காந்தி

காந்தி

எனக்கு காந்தி என்ற தலைவர் மீது மிகுந்த பிரமிப்பு உண்டு. அவரால் எப்படி ஒரு பெரும் ஜனக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது? அவர் அந்த கூட்டத்துக்கு அவர் அப்படி என்ன கொடுத்துவிட்டார்? அவரால் கொடுக்க முடிந்தது எல்லாம் சிறைவாசம்; அவர்களது சவுகரியமான சமூக வாழ்வில் மாற்றம்; ஜாதி வித்தியாசம் பார்க்காதே, மலம் அள்ளு, கிராமத்துக்கு போய் சேவை செய், படிப்பை, நல்ல பணம் தரும் தொழிலை விடு என்ற கஷ்டமான உபதேசங்கள்; சாதாரண மனித இயல்பிலிருந்து மாறி நடக்க வேண்டிய கட்டாயம், அடித்தால் வாங்கிக் கொள் என்ற கோட்பாடு; இதை எல்லாம் செய்தால் உங்களுக்கு என்றாவது சுதந்திரம் கிடைக்கலாம் என்ற ஒரு மங்கலான கனவு. இதை வைத்து அவர் எப்படி பெரும் கூட்டத்திடம் உற்சாகத்தையும் சலிப்பில்லாமல் உழைப்பதையும் ஏற்படுத்தினார்? ((இந்த பிரமிப்பை பற்றி ராஜேந்திர பிரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi பதிவிலும் எழுதி இருக்கிறேன்.)

எனக்கு காந்தி என்ற சிந்தனையாளர் மீது மரியாதை உண்டு, ஆனால் அந்த சிந்தனையாளரைப் பற்றி அவ்வளவு தெரியாது . அஹிம்சை என்ற ஒரு கோட்பாடு ஒன்றே போதும் மரியாதை வர. அவர் கிராமங்கள் பற்றி சொன்னவை இன்று கொண்டாடப்படும் ஷூமாகர், ரேச்சல் கார்சன், ஃபுகுவோகா போன்றவர்களின் எண்ணங்களை ஓரளவு ஒத்திருக்கின்றன. அவரது பொருளாதார சிந்தனைகளை புரிந்து கொண்டவர் ஜே.சி. குமரப்பா ஒருவர்தான் என்று நினைக்கிறேன். குமரப்பா சுதந்திர இந்தியாவில் பொருட்படுத்தப்படவே இல்லை. அது சரி காந்தி சொன்னதையே ஒதுக்கிய பின், குமரப்பா எந்த மூலை?

காந்தியின் சிந்தனைகள் பற்றி தெரிந்துகொள்வதில் ஒரு பெரும் பிரச்சினை உண்டு. சாதாரணமாக கிடைக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் காந்தி என்ற தலைவரை மட்டுமே பேசுகின்றன. நீங்கள் காந்தியை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் சம்பரான், ரௌலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா, ஆக்கப் பணிகள், உப்பு சத்யாக்ரகம், வட்ட மேஜை மாநாடு, காங்கிரஸ் அரசுகள், வெள்ளையனே வெளியேறு, நவகாளி, பாகிஸ்தான், இறப்பு என்று ஒரு chronological படிமம் சுலபமாக கிடைத்துவிடுகிறது. அவரது சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அஹிம்சை, ஹரிஜன் இதை தாண்டி போவது கஷ்டம். அவரது unprocessed கட்டுரைகள் கிடைக்கலாம். அவருடன் ஓரளவு வேறுபட்ட அம்பேத்கார், பெரியார், கோல்வால்கர் சொன்னது மூலம் சில தகவல்கள் indirect ஆக கிடைக்கலாம். அவரது எண்ணங்களை, சிந்தனைகளை படிக்கிற மாதிரி process செய்து வெளியிட்ட புத்தகங்கள் அபூர்வம் என்றே நான் நினைக்கிறேன். ஒரு விதத்தில் இது ஒரு நூறு வருஷத்துக்கு உட்பட்ட ஓரளவு சிந்தித்த தலைவர்கள் எல்லாருக்குமே – காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, நேரு எல்லாருக்குமே பொருந்தும்.

அந்த விதத்தில் ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய சில கட்டுரைகள் மிக உதவியாக இருக்கின்றன. குறிப்பாக காந்தியும் ஜாதியும், காந்தியும் தொழில் நுட்பமும், காந்தியும் ஹிந்தியும் என்ற இந்த பதிவுகள்.

காந்தியும் ஜாதியும் பதிவில் ஜாதியை பற்றிய காந்தியின் எண்ணங்கள் எப்படி மாறி இருக்கின்றன என்பதை ஜெயமோகன் எடுத்துக் காட்டுகிறார். காந்தி “வருணப் பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும் பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.” என்று நம்பி இருக்கிறார் என்று ஜெயமோகன் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஜாதியின் negative கூறுகள் அதன் positive கூறுகளை விட முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார். இன்று ஜாதி இல்லை என்று நம்மில் பலரும் வாயளவிலாவது சொல்கிறோம் – அதற்கு முக்கிய காரணம் காந்திதான் என்று தோன்றுகிறது. மிக அருமையான கட்டுரை.

