(இது திரு.சேதுராமனின் இடுகை)
நல்ல படியாக ஐந்து தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. முடிவுகள் எதிர்பார்த்தபடி இருந்தன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அரசியல் கட்சிகளின் அடுத்த இலக்கு 2011ல் வரப்போகும் சட்டசபைத் தேர்தல்தான் இனி. அது வரை பொது மக்களுக்கு நிம்மதி!

ஜனநாயக ஆட்சி இல்லாத முடியரசு இருந்த காலத்திலேயும் நம் தமிழ் நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. ஆம், சோழ மன்னர்கள் காலத்திலே கிராமங்களை நிர்வகிக்க ஒரு சபை தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கமாக இருந்தது. இது பற்றிப் பேச ஆரம்பித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது “உத்திரமேரூர்” தான். இந்த ஊரில் நடை பெற்ற தேர்தல முறைகளைப் பற்றி முன்னோர்கள் விரிவாகவே கல்வெட்டுகளில் பதிந்து வைத்துள்ளனர்.

இக்கல்வெட்டுகளிலிருந்து, தேர்தலில் நிற்க ஒரு நபருக்குத் தகுதிகள் என்ன? யார் தேர்தலில் நிற்கலாம், யார் நிற்கக் கூடாது – என்பதையெல்லாம், தெளிவாகவே எழுதி வைத்துள்ளனர் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னதாக பராந்தக சோழன் ஆட்சியின் போது.

ஊர் முப்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தலுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அசையாச் சொத்து கொஞ்சமாவது இருக்க வேண்டும். புறம்போக்கு அல்லது பிறருடைய நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல், தன்னுடைய சொந்த மனையில் வீடு கொண்டவராக இருக்க வேண்டும். இரண்டாவது, ஆனால் முக்கியமான தகுதி அவருடைய வயது முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலே இருக்க வேண்டும். இந்த வயதுக் காலதத்ிலேதான் அவருக்கு உலகானுபவம் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள். அடுத்த தகுதி (இந்தத் தகுதி மட்டும் இன்னாளில் இருந்தால், பாதிக்கு மேலே நம் அரசியல்வாதிகள் காலி!!) தேர்தலுக்கு நிற்பவர் வயது எழுபதிற்கு மேல் இருக்கக் கூடாது. நான்காவது, வேட்பாளர் ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். மற்ற தகுதிகள், செயல் புரிவதில் வல்லவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும், நேர் வழியில் சம்பாதித்த பொருளீட்டியவனாகவும், நல்ல மனமும் பண்புகளும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் – ஒரு இன்றியமையாத தகுதி முன்னமேயே ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கக் கூடாது. இந்தத் தடை மூன்று தேர்தலகள் வரை செல்லும்.

இதனுடன் நிற்கவில்லை அந்தக் கல்வெட்டு – தகுதியற்றவர்கள் யார் என்று விவரிக்கிறது!

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தம் வாழ்நாள் முழுதும் தேர்தலுக்கு நிற்க முடியாது! அவர் மட்டுமல்ல – அவரது மகன், பேரன், தந்தை வழி, தாய்வழி, மகனையோ மகளையோ சம்பந்தம் செய்து கொண்டவர்கள், மற்றும் எந்த விதமான உறவினர்களும் தேர்தலில் நிற்க முடியாது.

தான் கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டு தனது சொந்தம் யாரையும் சபையாட்சியில் அமர்த்தி விட முடியாது. இது மட்டுமல்ல – கள் சாராயம் அருந்துபவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், பிறர் மனைவியை அபகரித்தவர்கள், மேலே கண்ட மூவரையும் தூய்மையானவர்கள் என்று பேசுபவர்கள் – இக்குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் – இவர்களும் தேர்தலுக்கு நிற்க முடியாது. கடைசியாக ஆனால் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது – லஞ்சம் அல்லது கையூட்டு! யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலை முறைகளுக்கு நிற்க முடியாது. லஞ்சம் வாங்குகிறார் என்று தெரிந்தவுடன் ஒரே ஆண்டுக்குள் பதவியிலிருந்து நீக்கி விடுவர்!!

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களால்தான் ஊர் சபை அமைக்கப்படுகிறது. இச்சபைகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிராமப் பணிகளைக் கவனிப்பர். இச்சபைகள் “வாரியங்கள்’ என்றழைக்கப்பட்டன. (இப்பவும்தான், ஆனால் வாரியங்களின் தலைவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நியமிக்கப்படுகின்றனர்)

இளைஞர்களும், உடல் வ்லியுள்ளவர்களும் கடுமையான பணிகளையும் வயது முதிர்ந்தவர்களும் ஆற்றல் நிறைந்தவர்களும் மேற்பார்வைப் பணிகளையும் செய்து வந்தனர். (தொடரும்)

ஆதாரம்:
1. தமிழகத் தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்த டாக்டர் ஆர். நாகசாமி எழுதியுள்ள “தவம் செய்த தவம்” என்ற கட்டுரைத் தொகுதி – பிருகதீஷ் பதிப்பகம், அடையாறு, சென்னை – 1994
2. ரா. கணபதி தொகுத்துள்ள காஞ்சி மாமுனிவர் சொற்பொழிவுகள் “தெய்வத்தின் குரல்” என்ற புத்தகம்

Advertisements