டாக்டர் ஆர். நாகசாமி

டாக்டர் ஆர். நாகசாமி

சேதுராமன் உத்தரமேரூர் கல்வெட்டுகளை பற்றி இரண்டு பதிவுகள்( 1, 2 ) எழுதி இருந்தார். இந்த புகழ் பெற்ற கல்வெட்டுகள் கிராம தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி விவரிக்கின்றன. இதை படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள்.

சேதுராமன் டாக்டர் நாகசாமியின் தவம் செய்த தவம் என்ற புத்தகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். டாக்டர் நாகசாமி என் தங்கையின் மாமனார். இப்போது அமெரிக்காவில்தான் இருக்கிறார். சீக்கிரமே இந்தியா திரும்பப் போகிறார் என்று போன வாரம்தான் மையாமியில் வசிக்கும் என் மைத்துனன் மோகன் சொன்னான். He is a true scholar. தமிழ் நாட்டு செப்பு சிலைகளை பற்றி இவரை விட அதிகம் தெரிந்தவர் யாரும் இருக்க முடியாது. லண்டனுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலை விவகாரம் ஞாபகம் இருக்கலாம். லண்டனுக்கு சென்று கோர்ட்டில் சாட்சி சொன்ன expert witness இவர்தான். அந்த சிலையை பற்றிய பல விவரங்களை சந்தேகத்துக்கிடமில்லாமல் கோர்ட்டில் நிறுவி, அதை மீண்டும் தமிழ் நாட்டுக்கு கொண்டு வர பெரும் பணி ஆற்றினார். தமிழ் நாட்டு ஆர்க்கியாலஜி துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகும் அக்கடா என்று ஓய்வாக உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. Conferences, உள்/வெளி நாடு பல்கலை கழகங்களில் visiting professor ஆக போய் வருதல், சிதம்பரம் நாட்டியாஞ்சலி, ஒரு இசை நாடக குழுவை அமைத்து அதன் மூலம் பல நாடுகளில் இந்திய கலைகளை பரிச்சயம் செய்து வைத்தல் என்று அயராத உழைப்பு. தமிழ், சமஸ்கிருதம், வரலாறு – குறிப்பாக கல்வெட்டுகள், நாணயங்கள், சிற்பம், ஆகியவற்றில் நிபுணர். ஒரு முறை தஞ்சாவூர் கோவிலுக்கு போயிருந்தோம்.அங்கே சுவற்றில் எழுதி இருக்கும் (எனக்கு) கஷ்டமான லிபியை அவர் பாட்டுக்கு காலையில் எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டு ஹிந்து பேப்பர் படிப்பது போல படித்துக் கொண்டே போனார். இப்படி பெரிய நிபுணராக இருந்தாலும் எல்லாருடனும் அவரவர் லெவலில் சாதாரணமாக பேசுவார். நான் பெரிய பிஸ்தா என்றெல்லாம் துளி கூட கர்வம் கிடையாது. அவர் மகன் மோகன் அவரது பல புத்தகங்களை இணையத்தில் பதித்து வருகிறார். அவற்றை இந்த தளத்தில் காணலாம்.

மகிழ்ச்சிக்கு இரண்டாவது காரணம் நான் ஆறு வயதிலிருந்து 12-13 வயது வரை வசித்த இரண்டு கிராமங்களும் – லாடாகரனை எண்டத்தூர், மானாம்பதி – உத்தரமேரூருக்கு மிக அருகே உள்ளவை. அந்த காலத்திலேயே அரை மணி நேரம் பஸ்சில் போனால் போய்விடலாம். சிலர் சைக்கிளில் கூட சில சமயம் போவதுண்டு. என்ன, அந்த வயதில் கல்வெட்டு பற்றி எல்லாம் தெரியாது. தெரிந்திருந்தாலும் உத்தரமேரூரில் இருந்த சினிமா தியேட்டர்தான் அந்த வயதில் கனவாக இருந்ததே தவிர கோவில், கல்வெட்டு எல்லாம் இல்லை. 🙂 உத்தரமேரூரில் ஒரு பெரிய ஏரி உண்டு. அந்த காலத்தில் தந்திவர்ம பல்லவ ராஜா கட்டியது. அதையும் பக்கத்தில் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை கை கூடவில்லை. என்றாவது ஒரு நாள் திரும்பிப்போய் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:
தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி
அந்த கால தேர்தல்கள் 1
அந்த கால தேர்தல்கள் 2
Poetry In Stone தளத்தில் டாக்டர் நாகசாமி பற்றி

Advertisements