கோல்வால்கர்

கோல்வால்கர்

கிலாஃபத் இயக்கத்தை பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய அருமையான கடிதத்தில் இருந்து இங்கே
தாவினேன். பதிவிலிருந்து:

ஸ்ரீ மாதவ சாதாசிவ கோல்வால்கர் எனும் ப.பூ. குருஜி கோல்வால்கர் நாசி ஆதரவாளரா பாசிஸ்டா இந்துத்வம் என்பது பாசிச நாசி தன்மை கொண்டதா… இந்த விவாதத்தின் மையத்தில் இருப்பது குருஜி கோல்வல்கர் எழுதிய ‘நாம் நம் தேசத்தின் வரையறை’ ஆகும். இந்நூலில் இருந்து கையாளப்படும் பகுதிகளையும் நாம் காணலாம்.

“இனத்தின் தூய்மையையும் அதன் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி அத்தேச செமிடிக் இனத்தை தேசத்திலிருந்து நீக்கி (purges) உலகை திடுக்குற செய்தது. இனகர்வம் அதன் மிக அதீத அளவில் இங்கு வெளிப்பட்டுள்ளது. ஜெர்மனி காட்டியுள்ளது என்னவென்றால் எப்படி தம் அடிப்படையில் மாறுபடும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றாக ஒருங்கிணையமுடியாது என்பதே. இது இந்துஸ்தானத்தில் உள்ள நம் அனைவருக்கும் லாபம் தரும் நல்ல படிப்பினையாகும்.”

மற்றொரு மேற்கோள் பினவருமாறு ஆகும்: “புத்திசாலித்தனமான பழமையான நாடுகளின் இந்த நிலைப்பாட்டின் படி இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து தருமத்தை மரியாதை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் தனித்தன்மையை விட்டு இந்து இனத்துடன் கலந்திட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்து தேசத்திற்கு கீழ்படிந்து எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் -எத்தகைய தனிவிதமாக நடத்தப்படுவதை எண்ணிக்கூட பார்க்காமல் குடிமக்களுக்கான உரிமைகளைக் கூட கோராமல்- இருந்திட வேண்டும்.”

அ. நீலகண்டன் கோல்வால்கர் ஒரு நாஜி இல்லை, ஃபாசிஸ்ட் இல்லை என்று நீளமாக வாதாடுகிறார். அவர் நாஜியா இல்லையா என்பதை விட அவர் சொன்ன கருத்துகள் சரியா இல்லையா என்பதுதான் முக்கியம்.

எனக்கு கோல்வால்கர் என்ற பேரைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றி தெரியாது. அ. நீலகண்டன் கோல்வால்கரை பெரிதும் மதிக்கிறார் என்று புரிகிறது, அதனால் அவர் காட்டும் இந்த இரண்டு மேற்கோளும் சரியாகவே சுட்டப்பட்டிருக்க வேண்டும். Out of context ஆக இருக்காது. இந்த இரண்டு மேற்கோளிலும் இருக்கும் கருத்துகள் ஏற்க முடியாதவை.

அடிப்படையில் மாறும் இனங்கள் கலாச்சாரங்கள் ஒன்றிணைய முடியாது என்று முதல் மேற்கோளில் சொல்லப்படுகிறது. அவர் சொல்லும் “இனங்கள்” ஹிந்துக்களும் மற்ற மதத்தினரும் – குறிப்பாக முஸ்லிம்களும் என்பது தெளிவு. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய முடியாது என்றால் பிராமணனும் தலித்தும் ஒன்றிணைய முடியுமா? பணக்காரனும் ஏழையும்? காஷ்மீரியும் தமிழனும்? ஒரு தமிழ் ஹிந்துவுக்கும் தமிழ் முஸ்லிமுக்கும் உள்ள வேற்றுமை தமிழ் ஹிந்துவுக்கும் காஷ்மீரி ஹிந்துவுக்கும் உள்ளதை விட அதிகமா குறைவா? மொழி, உடை, உணவு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் வேறுபட்டாலும் காஷ்மீரியையும் தமிழனையும் இணைக்கும் புள்ளிகள் இருக்கும்போது மத வேறுபாட்டால் தமிழ் முஸ்லிமும் தமிழ் ஹிந்துவும் ஒன்றிணைய முடியாது என்பது சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. மத வேறுபாடு மட்டுமே கோல்வால்கருக்கு அடிப்படை வேறுபாடாக தெரிகிறது.

