சிறுகதை எழுதுதல் – சொந்த அனுபவங்கள்

என் மனதில், கம்ப்யூட்டரில், நோட்ஸில் ஒரு டஜன் சிறுகதைகள் இருக்கலாம். அனேகமாக எல்லாமே புலம் பெயர்ந்த வாழ்வு பற்றியவை. எழுதப்பட்டவை எல்லாமே ஆங்கிலத்திலே எழுதப்பட்டவை. ஏனென்றால் என் கதைகளுக்கு இருக்கும் மூன்று வாசகர்களில் இருவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலத்தில் எழுதினால் சரிப்படுவதில்லை. தமிழ்தான் ஒத்துவரும். என்ன செய்வது, அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்.

என்னால் ஓ. ஹென்றியை தாண்டிப் போக முடிவதில்லை. கடைசி வரி அமைந்தால்தான் கதை எழுத முடிகிறது. அந்த கடைசி வரி ஒரு ட்விஸ்டாக இருக்க வேண்டும். இது வரை வெளிப்படையாக சொல்லாத ஒரு விஷயம் வெளியே வர வேண்டும். அப்போது ஒரு realization – பாத்திரங்களுக்கோ படிப்பவர்களுக்கோ இருக்க வேண்டும். ஆனால் அப்படி ட்விஸ்ட் வைத்து கதை எழுதும்போது பாத்திரங்கள் சரியாக flesh out ஆவதில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பாத்திரம் flesh out ஆகலாம். பாத்திரங்கள் தட்டையாக இருக்கின்றன என்று எனக்கே தெரிகிறது. அதை எப்படி சரி செய்வது என்றுதான் தெரியவில்லை.

உதாரணமாக அம்மாவுக்கு புரியாது கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரும் எல்லாப் பாத்திரங்களும் one dimensional. அப்பாவுக்கு அதில் இருக்கும் ரோல் அம்மாவை கான்ட்ராஸ்ட் செய்வதுதான். பையனுக்கு இருக்க வேண்டிய தவிப்பு சரியாக வரவில்லை. அவன் காதலி வெறும் கார்ட்போர்ட் கட்அவுட். அவள் பெரியவர்கள் தேர்ந்தெடுக்கும் மணமகளாக இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான். அம்மாவை மட்டுமே விவரித்திருக்கிறேன். அது கூட சரியாக வந்ததா என்று சொல்வதற்கில்லை.

அதில் சரியாக வந்தவை இரண்டு. ஒன்று கடைசி வரி ட்விஸ்ட். இன்னொன்று அம்மாவும் பையனும் பேசும் இடம். authentic பிராமண பாஷையில் பேசுகிறார்கள். நான் பிராமண ஜாதியில் பிறந்தவன். எனக்கு அந்த பாஷை வராவிட்டால் எப்படி? சுமாராக வந்தது அம்மாவின் முட்டை காய வைத்த ஸ்டவ்வை தூக்கிப் போடும் ஆசாரம். அதற்கு நான் பல விஷயங்களை சொன்னாலும் எனக்கு திருப்தியாக இல்லை.

இதை எப்படி திருத்தலாம் என்று சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லை. அப்படிப்பட்ட ஆளை எங்கே தேடுவது என்றும் தெரியவில்லை.

அப்புறம் இன்னொரு பிரச்சினை. நமக்கு தோன்றும் கரு மற்றவர்களுக்கும் தோன்றி இருக்கலாம். முதல் முறையாக அமேரிக்கா வந்த என் அம்மா ஃப்ரிஜ் நிறைய முந்தின நாள் சமைத்தது எக்கச்சக்கமாய் மிச்சம் இருந்தாலும் புதிதாக சாதம், குழம்பு, ரசம் வைப்பாள். எப்படி முந்தின நாள் சமையலை, பழைய சாப்பாட்டை, பையனுக்கு போடுவது? அப்புறம் நமக்கு சோம்பல் என்று அவன் நினைத்துவிட்டால்? ஃப்ரிஜ் பூராவும் சட்டி மேல் சட்டியாக பழைய குழம்பு, ரசம், சாதம் வைக்கப்பட்டிருக்கும். இதை வைத்து ஒரு கதை எழுதினேன். அப்புறம் இதே போல ஒரு கதையை கீதா பென்னட் எழுதி இருப்பதை நானே படித்தேன். நான் எழுதிய கதை எங்கேயாவது வெளியாகி பிரச்சினை கிளம்பினால் நான் காப்பி அடிக்கவில்லை என்று யார் நம்புவார்கள்? எம்எஸ்வி ஒரு மெட்டை பல பாட்டுக்கு போட்டிருக்கிறார் என்று இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னார் – பேசுவது கிளியா, வீடு வரை உறவு, மாம்பழத்து வண்டு எல்லாம் ஒரே ட்யூன்தானே! ஆனால் எம்எஸ்வியால் அதை சின்ன சின்ன மாற்றம் செய்து பல அருமையான பாடல்களாக ஆக்க முடிகிறது. நமக்கோ அதை மாற்றுவது பெரிய கஷ்டமாக இருக்கிறது.

பாலகுமாரன் பல தடவை சொல்லி இருக்கிறார் – அவருக்கு சுஜாதா ஒரு மணி நேரம் செலவழித்து கதை எழுத சொல்லிக் கொடுத்தாராம். இவர் கப்பென்று பிடித்துக் கொண்டாராம். நான் பாலகுமாரன் அளவு திறமை உள்ளவன் இல்லைதான். ஆனால் எனக்கும் மூக்கு வரை ஆசை இருக்கிறது. எனக்கு ஒரு சுஜாதாதான் இன்னும் கிடைக்கவில்லை.

சிறுகதை எழுதுவதில் ஆர்ட்டும் இருக்கிறது, craft-உம் இருக்கிறது. ஆர்ட் வருமோ வராதோ தெரியாது, craft -ஆவது வரவேண்டும் என்று ஆசை. எப்போதாவது கை வராமலா போய்விடும்?

தொடர்புடைய பதிவுகள்:
ஓ. ஹென்றி – விக்கி குறிப்பு
பாலகுமாரனுக்கு சிறுகதை எழுதுவது எப்படி என்று விளக்கிய சுஜாதா
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு

Advertisements