ம.பொ.சி

ம.பொ.சி

மதிப்பீடு எழுதி ரொம்ப நாளாச்சு. இன்றைக்கு ஒன்று.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் (எண்பதுகள்) துக்ளக் பத்திரிகையில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டவர் ம.பொ.சி. சரியான ஜால்ரா என்றுதான் நினைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு கலைஞர் ஆட்சியில் இருந்த போது அவருக்கும் ஜால்ரா என்று தெரியவந்தது. அவரை பற்றி சொன்னவர்கள் எல்லாம் அவர் நன்றி கெட்டவர், கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டு இப்போது எம்ஜிஆரை சந்தோஷப்படுத்த கலைஞரை திட்டுகிறார் என்றுதான் சொன்னார்கள்.

இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்தபோது இவர்தான் மறந்து போயிருந்த கட்டபொம்மனையும் வ.உ.சியையும் தமிழர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் என்று தெரியவந்தது. அட! என்று பார்த்தேன். பிறகு மெதுமெதுவாக அவர் தமிழக எல்லை போராட்டத்தில் ஆற்றிய பங்கு, தமிழையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் போற்றியது மாதிரி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவரே எழுதிய சில புத்தகங்கள் – ராஜாஜியுடன் அவருக்கிருந்த உறவு பற்றி எழுதியது போல – கிடைத்தன. தமிழம் சைட்டில் தமிழ் முழக்கம் பத்திரிகையின் சில பழைய இதழ்களையும் பார்த்தேன். என்னைப் போல ஒரு அரை வேக்காடு மதிப்புரை எழுத இவ்வளவு தெரிந்தால் போதும். 🙂

ம.பொ.சி. 1906-இல் பிறந்தவர். பனை ஏறும் ஜாதியில் – தாழ்வாக கருதப்பட்ட ஜாதியாம் – பிறந்தவராம். (கிராமணி என்ற அடைமொழியை வைத்து கிராமத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஜாதியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.) சுதந்திர போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றார் என்று நினைக்கிறேன். மிக ஏழையாக இருந்திருக்கிறார். பரம்பரை சொத்தும் இல்லை, குடும்பத் தலைவனும் விடுதலை, போராட்டம், ஜெயில் என்று போய்விட்டால் குடும்பத்தின் நிலை கஷ்டம்தான். ஜெயில்வாசம் உடல்நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. அவரது எளிய பின்புலம், மற்றும் தோற்றம் – குறிப்பாக மீசை, அவர் ரவுடியோ என்ற ஒரு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. ராஜாஜியே அப்படித்தான் நினைத்திருந்தாராம். கல்கியை ராஜாஜி convince செய்ய வேண்டி இருந்ததாம்.

அவருக்கு வ.உ.சி.யும், கட்டபொம்மனும் பெரிய icon-கள். அவர்களை பற்றிய பிரக்ஞை தமிழ் நாட்டில் உருவாக அவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். (அவருக்கு அடுத்தபடியாகத்தான் நான் சிவாஜி கணேசனை சொல்லுவேன்)

நாற்பதுகளில் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்தது. சின்ன அண்ணாமலை உதவியுடன் கட்டபொம்மன், வ.உ.சி. புத்தகங்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு முன்னும் வெளி வந்தாலும், அவை விற்கவில்லை. சின்ன அண்ணாமலை மோசமான பிரிண்டிங், சாணி கலர் பேப்பரில் வந்த புத்தகங்களோடு ம.பொ.சி. தன்னை வந்து பார்த்ததாக குறிப்பிடுகிறார். சி. அண்ணாமலை வணிகம் ரத்தத்தில் ஊறிய செட்டியார். அருமையாக மார்க்கெட்டிங் செய்யக்கூடியவர். அவர் தனது பதிப்பகத்தில் இவற்றை நல்ல முறையில் அச்சடித்து வெளியிட்டார். ம.பொ.சிக்கு பணம் கிடைத்த மாதிரி தெரியவில்லை, ஆனால் எல்லாரும் திரும்பி பார்த்தார்கள்.

காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழைய முயன்றபோது காமராஜ் அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது ராஜாஜி சார்பாக முனைந்து போராடிய தமிழ் நாட்டுக்காரர்களில் இவர்தான் முக்கியமானவர். அப்போதிலிருந்தே ராஜாஜியின் அணுக்க சீடர் ஆகிவிட்டார். ராஜாஜி காங்கிரசுக்குள் நுழைவதற்காக செய்த compromise-களில் இவர் அவமானப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு ராஜாஜி இவரது விஸ்வாசம் பற்றி தெளிவாக புரிந்துகொண்டார்.

