ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை

மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து:

பிரசித்தமான சகல ஜனங்களாகிய வெள்ளைக்காரர், தமிழர், மற்றுமுள்ள கறுத்த ஜனங்களுக்கு அறிவிக்கிறதாவாது:

லாகிரி வஸ்துவாகிய பல வித சாராய வகைகள் கோடை காலமாகிய உஷ்ண காலங்களிலே வாய் கட்டாமல் மிகுதியாய்க் குடிக்கிறவர்களுக்கு மிகுதியும் வியாதிகள் சம்பவக்கிரபடியால் இந்த அவசரமான வேளையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம். நிற்க உத்தாரமாக கட்டளை இட்டதாவது. எந்தச் சாதியில் எப்பேர்ப்பட்டவராகிலும், மார்ச்சு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும், பிராந்தி சாராயம், லிக்கர் சாராயம், பத்தாவி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம் மற்றுமுள்ள சுளுக்கான சாராயங்கள் விற்றாலும் விற்பித்தாலும், கொஞ்சமானாலும் ரொம்பவானாலும் பின்னே எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும், கொடுத்து ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது. அபராதம் வாங்கிய வராகனிலே பிச்சைக்காரருக்கு ஒரு பங்கு கொடுத்துவிடுகிறது. இந்த உத்தாரத்தை, பயமுறுத்தி மிரட்டுகிறதாக எண்ணத் தேவையில்லை. மெய்யாக இந்த கட்டளைப்படிக்கு நடத்துவோம். தமிழர்களாவது பறையர்களாவது கரிகாப்பு இல்லாதவர்களாவது இவர்கள் சொலுதாதுகளுக்காவது பின்னை யாவருக்காவது விற்றாலும் கொண்டு வந்து கொடுத்தாலும், கூலிக்கு எடுத்துப் போனாலும் இது சாட்சி சாதகத்துடனே அகப்பட்டால், அவர்களை சாவடியிலே கட்டி அடிச்சு, வலது தோளிலே சுணக்கி முத்திரை போட்டு குண்டுக்கு வெளியே துரத்திவிடுகிறது. தோட்டங்களிலே, வீட்டுக் கொல்லைகளிலே, தென்னை மரம் வைத்திருக்கிறவர்கள் எவர்களுக்காவது தோட்டங்களிலேயாவது, வீடுகளிலேயாவது, மற்ற இடங்களிலேயாவது கள்ளு ஒரு காசு அளவிலே விற்றாலும், விற்கச் செய்தாலும், யாதொருத்தர் குடித்தாலும் குடிக்கச் செய்வித்தாலும், அவர்களுக்கும் முன்னே எழுதி இருக்கிற ஆக்கினையும் அபராதமும் நடக்கும். கள்ளு இறக்குகிறவர்கள், காபியாக்கி விற்றுக் கொள்ளலாம். அவரவர்களும் அவரவர் வீட்டிலே வைத்திருக்கிற பல்லய்ய வித சாராயங்களை மூன்று நாளைக்குள்ளாக கிரேபுக்கு வந்து மிசியோ திமிரேன் கையிலே, இவ்வளவு இருக்கிறதென்று வெளியாகச் சொல்லி எழுதுவித்து கையெழத்துப் போட்டுக் கொடுக்கிறது. கிரேபிலே சொல்லி எழுதுவிச்சவர்களுக்கு கொடுக்கத் தக்கது கொடுத்து, மற்றதை கும்பனீர் மக்செனிலே எடுத்துக் கொண்டு அதுக்குள்ளே கிரயம் கொடுத்துவிடுகிறது. இப்படிச் சகல ஜெனங்களும் அறிந்து கொள்ளவும்.

இது கவர்னர் டூமாவின் (Dumas) கட்டளையை தன டைரியில் எழுதி இருப்பதாம். பிரபஞ்சன் இது சமூக ஆய்வாளர்களுக்கு பயன்படும் என்று அப்படியே கொடுத்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை 1709-1761 காலத்தில் வாழ்ந்தவர். இந்த உத்தரவு வந்தது 1735 வாக்கில் இருக்க வேண்டும்.

