கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்த வேண்டும் என்று கேட்டதற்காக எரிக்கப்பட்டவர்களை நாம் எல்லாரும் அனேகமாக மறந்தேவிட்டோம். தமிழ் நாட்டின் மோசமான களங்கம் என்பது எரித்த கோபாலகிருஷ்ண நாயுடு கோர்ட்டில் நிரபராதி என்று வெளியே வந்ததுதான். இன்றைக்கு கீழ்வெண்மணி பற்றி சில சமயம் தலித் சார்பு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன, அவ்வளவுதான். இன்றைய இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்தால்தான் ஆச்சரியம் என்று நினைக்கிறேன்.

இத்தனை மோசமான நிகழ்ச்சி கதைகளிலும் இலக்கியத்திலும் பெரிய இடம் வகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை போன்ற ஒரு அநியாயம் இலக்கியவதிகளை எழுதத் தூண்டாதது ஆச்சரியம்!

எனக்கு தெரிந்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் – சாகித்ய அகாடமி பரிசு பெற்றது – மூலமாகத்தான் என் ஜெனரேஷன் ஆட்களில் பலர் இதை பற்றி தெரிந்தே கொண்டோம். இத்தனைக்கும் குருதிப் புனல் அவ்வளவு நல்ல நாவல் இல்லை. அதை தேவை இல்லாமல் நாயுடு காரக்டர் ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆண்மைக் குறைவு உள்ளவன் என்று இ.பா. எங்கெங்கோ கொண்டு சென்றார். இ.பா. என்ன நினைத்தாரோ தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை பற்றி யாரிடம் பேசினாலும் அந்த ஓரினச்சேர்க்கை ஆவல் ஆண்மைக் குறைவு பற்றி பற்றி பேச்சு வராமல் இருந்ததில்லை.

எனக்கு தெரிந்த முக்கியமான புத்தகம் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் என்ற நாவல். இலக்கியத் தரம் என்று பார்த்தால் அவ்வளவு நல்ல நாவல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மிக முக்கியமான ஆவணம். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கிறது.

சமீபத்தில் பாட்டாளி என்பவர் எழுதிய கீழைத்தீ என்ற ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. லக்கி லுக் இதற்கு ஒரு அறிமுகம் எழுதி இருக்கிறார். விடுதலை ஆன நாயுடுவை நக்சலைட்கள் கொன்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கீழ்வெண்மணியை பற்றி எழுதும்போது நினைவு வரும் பெரும் உறுத்தல் பெரியார் அதை கூலி உயர்வு கேட்ட கம்யூனிஸ்டுகளின் தவறு என்று பேசியது. பெரியார் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் அவரது தாக்கம் தமிழ் நாட்டில் உருவாக்கி இருக்கும் நல்ல விளைவுகளை மறுக்க முடியாது. ஆனாலும் சேரன்மாதேவி குருகுலத்தில் இரண்டு பிராமணப் பையன்களுக்கு தனிப் பந்தி இருந்ததை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறியவர் 42 தலித்கள் எரிக்கப்பட்டதை பற்றி பொங்கி எழுந்திருக்க வேண்டாமா? அவரது focus பிராமணர்களின் செல்வாக்கை குறைத்து பல “இடைப்பட்ட” ஜாதியினரின் செல்வாக்கை அதிகரிப்பதிலேதான் இருந்திருக்கிறது. எனக்கு அப்படித் தோன்ற பெரிய காரணம் அவர் கீழ்வெண்மணி சம்பவம் பற்றி எடுத்த நிலைதான்.

மகிழ்ச்சி தரும் பெரிய விஷயம் கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் ஏற்படுத்திய லாஃப்டி அமைப்பு. ஏழைகளுக்கு, குறிப்பாக தலித்களுக்கு நிலம் கிடைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள்/படுகிறார்கள். பாராட்ட வார்த்தை இல்லை.

தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – ஒரு மதிப்பீடு

Advertisements