ராஜாஜியின் சிஷ்யர்தான், ஆனால் ராஜாஜிக்கு ஆமாம் போடுபவரில்லை. கண்மூடித்தனமான பக்தி இல்லை. (கல்கி நாட்டில் மழை பெய்ததற்கெல்லாம் ராஜாஜிதான் காரணம் என்று எழுதி இருக்கிறார்) independent ஆக செயல்பட்டார். ராஜாஜி இவரை வருமானம் வரக்கூடிய பல வேலைகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார் – கல்கியின் மறைவுக்கு பிறகு கல்கி பத்திரிகைக்கு ஆசிரியர் வேலை உட்பட. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

52 தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லையா, இல்லை தோற்றுவிட்டாரா என்று தெரியவில்லை. ராஜாஜி முதல்வர் ஆனதும் இவரை பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் பதவி எதுவும் தரவில்லை. எதோ நிலச்சீர்திருத்தம் விஷயத்தில் மிக அற்புதமாக பேசி தஞ்சாவூர் பண்ணையார்களை சட்டத்தை ஒத்துக்கொள்ள வைத்தாராம். காமராஜ் இவரை ராஜாஜியின் சிஷ்யர் என்று ஒதுக்கிவிட்டார். தமிழக எல்லைக்காக இவர் போராடியதும் காமராஜுக்கு embarassing ஆக இருந்திருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தின் தமிழ் இவரை கவர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை எதிரியாகத்தான் நினைத்திருக்கிறார். அவர்களது பாணியிலேயே அவர்களது நோக்கங்களை – கடவுள் மறுப்பு, திராவிட நாடு மாதிரி பல – எதிர்த்திருக்கிறார்.அதாவது நல்ல தமிழில் பேசி, எழுதி வந்திருக்கிறார். ராஜாஜியும் காமராஜும் அழகான தமிழ் பேசியதில்லை. அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோரின் தமிழ் ஐம்பதுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் தன்னுடன் கா.மு.ஷெரிஃப், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி. நாகராஜன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு தமிழரசு கழகம் என்று ஒரு அமைப்பை ஸ்தாபித்தார். ஏ.பி.என் சினிமா துறையில் அறுபதுகள் வரை பெரும் வெற்றி பெறவில்லை, ஆனால் கலைஞர் போல வர முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார். தமிழ் முழக்கம் பத்திரிகையை புரட்டினால் கலைஞர், கே.ஆர. ராமசாமி மாதிரி பலரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. ஏ.பி.என்ணின் படங்களும் தி.மு.கவினரால் விமர்சிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

ம.பொ.சியின் தாக்கம் தமிழக எல்லை போராட்டத்தில்தான் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. நேருவும், ராஜாஜியும் மொழிவாரி மாநிலங்களின் ஆதரித்ததில்லை. மத உணர்வு பாகிஸ்தான் கொண்டு வந்தது போல மொழி உணர்வு பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கும் என்றுதான் எண்ணினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு அனேகமாக போய்ச் சேரும் நிலை வந்த பிறகுதான் முதல்வர் ராஜாஜிக்கும் பிரதமர் நேருவுக்கும் அவரை பற்றி பிரக்ஞையே வந்திருக்கிறது. வேறு வழி இல்லை என்று தோன்றிய பிறகுதான் ஆந்திரா உருவாக ஒத்துக்கொண்டார்கள். மாநில எல்லையை அவர்களும் சரி, பின்னால் வந்த காமராஜும் சரி பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடினார்கள் (அவர்களுக்கு உரிமை இருக்கவும் செய்தது). ம.பொ.சி., தமிழரசு கழகத்தார் போராடி இருக்காவிட்டால் திருத்தணி, சென்னை எல்லாம் ஆந்திராவில்தான் இருந்திருக்கும். சித்தூர், திருப்பதி ஆகியவற்றின் மீது தமிழர்களுக்கும் உரிமை அந்த காலத்தில் உண்டு. நேரு வாக்குறுதி எல்லாம் கொடுத்திருக்கிறார், இதை பற்றி விசாரிப்பதாக. எல்லாம் காற்றோடு போய்விட்டது.

