(இது திரு.சேதுராமனின் இடுகையின் தொடர்ச்சி)

நாற்பதுகளில், சுதந்திரம் கிடைத்தற்கு முன்னரும், பின்னரும், காஞ்சி முனிவர் ஊர் ஊராகச் சென்று பல்வேறு விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றி வந்தது வழக்கமாயிருந்தது. இந்த உத்திரமேரூர் தேர்தலைப் பற்றி அவர் நிறையவே பேசியிருக்கிறார் – தேர்தல் எப்படி நடைபெற்றது என்று பார்க்கும் முன்னர், காஞ்சி முனிவரின் சொற்பொழிவுகளிலிருந்து சில முக்கியமான பகுதிகள்:

*** பொது ஜனங்களுக்கும் ஆட்சியிலே பங்கு தருகிற ஜனநாயகம் என்பது மேல்நாட்டினர் சொல்லிக் கொடுத்துத் தான் நமக்குத் தெரிய வந்தது என்ற ஒரு பொது அபிப்பிராயம் இருந்து வருகிறது. ஆனால் உண்மையிலேயே வேத காலத்திலிருந்தே ஜனங்களின் அபிப்பிராயம் பிரதிபலிப்பதற்கு இடம் கொடுத்துத் தான் ராஜ்ய நிர்வாகம் நடந்து வந்திருக்கிறது. வேதத்திலே ‘ஸபா’, ‘ஸமிதி’, ‘விததா’ என்று இரண்டு மூன்று அமைப்புகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறது ***

*** விஜயாலயனுக்குப் பிறகு இரண்டாம் பட்டமாக ஆட்சி புரிந்த பராந்தக சோழன் காலத்தில்தான் இந்தத் தேர்தல்கள் நடந்தன என்பது உத்திரமேரூரில் இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றது.உத்திரமேரூர் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ளது, இதற்குப் பேரூர் என்ற பெயரும் உண்டு.***

*** இந்த நாளில் ஊரை ‘வார்ட்’ என்று பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிற மாதிரி, அப்போது ஒவ்வொரு ஊரையும் பல ‘குடும்பு’களாகப் பிரித்திருக்கின்றனர். ஒரு குடும்புக்கு ஒரு பிரதி நிதியாக கிராம மஹாசபை அமைக்கப் பட்டது. பிரதி நிதிகள் எல்லோருமே தேர்தல் மூலம் பொறுக்கி எடுக்கப் பட்டு பதவிக்கு வந்தனர்–ஊராட்சி சபையின் ‘மெம்பர்ஷிப்’ பாரம்பர்யமாகவோ, அல்லது ராஜாங்க நியமனமாகவோ இல்லை – மணியம் மாதிரி அப்பா-பிள்ளை என்று தலைமுறை தத்துவமுமில்லை. Hereditary Appointment இல்லை, Nominated appointment இல்லை – எல்லாமே Elected Appointment தான்.***

*** தற்போது அரசியல் வாதிகளுக்கு வயதுக்கு மேல்வரம்பே இல்லை. முதல் கல்வெட்டில் வயது வரம்பு 30 முதல் 60 வரை என்றுதான் இருந்திருக்கிறது. அப்புறம் இன்னமும் ஆழமாகச் சிந்தித்து, இரண்டு வருஷங்கள் நடை முறையையும் பார்த்த பின்னர் முப்பதை முப்பத்தைந்து ஆக்கி, அறுபதை எழுபதாக்கியுள்ளார்கள். ***

*** எதிலே வயதான பெரியவர்கள் இல்லையோ அது ஸபையே ஆகாது – அவர்கள் அங்கம் வகிப்பதே முறையான ஸபை. உண்மையான விருத்தர்கள், தாங்கள் கற்றும் கேட்டும் தெரிந்து கொண்ட சத்ய, தர்மங்களை வாழ்க்கையில் நடத்திக் காட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ***

*** மேல் வரம்பு வைத்ததில் இன்னொரு சாரமான அம்சமும் இருக்கிறது. ஆரம்பத்திலே தியாகம் செய்தோ, மிக உயர்ந்ததான ஒரு திட்டம் போட்டோ, ஒரு இயக்கத்தை நடத்தியோ, ஜனங்களிடம் பிராபல்யம் பெற்று விட்டால் பிற்பாடு அவர் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் அது சரி என்றே ‘ஆமாம் சாமி’ போட ஆரம்பித்து விடுவார்கள் மக்கள். இப்படிப்பட்ட ஒரு தலைவர் அதிகார ஸ்தானத்தைப் பிடித்து விட்டால் அவரைப் பதவியிலிருந்து இறக்கமுடியாமற் போனது எல்லா தேசங்களிலும் உண்டு. இது நேராமல் தடுக்க உத்திரமேரூர் சபை ‘ஒரு வருஷம் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அடுத்த மூன்று வருஷங்கள், தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதித்திருந்தது. ***

வேட்பாளர் இல்லாத, வாக்காளர் இல்லாத தேர்தல் !!

