கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே எழுதி இருந்தேன். அது என்ன தற்செயலோ தெரியவில்லை, அதற்கு பிறகு பல அருமையான சுட்டிகள் கண்ணில் பட்டன. அவற்றை எல்லாம் இங்கே தொகுத்திருக்கிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன் கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.

வெங்கட் சாமிநாதன் கரிச்சான் குஞ்சுவை பற்றி இங்கே மற்றும் இங்கே எழுதி இருக்கிறார். முதல் சுட்டியில் பசித்த மானுடம் நாவலை பற்றி எழுதி இருக்கிறார். இரண்டாவது சுட்டியில் அவருக்கு கரிச்சான் குஞ்சுவோடு உள்ள பழக்கத்தை பற்றி எழுதி இருக்கிறார்.

ஆர்.பி. ராஜநாயஹம் நிறைய படிப்பவர். அவர் கரிச்சான் குஞ்சுவின் பெரிய விசிறி போல தெரிகிறது. அவர் எழுதிய இரண்டு பதிவுகள் இங்கே மற்றும் இங்கே. பிந்தைய பதிவில் பசித்த மானுடம் பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறார். அவர் சொல்வது போல வெ.சா. கரிச்சான் குஞ்சுவை பற்றி எழுதாமல் இல்லை. குறைந்த பட்சம் 2007-இல் எழுதி இருக்கிறார் (மேலே உள்ள சுட்டிகளில் முதலாவது). அதற்கு முன்பும் சாகித்திய அகாடமி என்சைக்ளோபீடியாவில் எழுதி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

கரிச்சான் குஞ்சுவை பற்றி ஜீவி எழுதி இருந்ததை ஏற்கனவே சுட்டி இருக்கிறேன். கரிச்சான் குஞ்சுவின் உயிரை தி. ஜானகிராமன் காப்பாற்றிய நிகழ்ச்சியை அவர் இந்த பதிவில் குறிப்பிடுகிறார். கரிச்சான் குஞ்சுவின் வார்த்தைகளிலேயே:

அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது குமபகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக்கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி, நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவுதான். ஆனால் நான் இறங்கிய இடத்தில் உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே.. போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவு புதையுண்டு விட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டி விட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக் கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆகிவிட்டிருந்தேன். இறந்து விட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு.

சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில், ஈரம்,சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்றபோது, நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்திருந்தனர். ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அவன், “ஐயோ, ஐயோ” என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்து என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.

கரிச்சான் குஞ்சுவின் புத்தகங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். குறைந்த பட்சம் பசித்த மானுடத்தை தேடி பிடிக்க வேண்டும்.நெட்டில் அவர் ஃபோட்டோ கிடைக்கிறதா என்று தேடித் பார்த்தேன். ஒன்று கூட கிடைக்கவில்லை!

Advertisements