தமிழ் வினோதமாக இருக்கிறது. என் கண்ணில் பட்டவற்றை நான் ஹைலைட் செய்திருக்கிறேன். சில விஷயங்கள் ஒரு மாதிரி குன்ஸாகத்தான் புரிகிறது. சில இடங்களில் கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. (கோனார் நோட்ஸ் இப்போதெல்லாம் வருகிறதா?) உதாரணமாக குண்டுக்கு வெளியே என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. அப்படி என்றால் கோட்டைக்கு வெளியே என்று அர்த்தமாம்! போர்கள் மலிந்த அந்த காலத்தில் இது makes sense!

பத்தாவி சாராயம் – இப்படி என்றால் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேளை Batavia -விலிருந்து வந்த சாராயமாக இருக்குமோ? படாவியா என்பது இந்தோனேஷியாவில் உள்ள ஜாகர்த்தாவின் பழைய பெயர்.

கோவை சாராயம் – இந்த டைரி எழுதப்பட்ட காலத்தில் கோயம்புத்தூர் பெரிய ஊராக இருந்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இல்லாவிட்டால் இதை கோயம்புத்தூர் சாராயம் என்று பொருள் கொள்ளலாம்.

சுளுக்கான சாராயங்கள் – சாராயத்தில் என்ன சுளுக்கு?

அபராதத்தில் பிச்சைக்காரருக்கு ஒரு பங்கு! – எதற்கு?

தமிழர்களாவது பறையர்களாவது – தமிழர் வேறு, பறையர் வேறு! பறையர் தமிழர் இல்லை!

கரிகாப்பு இல்லாதவர்கள் – அது என்ன கரிகாப்பு?

சொலுதாதுகள் – சோல்ஜர் என்று அர்த்தமாம். பிரபஞ்சன் சொல்கிறார். ஃப்ரெஞ்ச் தெரிந்த டோண்டு ராகவன் மாதிரி யாராவது இது ஃப்ரெஞ்ச் வார்த்தையா என்று சொல்லுங்கள்.

சாவடியிலே கட்டி அடிச்சு – சத்திரம் சாவடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாவடி என்றால் சத்திரம் மாதிரி என்று நினைத்திருந்தேன். சாவடி அந்த காலத்து போலீஸ் ஸ்டேஷனோ?

வலது தோளிலே சுணக்கி – அது என்ன சுணக்கி?

குண்டுக்கு வெளியே – கோட்டைக்கு வெளியே

கள்ளு இறக்குகிறவர்கள் காப்பியாக்கி விற்றுக் கொள்ளலாம். – கள்ளை எப்படி காப்பியாக்குவது? அது என்ன விதமான காப்பி?

பல்லய்ய வித சாராயங்கள் – பல்லய்ய என்றால் பல என்று அர்த்தமா?

க்ரேபு – ஒரு வித அலுவலகமாம். பிரபஞ்சன் சொல்கிறார்.

மிசியோ – monsieur.

கும்பனீர் மக்சென் – கும்பனீர் என்றால் கம்பெனியார். மக்சென் என்றால்?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பின் குறிப்பு: ஜி.யு. போப் Tamil Prose Reader என்று ஒரு புத்தகத்தை பதிப்பித்திருக்கிறார். பல தரப்பட்ட தமிழ் – கடிதங்கள், கோர்ட் கேஸ் விவகாரங்கள், உத்தரவுகள் இந்த மாதிரி – அந்த புத்தகத்தில் பார்க்க கிடைக்கும். எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில் வந்தவை. என்னிடம் ஒரு காப்பி இருக்கிறது, எங்கே என்றுதான் தெரியவில்லை. ஃப்ரீமாண்ட் நூலகத்திலும் கிடைக்கும். படித்துப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்