தேர்தல் எப்படி நடந்தது? யார் நடத்தினார்கள்? முதலில் யார் நடத்தவில்லை என்று பார்ப்போமா? நடப்பிலிருக்கும் கிராம மஹாசபை அடுத்த சபைக்கான தேர்தலை நடத்தவில்லை!! ஏனெனில் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா சபை உறுப்பினர்களும் (வாரியத்தலைவர்கள் உட்பட) பதவி விலகிவிட வேண்டும். இதன் பின்னர் “தர்ம க்ருத்ய சபை” என்ற அமைப்பின் பொறுப்பிலேயே மத்யஸ்தர்களைக் கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கல்வெட்டு சாசனம் கூறுகிறது. யார் இந்த தர்ம க்ருத்ய சபை?

கிராம மஹாசபை தவிர, அதன் முப்பது குடும்புகள் தவிர, அவரவர் ஸ்வதர்மப்படி கர்மா செய்விக்கிற நாட்டாண்மைகளின் கீழ் கிராமம் பன்னிரண்டு ‘சேரி’களாக பிரிக்கப் பட்டிருந்தது. அக்ரஹாரமும் ஒரு சேரி தான். இந்தப் பன்னிரண்டு நாட்டாண்மைகளும் சேர்ந்ததுதான் ‘தர்ம க்ருத்ய சபை’ என்று ஊகம் செய்து சொல்கிறார்கள் தொல்பொருளாராய்ச்சியாளர்கள். இது மொத்த சமூகமும் சேர்ந்ததுதான் என்பது நிதர்சனம்– ஏனெனில் ஒரு கிராமத்தில் ஒரு அக்கிரஹாரமே இருக்கக் கூடும்!

ஒவ்வொரு குடும்பிலும் மக்கள் மதிப்பு வைத்திருக்கிற பெரியவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஒவ்வோன்றிலும் இது மாதிரி நிறையப் பேர்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவர் பேரையும் ஒரு தனி ஓலையில் எழுதிக் கொள்வார்கள். போட்டியிடுகிற அத்தனை பேர்களுக்கும் தலா ஒரு ஒலை இருக்கும். ஒரு குடும்பின் வேட்பாளர்கள் எல்லோருடைய ஒலைகளும் ஒரு கட்டாகக் கட்டப்படும். இம்மாதிரி முப்பது ஓலைக்கட்டுகள் தயாரான பின் கிராம மக்கள் கூடுவர். அனேகமாக கிராமக் கோயிலின் வெளி மண்டபத்தில்தான் இது நடக்கும்.

முப்பது ஓலைக்கட்டுகளும் இங்கு கொண்டுவரப்படும் – அங்கே மேடை மத்தியிலே ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு குடம் வீதம் மேடையில் முப்பது குடங்கள் இருக்கும். ஓலைகள் குடத்திலிடப்பட்டு, பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவதாலேயே இது ‘குடவோலை’ என்று பெயர் பெறுகிறது.

கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் – அவர்களை நம்பிமார் என்றழைப்பர் – அவர்கள் முன்னிலையில்தான் இத்தேர்தல் நடக்கும் – நம்பிமார்கள் கடவுளின் பிரதிநிிதியாகக் கருதப்படுவர். முதல் குடும்பின் வேட்பாளர்களின் பேர்களைக் கொண்ட ஓலைக்கட்டை, அவையிலிருக்கும் வயதிலே பெரியவர் அப்படியே கட்டுப் பிரிக்காமல் குடத்துக்குள் போடுவார். பின்னர் நம்பிமார் மற்றக் கட்டுகளை ஒவ்வொன்றாக அவையோரெல்லாம் பார்க்கும்படி நன்றாகத் தூக்கிக் காட்டிய பின்னர் குடத்திலிடுவார். எல்லாக் கட்டுகளும் குடங்களில் இடப்பட்ட பின்னர், கூடியிருக்கும் குழந்தைகளில், ஒரு சின்னக் குழந்தையைக் கூப்பிட்டு, மேடைக்கு வரச் செய்து, குடத்துள் கைவிட்டு ஓலைக்கட்டிலிருந்து ஏதாவதொரு ஓலையை எடுத்து கொடுக்கச் சொல்லுவார். குழந்தை எடுத்துக் கொடுத்த ஓலையிலுள்ள் பேருக்குடையவரே அந்தக் குடும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இத்தேர்தலில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை – தனி மனிதக் கவர்ச்சிகள் இல்லை – பெரும்பான்மை அடிப்படை இல்லை – இந்த விதத்தில் உத்திரமேரூர் தேர்தல் முறை ஒரு தனித்துவம் பெறுகிறது.

ஆதாரம்:
1. “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதி – ரா.கணபதியால் தொகுக்கப்பட்ட காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவுகள் – வானதி பதிப்பகம் – சென்னை 1985)