அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! ஜைனர்களுக்கும், மார்வாடிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் கூட!

சிறு வயதிலிருந்தே பண்டிகை என்றால் தீபாவளிதான். இத்தனைக்கும் நான் கிராமங்களில் வளர்ந்தவன். விவசாய கிராமங்கள். போங்களின்போதுதான் விவசாயி, நிலத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் கையில் கொஞ்சம் காசு புரளும். கிராமத்தில் பெரிய பண்டிகை என்றால் பொங்கல்தான். மாட்டுப்பொங்கல் அன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட மாடுகளை ஊர்வலமாக அழைத்து செல்வார்கள். வைப்பணை என்ற கிராமத்தில் ஏழெட்டு வயதில் நான் பார்த்த ஊர்வலம் இன்றும் நினைவிருக்கிறது. (என் கண்ணெதிரில் ஒரு இருபது வருஷங்களுக்குள் தீபாவளி கிராமங்களின் முக்கிய பண்டிகையாக மாறியது. டெலிவிஷனின் சக்தி!)

பண்டிகை என்றால் தீபாவளிதான் என்பது ஏன்? முதல் காரணம் பட்டாசு. பட்டாசு வெடிக்கும்போது பயங்கர ஜாலியாக இருந்தது. பட்டாசு சிறுவர் சிறுமியருக்காக கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். கார்த்திகை அன்றும் பட்டாசு மாதிரி ஒரு விஷயம் உண்டு. ஓலையில் தீக்கங்குகளை ஒரு விதமாக கட்டி தலைக்கு மேல் சுற்றுவது உலக மகா கூல் விஷயம். அது கார்த்திகை அன்று மட்டும்தான் நடக்கும். ஆனால் தீபாவளி அன்று சங்கு சக்கரம், புஸ்வானம், விஷ்ணு சக்கரம், ராக்கெட், லக்ஷ்மி வெடி, ஊசி வெடி, சர வெடி, பாம்பு மாத்திரை (ஒரு வினோதமான வாசனை/நாற்றம் உடையது), கேப், கம்பி மத்தாப்பு, சாட்டை, ஆடம் பாம்ப் என்று வித விதமாக வெடிப்போம். தௌசண்டுவாலா எல்லாம் வராத காலம்.

இரண்டாவது காரணம் பட்சணம். பட்சணம் வேறு பண்டிகைகளுக்கும் கிடைக்கும். ஆனால் பண்டிகை அன்று பூஜை முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன் எடுத்தால் கையை ஒடித்து விடுவாரகள். தீபாவளி அன்றோ நேராக எண்ணை சட்டியில் கையை விட்டு எடுத்து சாப்பிட்டாலும் திட்டு விழாது. குஷிக்கு கேட்க வேண்டுமா?

மூன்றாவது புது சட்டை. அப்போதெல்லாம் தீபாவளி அன்று புது சட்டை காரண்டியாக உண்டு. என் தங்கைகளுக்கு பிறந்த நாள் அன்று புது துணி கிடைக்கும். என் பிறந்த நாள் எனக்கே நினைவிருக்காது. அதனால் புது துணி கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.

இத்தனை அருமையான பண்டிகை என்ன என்று தெரியாமலே என் பெண்கள் வளர்வது கொஞ்சம் சோகம்தான். சரி நான் வளரும்போது சாண்டா க்ளாஸ் யாரென்றே தெரியாது, வீட்டில் கிருஸ்துமஸ் மரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹாலோவீன் என்று இங்கு வந்துதான் கேள்விப்பட்டேன். வேறு சந்தோஷங்கள்…

Advertisements