காந்தியும் ஹிந்தியும் பதிவில் ஜெயமோகன் சொல்வது இதுதான் – “காந்தி இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பன்மைத்தன்மைக்கு எதிராக ஒற்றை மையத்தை வலியுறுத்தவில்லை. அவர் உருவகித்த பன்மைத்தன்மை மிக்க கிராம சுயராஜ்யத்தின் தேசிய அளவிலான பொதுஇணைப்புமொழியாக ஒரு நடைமுறை யதார்த்தமாக இந்தியை முன்வைத்தார்.” இது எனக்கு சரியாகவே தோன்றுகிறது. அவர் இன்று இருந்திருந்தால் ஆங்கிலத்துக்கு இன்னும் முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லி இருப்பார்.

இணையம் என்ற technology தெரியாதவர்கள் யாரும் என் இந்த பதிவை படிக்கப் போவதில்லை. ஆனால் காந்தி தொழில் நுட்பத்துக்கு எதிரானவர் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஏன் எனக்கும் அப்படித்தான் எண்ணம். அவர் பெரும் தொழில்களை விரும்பவில்லை, ஆலைகள் வேண்டாம், கை ராட்டினம் வேண்டும் என்று சொன்னவர்தான். ஜெயமோகனின் எண்ணத்தில் காந்தி appropriate technology வேண்டும் என்ற முன்னோடி. எனக்கு இந்த பதிவு காந்தியிடம் இன்றைய மதிப்பீடுகளை கொண்டு போய் பொருத்திக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. காந்தி நவீன மருத்துவம் போன்றவற்றையும் நிராகரித்தவர். கஸ்தூரிபாவுக்கு இங்லிஷ் மருந்து கொடுத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். நவீன மருத்துவம் மட்டுமே சரியான வழி என்று நான் சொல்ல வரவில்லை. நவீன மருத்துவம் ஒரு விஞ்ஞான முறை, அதை சோதனை செய்து பார்க்காமலேயே காந்தி நிராகரித்தார். மீண்டும் அந்த பதிவை ஆற அமர ஒரு முறை படித்து பார்க்க வேண்டும்.

சத்தியாகிரகத்தின் விதிகள் எவை என்று இந்த பதிவில் விளக்குகிறார். மனிதருடைய புரிதலும் சரி, அதை விளக்கும் திறமையும் சரி, அபாரமானவை.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம் இந்த பதிவில் விளக்கப்படுகிறது.

காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது இங்கே.

இனி குறிப்பிடும் பதிவுகள் காந்தியின் சிந்தனையை விளக்குபவை இல்லை. இருந்தாலும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்பதால் குறிப்பிடுகிறேன்.

காந்தியின் தவறுகள் என்று சொல்லப்படுவதை பற்றி இங்கே மிக சிறப்பான ஒரு பதிவு இருக்கிறது. நான் கூட சமீபத்தில் கிலாஃபத் இயக்கம் தவறு என்று நீங்கள் கருதவில்லையா என்று கேட்டு ஒரு அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். அவர் ஏற்கனவே எழுதி இருப்பதை நான்தான் பார்க்கவில்லை. பல நூறு கட்டுரைகள் எழுதி இருக்கிறார், எங்கே எது இருக்கிறது என்று தெரிய மாட்டேன் என்கிறது!

கிலாஃபத் இயக்கத்தை பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. துருக்கியில் என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் போராடியது, அதற்கு காந்தியும் ஆதரவு தந்து கூட போராடியது, வெறும் அபத்தமாக இருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் இதை பற்றி ஜெயமோகனுக்கு ஒரு அருமையான, ஆதாரங்கள் நிறைந்த ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அ. நீலகண்டன் மௌலானா முகம்மது அலியின் பிரசித்தி பெற்ற காந்தி பற்றிய கருத்தை சுட்டிக் காட்டுகிறார் – அலி சொன்னது – “ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்”. இதை காந்தி பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மௌலானா அளித்த விளக்கம் அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை. ஏறக்குறைய அவர் சொன்னது – “ஐந்தடி உயர உத்தமர் ஆறடி உயர திருடனை விட குள்ளமானவரே.”

காந்தியின் தாக்கம் லாரி பேக்கரை எப்படி பாதித்தது என்று இங்கேயும் கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் பற்றி இங்கேயும் எழுதி இருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள் (எல்லாம் ஜெயமோகன் எழுதியவை)
காந்தியின் சிந்தனைகளை விளக்கும் பதிவுகள்:

 • காந்தியும் ஜாதியும்
 • காந்தியும் தொழில் நுட்பமும்
 • காந்தியும் ஹிந்தியும்
 • சத்தியாகிரகத்தின் விதிகள்
 • காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம்
 • காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது
 • காந்தியின் எளிமையும், அதற்கு ஆன செலவும்
 • மற்றவை:

 • காந்தியின் தவறுகள்
 • கிலாஃபத் இயக்கம் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதம்
 • லாரி பேக்கர்
 • கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன்
 • என் பதிவு:
  ராஜேந்திர பிரசாதின் At the Feet of Mahatma Gandhi