டாக்டர் நாகசாமியின் தமிழ் ஆர்ட்ஸ் அகாடமியை பற்றி இந்த பதிவில் எழுதி இருந்தேன். இப்போது ஸௌந்தர்ய லஹரியின் மொழிபெயர்ப்பு ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.

ஸௌந்தர்ய லஹரி ஆதி சங்கரர் இயற்றியதாக சொல்கிறார்கள். எனக்கு அதிகம் தெரியாது – விகிபீடியாவிலிருந்து: இது ஒரு தாந்த்ரிக வழிபாட்டு முறையை விளக்கும் ஸ்லோகமாம். முதல் பகுதியான ஆனந்த லஹரியில் சிவனும் சக்தியும் இணைந்து செயல்படுவது, வழிபாடுகள், குண்டலினி பற்றிய விளக்கங்கள் எல்லாம் இருக்கிறதாம். இரண்டாம் பகுதியில் சக்தியின் அழகு விவரிக்கப்படுகிறதாம்.

தமிழில் இதை கவிதையாக எழுதியவர் பேர் வீரை கவிராஜ பண்டிதராம். சோழ மன்னர்கள் காலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர் நாகசாமி யூகிக்கிறார். எனக்கு மொழிபெயர்ப்பை விட இது எப்போது எழுத்தப்பட்டது என்று அவர் யூகம் செய்யும் கட்டுரை மிக பிடித்திருந்தது. கழுதைக்கும் கற்பூர வாசனைக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் கவிதைக்கும் எனக்கும் உண்டு என்று எல்லாருக்கும் போரடிக்கும் வரை சொல்லிவிட்டேன். ஆனால் இந்த மாதிரி பழைய இலக்கியங்களை தேடித் பிடித்து பதிப்பது பெரிய விஷயம் என்ற வரைக்கும் புரிகிறது. கவிஞர் பயன்படுத்தி இருக்கும் தமிழும் ஒரு மாதிரி குன்சாக புரிகிறது.

முதலில் வீரை என்றால் வீரவநல்லூராக இருக்கலாம் என்று எழுதி இருந்தார். வீரவநல்லூர் என் அம்மாவின் பாட்டியின் சொந்த ஊர். எனக்கு எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. இருந்தாலும் அப்படி படித்தபோது ஒரு சின்ன சந்தோஷம் வருகிறது! இத்தனைக்கும் அது வீரவநல்லூராக இருப்பதைவிட வேறு ஏதாவது சோழ நாட்டை சேர்ந்த “வீர” ஊராக இருக்கலாம் என்று அவர் கடைசியில் சொல்கிறார்!

அவரது தவம் செய்த தவத்தில் ஒரு பகுதியை சமீபத்தில் பாஸ்டன் பாலா குறிப்பிட்டிருந்தார். அருமையான பகுதி – அவரது dedication, commitment இரண்டும் அந்த பகுதியில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!

லஹரியின் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பையும் சமஸ்கிருத வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி இருப்பதையும் இங்கே காணலாம்.

தொடர்புடைய பதிவுகள்:
ஸௌந்தர்ய லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு
ஸௌந்தர்ய லஹரி தமிழ் மொழிபெயர்ப்பின் கதை
ஸௌந்தர்ய லஹரி ஆங்கில மொழிபெயர்ப்பு
விக்கிபீடியா குறிப்பு

தவம் செய்த தவத்திலிருந்து ஒரு பகுதி – அதியமான் கல்வெட்டு
வரலாற்று அறிஞர் டாக்டர் நாகசாமி – சிறு அறிமுகம்