தன் ஒரு வயது பெண்ணுடனும், அமெரிக்க ஓபன் கப்புடனும் கிம் க்ளைஸ்டர்ஸ்

தன் ஒரு வயது பெண்ணுடனும், அமெரிக்க ஓபன் கப்புடனும் கிம் க்ளைஸ்டர்ஸ்

26 வயது கிம் க்ளைஸ்டர்ஸ் (Kim Clijsters) அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேற்று வென்றார். இது என்ன பெரிய விஷயம்? யாராவது ஜெயிக்கத்தான் போகிறார்கள். கிம்முக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அதுதான் விஷயம்.

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகளை ஒன்பது பத்து மாதம் வயிற்றில் சுமப்பது உடல் ரீதியாக பெரிய விஷயம். குழந்தை பிறந்த பிறகு உடல் பெரிதும் மாறுகிறது. எந்த விளையாட்டிலும் – குறிப்பாக டென்னிஸ் போன்ற விளையாட்டில் – இந்த மாறுதல்களை மீறி நல்ல முறையில் விளையாடுவது மிக பெரிய விஷயம். கிம் குறிப்பிட்டு சொன்னது – “குழந்தை பிறந்த பிறகு மெதுவாக கால்களுக்கான பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன், கைகளுக்கான பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன், ஆனால் வயிற்று பகுதியில் உள்ள தசைகளுக்கான பயிற்சிகளை செய்து அந்த தசைகளை நல்ல கண்டிஷனுக்கு கொண்டு வரத்தான் படாத பாடு பட வேண்டியதாகிவிட்டது.” டென்னிசில் இடை விடாமல் ஓட வேண்டி இருக்கிறது. Forehand, backhand இரண்டுக்கும் இடுப்பை நன்றாக வளைக்க வேண்டி இருக்கிறது. எனக்கு தெரிந்து சமீபத்தில் 1980-இல் (எனக்கும் டோண்டு சாரின் மானரிசம் தொற்றிக் கொண்டுவிட்டதே?) இவோன் காலி (Evonne Cawley) தாயானா பிறகு விம்பிள்டன் ஜெய்த்திருக்கிறார். அதற்கு பிறகு கிம்தான்.

ஒரு வருஷத்தில் எப்படித்தான் செய்தாரோ? கிம் தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் என் போன்றவர்களுக்கு inspiration. தாயான பிறகு கிம் அமெரிக்க ஓபன் ஜெயிக்க முடியும் என்றால் என்னால் என் தொப்பைய கரைக்க முடியாதா? என் எடை இன்று கிட்டத்தட்ட 77 கிலோ. இடுப்பளவு 36 இன்ச். இன்னும் ஒரு வருஷத்துக்குள் பத்து கிலோ எடை குறைப்பது என்று தீர்மானித்து அதை வெளியேயும் சொல்கிறேன். வாழ்க கிம்!

Advertisements