(இது ஸ்ரீ சேதுராமனின் இடுகை)

இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தின் நூறாவது ஆண்டு விழா தமிழகமெங்கும் – ஏன் தமிழர்கள் இருக்கும் தேசங்களில் எல்லாம் – கொண்டாடப்படுகிறது.

Anna

1909ம் வருஷம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி, காஞ்சிவரத்தில், ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு. அண்ணாதுரை.  பெற்றோர் திரு.நடராசன், பங்காரு அம்மாள் – அண்ணாதுரையை வளர்த்து ஆளாக்கியது அவரது சிற்றன்னை இராஜாமணி அம்மாள் (தொத்தா)

காஞ்சியிலேயே தன் ஆரம்ப, உயர் படிப்பை பச்சையப்பன் ஹைஸ்கூலில் முடித்தவர், தன் கல்லூரிப் படிப்பை, சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தொடர்ந்தார்.  கல்லூரியில் படிக்கும்போதே, 1930ம் வருஷம் திருமதி. ராணி அம்மாளுடன் அவரது திருமணம் நிகழ்ந்தது.  கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சட்டம் படிக்க, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், நிதி வசதியின்மை காரணமாக, சட்டப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.  1938ம் வருடம் நடந்த ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக நான்கு மாதங்கள் சிறைவாசம் கிடைத்தது.

தமிழில் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் – அவரது முதல் சிறுகதை 1934ம் வருஷம் ஆனந்தவிகடனிலும் (கொக்கரக்கோ), முதல் குறு நாவல் “கோமளத்தின் குறும்பு” 1939 குடியரசு இதழிலும் வெளியாகின.  குடியரசு இதழிலேயே அவரது “வீங்கிய உதடு” என்ற புதினம், 1940ல் தொடர்கதையாக வந்தது.

அவர் எழுதிய முதல் நாடகம் ‘சந்திரோதயம்’ – அடுத்தது ‘சந்திர மோகன்’ அல்லது ‘சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம்’  – இந்த இரண்டாவது நாடகத்தில் அவரே “காக பட்டர்” என்ற வேஷத்தில் நடித்தவர்.  சிவாஜியாக நடிக்கவிருந்த எம்.ஜி.ஆர். கடைசி நிமிஷத்தில் மறுத்து விட்டதனால், டி.வி.நாராயணசாமியின் வேண்டுகோள்படி, வி.சி.கணேசன் சிவாஜி  பாத்திரமேற்று நடித்தார். பெரியார் அவர்களுக்கு கலை மீது அவ்வளவு ஆர்வம் கிடையாது, கலைதான் தமிழ்ச் சமுதாயத்தையே சீரழிக்கின்றது என்ற எண்ணம் அவருக்கு. அவர் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, கணேசனைச் சிறப்பாக நடித்தாய் இனி நீ “சிவாஜி”தான் என்று பெயரிட்டார்.

தொடர்ந்து அண்ணா அவர்கள்  – ஓரிரவு, வேலைக்காரி, நீதி தேவன் மயக்கம், காதல் ஜோதி, நல்லதம்பி, சொர்க்கவாசல் முதலிய
நாடகங்களை எழுதினார். இவற்றுள் சில திரைப்படங்களாகவும் வந்தன.

1942ல் “திராவிட நாடு” ஆசிரியர் பதவியை ஏற்றவர், 1949, வருஷம் “மாலை மணி”யின் ஆசிரியரானார்.   இதே வருஷம், பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக ஏற்பட்ட மன வேறுபாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்தை செப்டம்பர் 17ம் தேதியன்று தோற்றுவித்து முதல் பொதுச் செயலாளர் பதவியேற்றார். தி.மு.க. 1952ல் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு, கட்சியைத் தீவிரமாக வளர்த்தார்.

1959ம் வருடம் நடந்த சென்னை மாநகரக் கார்ப்பரேஷன் தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்று, மேயர் பதவியைப் பெற்றது.  வெற்றிகள் தொடர்ந்தன. 1967ம் வருடம், தி.க.வாலும், தி.மு.க.வாலும் “குல்லுக பட்டர்” என்று வர்ணிக்கப்பட்ட, ராஜாஜியின் காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கை காரணமாக அவ்வருடம் நடந்த மாநிலத் தேர்தலிலும், 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம்.  அன்று தமிழ் நாட்டின் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்று வரை, திரும்ப ஆட்சி அமைக்க முடியாமற் போனது!

1967ம் வருடம் மார்ச்சு 6ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார் அண்ணா. மாநிலத்தின் பெயரைத் “தமிழ் நாடு” என்று பெயரிட்டதும், படியரிசித் திட்டம் கொணர்ந்ததும் இவரே.

அமெரிக்க அரசின் ‘லீடர்ஷிப் எக்ஸ்சேஞ்ச்” என்ற திட்டத்தின் படி, அண்ணா ஒரு அமெரிக்கப் பயணம் செய்ததும் இந்த வருஷம்தான். அவரது பயண ஏற்பாடுகளை சென்னையிலிருந்த TRANS WORLD AIRLINESதான் செய்து கொடுத்தது.  நானும், என் மேலாளர் திரு.கே.ஆர்.கிருஷ்ணஸ்வாமியும் அப்போது பல முறை அவரது காரியாலயத்தில் சந்தித்து, ரோம், பாரிஸ், வாஷிங்க்டன் முதலான இட்ங்களில் தங்குமாறு வரையறுத்துக் கொடுத்தோம். புகழ் பெற்ற யேல் பல்கலைக் கழகத்தின் Chubb Fellowship பெற்ற இந்தியர் அண்ணாதான் என்று நினைக்கிறேன். ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து, மே 12 வரை, இந்தப் பயணம் நீடித்தது. அமெரிக்காவிலிருந்து, திரும்பி வரும்போது, ஜப்பான், சிங்கப்பூர் வழியாக வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தனது உடல் நிலை காரணமாக, அண்ணா மறுபடியும் செப்டம்பர் மாதமே அமெரிக்கா செல்ல வேண்டியதாயிற்று.  சிகிச்சை முடிந்து நவம்பர் மாதம் இந்தியா திரும்பிய அண்ணா, கடைசியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி 1969 பொங்கல் திரு நாளன்று, தியாகராய நகரில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு தான். அவருடைய உடல் நிலை மீண்டும் மோசமாகி ஃபிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு (ஃபிப்ரவரி 3ம் தேதி 00:20) அண்ணா காலமானார்.   அடுத்த நாள் ஃபிப்.4 சென்னைப் பல்கலைக் கழகக் கட்டடத்திற்கு எதிரே அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.

பல லட்சம் மக்கள் பங்கேற்ற, இது வரை கண்டிராத, ஒரு பெரிய இறுதி ஊர்வலம் அன்று நடை பெற்றது.

(செய்தி ஆதாரம் – பேரறிஞர் அண்ணாவின் மக்களாட்சிச் சிந்தனைகள் – தமிழ்மண் பதிப்பகம் – சென்னை 1999– மற்றும் வலைத்தளச் செய்திகள்)

ஆர்வி: திரு சேதுராமன் பயண ஏற்பாடுகளை கவனிக்கும் travel agency ஒன்று நடத்தி வருகிறார் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது. அவர்தான் அண்ணாவின் அமெரிக்க பயண ஏற்பாடுகளை கவனித்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது.

தொடர்புடைய பதிவுகள்:
ஓரிரவு (Oriravu)
ஓரிரவு பற்றி கல்கி