்கு எல்லா முயற்ச்சியும் எடுத்திருப்பார் என்று என்னால் உறுதியாக சொல்லமுடிகிறது. சொர்க்கத்தில் அவர் எங்களுக்காக ஒரு இடுகையை தயார் செய்து விட்டு, எங்களிடம் கொடுக்க நீட்டும் அவருடைய அன்புக் கரங்களை சந்திக்க, அதை அடைய முயற்சிக்கும் எங்கள் கரங்களுக்கு தகுந்த நீளம் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம். எங்கள் நட்பிற்கு காரணமான இண்டர்நெட்டிற்க்கும் எட்டாத தூரத்தில் அல்லவாபோய்விட்டார்!

பின்குறிப்பு: இந்த போஸ்டை படிப்பவர்கள் உங்கள் வயதான உறவினர்கள், நண்பர்கள், யாரையாவது கூப்பிட்டு பேசுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
சேதுராமனுக்கு ஜே!
நாட்டுடமை சீரிஸ் – சேதுராமனின் முடிவு பதிவு

Advertisements