இரண்டாவது மேற்கோள் முதல் மேற்கோளை கொஞ்சம் மறுக்கிறது. எப்படி ஒன்றிணைய முடியும் என்று சொல்கிறது. இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்படி ஏற்றுக்கொண்டால் ஒன்றிணையலாம் என்பது கோல்வால்கரின் எண்ணம். யார் அந்நியர்? கோல்வால்கருக்கு ஹிந்துக்களைத் தவிர மற்றவர் அந்நியர். பெரியாருக்கு பிராமணர் அந்நியர். பால் தாக்கரேக்கு மராட்டியர் தவிர மற்றவர் அந்நியர். தமிழனுக்கு மார்வாடி அந்நியர். யார் எல்லைகளை வரையறுப்பது? இந்திய எல்லை ஒன்று போதும்.

அப்புறம் மொழி என்று சொல்கிறார். என்ன மொழி? சமஸ்கிருதமா? ஹிந்தியா? மராத்தியா? (பேரை வைத்து கோல்வால்கர் மராத்தியர் என்று யூகிக்கிறேன்) நிச்சயமாக தமிழ் இல்லை. இவர் சொல்லும் இந்து கலாச்சாரத்தில் சீக்கியர்கள் உண்டா? கபீர்? அக்பர்? டாடா? தாஜ் மஹால்? ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? எல்லாரும் மதம் மாற வேண்டுமா? குடி மக்களுக்கான உரிமைகள் கூட கிடையாது என்றால் இந்தியாவில் வாழ எந்த முஸ்லிம் விரும்புவார்?

பன்முகத்தன்மை இந்தியாவின் சிறந்த கூறுகளில் ஒன்று, ஹிந்து மதத்தில் சிறந்த கூறுகளில் ஒன்று என்று சொல்பவர்கள் இந்த எண்ணங்கள் ஒருமுகத்தன்மைக்கே கொண்டு செல்லும் என்பதை உணரவில்லையா? கோல்வால்கர் ஹிந்து மதத்தை சுற்றி கோடு போட்டால், பால் தாகரே மராத்தியத்தை சுற்றி கோடு போடுவார்; பெரியார் திராவிடஸ்தான் சுற்றி கோடு போடுவார்; வத்தால் நாகராஜ் காவிரியை சுற்றி கோடு போடுவார்; ராமதாஸ் வன்னியரை சுற்றி கோடு போடுவார்; நாட்டில் வேற்றுமைக்கா பஞ்சம்?

ஆர்எஸ்எஸ், கோல்வால்கர் போன்றவர்கள் ஜின்னாவின் இரட்டை நாடு கொள்கைக்கு எதிரானவர்கள் என்று நினைத்திருந்தேன். இங்கே இவரே “இனங்கள்” சேர்ந்து வாழ முடியாது, பாகிஸ்தானை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று சொல்வது போல இருக்கிறது.

Disclaimer: மீண்டும் சொல்கிறேன். கோல்வால்கர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அ. நீலகண்டனே சுட்டி இருக்கும் இரண்டு மேற்கோள்களை வைத்து மட்டுமே இந்த பதிவு எழுதப்பட்டது. இவை ஏற்க முடியாதவை, அவ்வளவுதான்.

பின் குறிப்பு: இந்த இனங்கள் என்ற வார்த்தையே எரிச்சல் மூட்டுகிறது. மனிதனும் கொரில்லாவும் வேறு வேறு இனம். ஹிந்துவும் முஸ்லிமும் வேறு இனம், தேவரும் தலித்தும் வேறு இனம், அமெரிக்கனும் ஆஃப்கானும் வேறு இனம் என்றால் எப்படி? எல்லாருக்கும் அதே 46 க்ரோமோசொம்தான்.

தொடர்புடைய பதிவுகள்
கோல்வால்கர் – விக்கி குறிப்பு
கோல்வால்கர் நாஜியா? – அரவிந்தன் நீலகண்டன்

Advertisements