பதிவு எழுதுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில் வசந்தகுமார் எங்களை சுவாரசிய பதிவர்களாக தேர்ந்தெடுத்தார். நன்றி கூட சொல்லாமல் கம்மென்று இருந்துவிட்டோம். அவர் எங்களை மன்னிப்பாராக.

மௌனமாக இருந்த நேரத்தில் எதற்காக இணையத்தில் எழுதுகிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நான் காந்தியோ, தோரோவா, அம்பேத்காரோ, ராமச்சந்திர குஹாவோ ஜெயமோஹனோ இல்லை. உலகத்துக்கு சொல்ல என்னிடம் ஒரு செய்தியும் இல்லை. என் எண்ணங்கள், ரசனை ஆகியவை இந்த உலகத்துக்கு தெரியாவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது. அப்படி இருக்கும்போது எழுதுவதால் எனக்கு என்ன லாபம், படிப்பவர்களுக்கு என்ன லாபம்?

பெரிதாக எதுவும் இல்லை. ஓரளவு கலந்து பேச முடிகிறது. அப்படி கலந்து பேசும்போது நம் எண்ணங்கள் மேலும் தெளிவடைகின்றன. முகத்தையே பார்க்காவிட்டாலும் சிலர் நண்பர்கள் ஆகிறார்கள். ரசனையில் ஒரே வேவ்லேங்த் உள்ள சிலர் அறிமுகம் ஆகிறார்கள். நமக்கு பொதுவாக பிடிக்கும் சில பதிவர்களை வைத்து நாமே ஒரு “செய்தித்தாள்” உருவாக்கிக்கொள்ள முடிகிறது. அவ்வளவுதான்.

வசந்தகுமார் எங்களுக்கு அளித்த சுவாரசிய பதிவர் விருது அந்த விதத்தில் மிக பயனுள்ளது. அவர் விருதளித்திருக்கும் மற்றவர்களில் நான் லதானந்த் தவிர மற்றவர்கள் பற்றி கேள்விப்பட்டதில்லை. எங்களுக்கு விருது கொடுத்தற்கு மட்டுமல்ல, மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கும் நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் எழுதுவதை ஒருவர் படிக்கிறார் என்பதே சந்தோஷத்தை தரும். அவர் எங்களுக்கு விருதே கொடுக்கிறார் என்றால் அது பெரிய மகிழ்ச்சியை தருகிறது.

வசந்தகுமார் சொல்கிறார் – விருது பெற்றவர்கள், தாங்களும் ஆறு பேரைக் கூப்பிட்டுக் காட்டி விட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஒரே நிபந்தனை, அவர்கள் சுவாரஸ்யமாய் எழுதுகிறார்கள் என்று விருதினர் நம்பியிருக்க வேண்டும்.

இதற்கு பின் வருவது என் (ஆர்வி) சுவாரசிய பதிவர் தேர்வுகள். திட்ட வேண்டுமென்றால் என்னை திட்டுங்கள், பக்சை விட்டுவிடுங்கள்.

சுவாரசிய பதிவர்கள் லிஸ்டில் பிரபலமான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், டோண்டு போன்றவர்களை நான் சேர்க்க விரும்பவில்லை. அவ்வளவாக பிரபலமாக இருக்க கூடாது, நான் அவர்களை RSS மூலம் படிக்க வேண்டும் என்ற இரண்டு கண்டிஷன்களுக்கு உட்பட்டே தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

இதயம் பேத்துகிறது ஜவஹர்: இவர் க்ரோம்பேட்டைக்காரர், லக்ஷ்மி, வித்யா என்று சொன்னால் அது பல்லாவரம் லக்ஷ்மி தியேட்டர், தாம்பரம் வித்யா தியேட்டர் என்று புரிந்துகொள்வார் என்பதே மகிழ்ச்சியான விஷயம். குசும்புக்காரர். நல்ல நகைச்சுவை பதிவுகளை எழுதுகிறார்.

பூவனம் ஜீவி: ஜீவி ரொம்ப நாளாக எழுதுகிறார். நான் சமீபத்தில்தான் அவர் ப்ளாகை பார்த்தேன். அவர் எழுத்தாளர்களை பற்றி எழுதுபவை எனக்கு மிகவும் பிடித்தமானவை.

அழியாசுடர்கள்: இது யார் எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. கூட்டு முயற்சியாக இருக்கலாம். கட்டாயமாக படிக்க வேண்டிய தளம்.

நந்தவனம் சூர்யா: சூர்யா எங்கள் சினிமா பதிவுகளின் முதல் ரசிகர். அருமையாக எழுதுபவர்.

பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் – உங்கள் ரசிகன்: எழுத்தாளர் சாவியிடம் கற்றவர். மிக சுவாரசியமான பதிவர்.

கடைசியாக சிட்டி: சிட்டி புகழ் பெற்ற எழுத்தாளர். இப்போது சிட்டி உயிருடன் இல்லை. நிறைந்த வாழ்வு வாழ்ந்தவர். ஆனால் அவர் எழுதிய ப்ளாக் இன்னும் கிடைக்கிறது. கட்டாயம் புரட்டி பார்க்க வேண்டிய ப்ளாக். ( தி.ஜா.வும் இவரும் இணைத்து நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.)

கீழே உள்ளவர்கள் பிரபலமானவர்கள் என்று என் லிஸ்டில் சேர்க்கவில்லை.

பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் – தமிழிலே எழுதுவோம்
முரளி கண்ணன் – நீரோடை: இவரை நிச்சயமாக இந்த சீரிஸில் வேறு யாராவது சொல்லி இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. சினிமா பற்றி இவர் எழுதும் பதிவுகள் எல்லாம் சேகரிக்கப்பட வேண்டியவை.
எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் – நுனிப்புல்

Advertisements