விஸ்வாமித்ரருக்கு ஏது பிராமண சந்ததியர், இந்த விஸ்வாமித்ர கோத்ரம் எங்கிருந்து வந்தது என்று நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். பிறகு எப்போதோ தேவி பாகவதத்தில் படித்தது நினைவு வந்தது.

ஹரிச்சந்திரன் சத்தியசந்தன், என்ன கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லமாட்டான், அவனை விஸ்வாமித்ரர் பல விதமாக கஷ்டம் கொடுத்து சோதித்தார் என்ற கதை நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தேவி பாகவதத்தில் வேறு ஒரு கதை வருகிறது.

ஹரிச்சந்திரனுக்கு ரொம்ப நாளாக குழந்தை இல்லை. பிறகு அவன் வருணனிடம் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்றும், பிள்ளை பிறந்தால் அதை வருணனுக்கே யாகம் செய்து பலி கொடுத்துவிடுவதாகவும் வேண்டிக் கொள்கிறான். பலி கொடுப்பதற்கு பிள்ளை எதற்கு என்றெல்லாம் யோசிக்காதீர்கள். வருணனும் மனம் மகிழ்ந்து உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று வரம் கொடுக்கிறான். லோகிதாசனும் பிறக்கிறான். வருணன் யாகம் செய்து பலி கொடு என்று கேட்கிறான். ஹரிச்சந்திரன் இல்லை இல்லை பிள்ளை கொஞ்சம் வளரட்டும் என்று சொல்ல வருணனும் ஒத்துக் கொள்கிறான். இப்படியே பல தடவை தவணை கேட்கிறான். அதற்குள் ஓரளவு விவரம் தெரிந்துகொண்ட லோகிதாசன் எங்கோ ஓடிவிடுகிறான். கோபம் வந்த வருணன் ஏதோ வியாதி வரும் என்று ஹரிச்சந்திரனுக்கு சாபம் கொடுக்கிறான். லோகிதாசனும் இல்லை, என்னதான் வழி என்று ஹரிச்சந்திரன் யோசித்து சுனச்சேபன் என்ற ஏறக்குறைய அதே வயது பையனை அவன் பெற்றோர்களிடமிருந்து வாங்கி அவனை யாகத்தில் பலி கொடுக்க ஏற்பாடு செய்கிறான். வருணனும் பலி பெற்றுக் கொள்ள ரெடி. யாகம் நடக்கும் வேளையில் அங்கே வரும் விஸ்வாமித்ரர், என்னமோ சொல்லி வருணனை சாந்திப்படுத்தி சுனச்சேபனை மீட்கிறார். சுனச்சேபன் தன்னை விற்ற பெற்றோர்கள், தன்னை காப்பாற்ற தவறிய அரசன், ஆகியோரிடம் மீண்டும் போக விரும்பவில்லை. விஸ்வாமித்ரர் அவனை தன மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

விஸ்வாமித்ர கோத்ரம் சுனச்சேபனிடமிருந்து வந்திருக்கலாம். சமீபத்தில் எங்கோ படித்தேன் – சுனச்சேபன் விஸ்வாமித்ரரின் மருமகன்(nephew) என்றும் அவரது நூறு ஒரிஜினல் பிள்ளைகளும் சுனச்சேபனை தங்கள் சகோதரனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், அதனால் அவர் அந்த பிள்ளைகளை சபித்துவிட்டார், அந்த பிள்ளைகள் விந்திய மலையை தாண்டி தெற்கில் விஸ்வாமித்ர கோத்ரத்தை பரப்பினார்கள் என்றும் படித்தேன். எனக்கு நினைவிருப்பது விஸ்வாமித்ரர்-வசிஷ்டர் சண்டையில் அவரது நூறு பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள் (சண்டையின் போது விஸ்வாமித்ரர் ராஜா, அவரது பிள்ளைகளை க்ஷத்ரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்) என்றுதான்.

சுனச்சேபனுக்குத்தான் விஸ்வாமித்ரர் காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார் என்றும் மங்கலாக ஒரு நினைவு இருக்கிறது.

ஹரிச்சந்திரன் பல தடவை வருணனிடம் பொய் சொல்கிறான். ஆனால் பிறகு சத்தியசந்தனாக மாறிவிடுகிறான். ஒரு வேளை இது வேறு ஹரிச்ச்சந்திரனோ? ஆனால் பையன் பேரும் சரியாக லோகிதாசன் என்றே இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்
விச்வாமித்ர கோத்ரம்