உரையாடல் போட்டிக்கு நான் அனுப்பிய கதை தேர்வு பெற்றிருக்கிறது. இது எட்டு வருஷங்களுக்கு முன் எழுதிய கதை. இதற்கு முன் இதை படித்தவர்கள் என் மனைவி, என் நண்பர்கள் மனீஷ் ஷர்மா, சஞ்சய் மால்பானி. (தமிழ் தெரியாத நண்பர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதினேன்). தூக்கம் வராத ஒரு இரவில் நினைவிலிருந்து அந்த கதையை கொஞ்சம் மாற்றி தமிழில் எழுதினேன். இதுதான் நான் எழுதிய முதல் கதை. முதல் கதையே பரிசு பெற்றது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

250 கதைகளில் என் கதையையும் சேர்த்து 20 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஜ்யோவ்ராம் சுந்தரும் பைத்தியக்காரனும் கைக்காசு போட்டு போட்டியை நடத்தி இருக்கிறார்கள். எதிர்பாராத logistics பிரச்சினைகள் வந்தபோது அவர்களே வந்த எல்லா கதைகளையும் படித்து கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த அளவு தீவிர இலக்கிய ஆர்வம் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த போட்டியின் format இது வரை நான் பார்க்காத ஒன்று. போட்டிக்கு வந்த எல்லா கதைகளும் படிக்க விரும்புபவர்களுக்கு கிடைத்தன. நடுவர்களை தவிர வேறு யாரும் 250 கதைகளையும் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் படித்தவற்றில் ஒவ்வொருவருக்கும் இந்த கதை வெற்றி பெறும், இந்த கதை வெற்றி பெறும் என்று கணிப்புகள் இருந்திருக்கும். இந்த format எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் பைத்தியக்காரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! போட்டியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள்!

இது நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. காலம் தாழ்ந்துதான் நன்றியே சொல்கிறேன். பைத்தியக்காரனும் ஜ்யோவ்ராம் சுந்தரும் என்னை மன்னிக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:
அம்மாவுக்கு புரியாது சிறுகதை

Advertisements