காமராஜ் காலத்தில் ம.பொ.சிக்கு ப்ரெஷர் அதிகமாக இருந்திர்க்க வேண்டும். கட்சிக்குள்ளிருந்தே ஒருவர் தமிழக எல்லைகள் பற்றி “கலாட்டா” செய்வது காமராஜுக்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். (கலக்கிட்டடா! கானாவுக்கு கானா) காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழை வைத்து நடந்த போட்டியில் தி.மு.க.வினரை வெல்ல முடியவில்லை. தமிழரசு கழகம் மங்க ஆரம்பித்தது. ராஜாஜி சுதந்திராவுக்கு வரும்படி பல முறை கூப்பிட்டும் மறுத்துவிட்டார். ஓரளவு புகழ் இருந்தது, பணம்தான் குறைச்சலாக இருந்திருக்கிறது.

67-இல் ராஜாஜியே தி.மு.க.வுடன் கூட்டு சேரும்போது, ம.பொ.சி. சுலபமாக கூட்டு சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனார். அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் பதவி அதுதான் – 60 வயதில். வயதாகிவிட்டது, இளமையில் இருந்த வைராக்யம் குறைந்துவிட்டது. மெதுமெதுவாக கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இது அவரது ஆளுமையின் பெரிய வீழ்ச்சிதான், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய வீழ்ச்சி. அதை விட பெரிய வீழ்ச்சி அவர் எம்ஜிஆருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது. ஒரு முறை வெளிப்படையாகவே சொன்னார் – எம்ஜிஆர் நன்றாக ஆட்சி செய்கிறார் ஏனென்றால் எனக்கு மேல் சபை தலைவர் பொறுப்பு கொடுத்திருக்கிறார் என்று. இன்றைய நிலையை வைத்து பார்த்தால் சிறு வசதிகள்தான் – ஒரு கார், ஒரு வீடு, ஏதோ கொஞ்சம் பணம். ஆனால் அதன் அருமை கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

அவரை காமராஜ் பயன்படுத்தி இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பெரும் வலு சேர்த்திருப்பார். அவரது பாணியை காங்கிரஸ் கடைப்பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாக்கு பிடித்திருக்கலாம். அவரது potential பெரிது. அவரது சாதனைகள் குறைவுதான், வாய்ப்பு கிடைக்காத குறைதான்.

சிறந்த பேச்சாளர் என்று சொல்கிறார்கள். நான் அவரது பேச்சை கேட்டதில்லை. அவரது புத்தகங்கள் எதுவும் எனக்கு பிரமாதமாக தெரியவில்லை. ஆனால் அவை முக்கியமான சரித்திர ஆவணங்கள் – கட்டபொம்மன், வ.உ.சி. ராஜாஜி, விடுதலை போரில் தமிழகம் போன்றவை முக்கியமான புத்தகங்கள்.

அரசு இவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கி இருக்கிறது. ஒரு ஸ்டாம்பும் வெளியிட்டிருக்கிறது.

திறமை இருந்தும், லட்சிய வேகம் இருந்தும், தலைமை வகிக்க தகுதி இருந்தும், அவர் தன் வாழ்வில் பெரிய பதவி எதையும் அடையமுடியவில்லை. கடைசியில் தன் பேச்சு திறமையை ஜால்ரா அடிக்க பயன்படுத்திவிட்டார். அவரது தாக்கம் தமிழக எல்லைப் போராட்டத்திலும், வ.உ.சி., கட்டபொம்மன் ஆகியோரை பிரபலப்படுத்தியதிலும் மட்டுமே நிற்கிறது. ஒரு நல்ல ஆளுமையாக வரக்கூடிய தகுதி உள்ள ஒருவரை தேவைகளும், காலமும் எப்படி வீழ்ச்சி அடைய செய்கின்றன என்பதைத்தான் அவர் வாழ்க்கை காட்டுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:

ம.பொ.சி. பற்றிய ஸ்ரீ.சேதுராமன் அவர்களின் இடுகை
ம.பொ.சி. பற்றிய விகி குறிப்பு
தமிழக எல்லை நிர்ணயிப்பில் ம.பொ.சி.
வ.உ.சிக்கு சிலை எழுப்ப ம.பொ.சி. பட்ட பாடு
தமிழம் நாளொரு நூல் தளம் – தமிழ் முழக்கம் பத்திரிகைகள், ஆசிரியர் கா.மு. ஷெரிப், (1955 – 4ஆம்ஆண்டு 3,4,9,10,12,13,15,16,18,19, 21, 22) (எண் 441, 425-33. 439, 440)

மற்ற ஆதாரங்கள்:
ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், நானறிந்த ராஜாஜி, விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு ஆகிய புத்தகங்கள்
சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள்