சிதம்பரம் கோவிலை பற்றி பெரும் விவாதம் நடக்கிறது. மகிழ்ச்சி. கொஞ்சம் பிசி, அதனால் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். அதுதான் பதிவாகவே எழுதுகிறேன்.

மீண்டும் ரம்பம் போடுவதற்குள் எனக்கு தெரிந்த வரையில் நிலை என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறேன். என்னுடைய perception இதுதான் – சிதம்பரம் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் கையில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா க்ளாசிக் கோவில்களையும் போலத்தான் இங்கும் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் நடக்கிறது. ஆறுமுகசாமி என்ற ஒரு வயதானவர் பல வருஷங்களாக கோவில் வளாகத்தில் – ஆனால் கருவறைக்கு வெளியேதான் – தேவாரம் பாட முயற்சி செய்து வருகிறார். அவரை தீட்சிதர்கள் பாட விடாமல் தடுக்கிறார்கள், அதற்கு ஆகம விதிகளையும், சம்பிரதாயங்களையும் காரணமாக காட்டுகிறார்கள். கோர்ட்டில் கேஸ் ரொம்ப நாளாக நடக்கிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என்றும் தேவாரம் பாட தடை விதிக்கக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். தீட்சிதர்கள் இதை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.

இதற்கு மேல் என் யூகம் இது – தமிழில் பக்தர் விருப்பப்பட்டால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கருவறைக்கு வெளியே பாடியதற்கே அடி உதை என்றால் இந்த தமிழ் அர்ச்சனை பிசினஸ் எல்லாம் இங்கே நடக்கப்போவதில்லை. இது யூகம்தான் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.

என் perception தவறாக இருந்தால் என் முடிவுகளும் தவறாக இருக்கலாம். நிலை இது இல்லை என்றால் விஜயராவன், வித்தகன், அரை டிக்கெட், கரிகுலம் மற்றும் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எடுத்து சொல்லுங்கள்.

தமிழ் நாட்டு கோவிலில் (மசூதியில், சர்ச்சில்) பக்தன் விருப்பப்பட்டால் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமை வேண்டும். அவ்வளவுதான். அதனால் சமஸ்கிருதத்தில்(அரபிக்கில், லத்தீனில்) வழிபாடு செய்யக்கூடாது என்பதில்லை. அது கும்பிடுபவர் இஷ்டம். By default, தமிழில் நடக்கவில்லை என்றால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் கேட்டால் தமிழில் நடக்க வேண்டும், அவ்வளவுதான். என் பெண்ணுக்கு தமிழ் ததிங்கினத்தோம், அவளுக்கு ஆங்கிலத்தில் வழிபட முடிந்தால் நன்றாக இருக்கும். என் கண்ணில் விஷயம் இவ்வளவுதான்.

சிதம்பரம் பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரமே அங்கேதான் இருந்ததாம். அங்கே தேவாரம் பாடுவது தவறு என்பது மிக distasteful ஆக இருக்கிறது.

சிதம்பரம் பெரிய கோவில். அங்கே வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கடமை இருந்தால் நிர்வாக உரிமையும் அரசுடையதுதான். தீட்சிதர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு இருக்கத்தான் வேண்டும். அது அவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது. முக்கால்வாசி தீட்சிதர்களுக்கு கோவில் இல்லை என்றால் வாழ வேறு வழி இல்லாமல்தான் இருக்கும். புறம்போக்கு நிலத்தில் பத்து வருஷம் குடி இருந்தால் அரசு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு சரியோ, அதை விட பல மடங்கு பல நூறு வருஷம் இந்த கோவிலை நிர்வகித்த தீட்சிதர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்வது சரி. ஆனால் கோவில் தீட்சிதர்கள் சொந்த சொத்து இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.

அப்புறம் நாத்திகர்கள் இதில் தலையிடக்கூடாது என்று சொல்வது எனக்கு புரியவே இல்லை. கேசை விசாரிக்கும் நீதிபதி நாத்திகராக இருந்தால் தீர்ப்பு தவறாகிவிடுமா? ஆத்திகராக இருந்தால் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும் என்று காரண்டி உண்டா? தீட்சிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்று எத்தனை ஆத்திகரை கேட்டு முடிவெடுத்தார்கள்? நந்தனார் உள்ளே வரலாமா கூடாதா என்று என்ன வாக்கெடுப்பா நடந்தது? இந்த கோவில் பொது சொத்து, அதனால் நாத்திகர், ஆத்திகர், முஸ்லிம், கிருஸ்துவர் எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. கோவிலை நடத்த தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் எல்லாரும் சேர்ந்த ஒரு குழு ஏற்படுத்தி, அவர்கள் அரசியல் சட்டத்துக்குட்பட்டு முடிவெடுக்கட்டும். இந்த மாதிரி நாங்களே முடிவு செய்துகொள்வோம், “அந்நியர்கள்” தலையிடக்கூடாது என்றால் மீண்டும் அமிர்தசரஸ் தங்கக் கோவில் ஆயுதக் கிடங்காகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (இன்று அமிர்தசரஸ் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்று தெரியாது என்பதையும் சொல்லி விடுகிறேன். அதை ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன்.) “அந்நியர்களான” ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் உடன்கட்டை சட்ட விரோதமானது, சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது. எங்கள் மத விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று அப்போதும் பலரும் கத்தத்தான் செய்தார்கள். தவறு நம் மேல் இருக்கும்போது “அந்நியர்” அதை எடுத்து சொன்னால் நாம் defensive mode-க்கு போக வேண்டியதில்லையே?

மறுமொழிகளில் எழுப்பப்பட்ட சில கருத்துகளுக்கு என் மறுமொழிகள் கீழே.

முரளி சொன்னதுபோல் ஓரளவு பழக்கம் உள்ள பதிவர்கள், மறுமொழி எழுதுபவர்கள் எழுதுவதை நான் by default, உண்மையாகவே கருதுபவன். எல்லாருக்கும் benefit of doubt உண்டு, பொய் சொல்கிறார்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியாத வரை எழுதுபவர்கள் எல்லாரும் நேர்மையனாவர்கள்தான்.

விஜய் என்பவர் எழுதிய மறுமொழியில் தன் நண்பன் திருவாசகம் பாடியதை தானே பக்கத்தில் நின்று பார்த்ததாகவும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆறுமுகசாமி அர்ச்சகர் பூஜை செய்யும்போது அவர்களை தொந்தரவு செய்யும் விதமாகவே பாடுவதாகவும் அதனால்தான் பிரச்சினை என்றும் எழுதி இருந்தார். அப்படி ஆறுமுகசாமி செய்வதாக இருந்தால் என் கேஸ் பாதி க்ளோஸ். அப்படி தொந்தரவு செய்வதற்கு ஆறுமுகசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. அப்புறம் தமிழ் அர்ச்சனை, கோவில் நிர்வாகம் இரண்டு மட்டும்தான் மிச்சம்.

விஜயராகவன் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது theological problem என்று சொல்கிறார். அவர் சொல்வதில் எனக்கு இசைவில்லை, ஆனால் அது பக்தர்களின் பிரச்சினை என்றால் ஆறுமுகசாமி பக்தர்தானே? அவருக்கு நாத்திகர்கள் சப்போர்ட் செய்யும் நிலை வந்ததற்கு காரணம் தீட்சிதர்கள்தானே என்று தோன்றுகிறது.

கார்த்திக், மற்றும் சிலர் இஸ்லாம், கிருஸ்தவ மதங்களை கண்டு அரசு பம்முவதை பற்றி சொல்லி இருந்தார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஷா பானோவுக்கு இழைக்கப்பட்டது இந்த சிதம்பரம் விஷயத்தை விட பல மடங்கு பெரும் அநீதி. ம.க.இ.க., அரை டிக்கெட், பெரியார் உட்பட யாரும் மசூதியில் அரபி மட்டும் கூடாது, தமிழிலும் தொழுகை நடத்த உரிமை வேண்டும் என்று சொல்லி என் வாழ்க்கையில் நான் கேட்டதில்லைதான். ஆனால் இஸ்லாம் விஷயத்தில் அரசு தவறு செய்கிறது, அதனால் ஹிந்துக்கள் விஷயத்திலும் தவறு செய்ய வேண்டும் என்ற வாதம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை திருத்த வேண்டும், ஆனால் அதை மறந்துவிடாதீர்கள் என்றல்லவா பேச வேண்டும்?

அரை டிக்கெட் தீட்சிதர்கள் கோவிலில் தண்ணி அடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டு. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று நம்புகிறேன்.

அப்புறம் அரை டிக்கெட் கருவறைக்குள் நுழைய முயன்றோம், தாக்கினார்கள் என்று எழுதி இருக்கிறார். கருவறைக்குள் அங்கே பணி புரியும் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் நுழையக்கூடாது என்று தமிழ் நாட்டு கோவில்களில் விதி இருக்கிறது. இது பணி சார்ந்த விதி – ஜாதி சார்ந்த விதி இல்லை. பூணூல் போட்டிருந்தால் உள்ளே அழைத்து சென்றுவிடுவதில்லை. விதியை மீறினோம், தாக்கினார்கள் என்றால் முதல் தவறு அரை டிக்கெட் மேல்தான் இருக்கிறது. வட இந்திய கோவில்களில் கருவறைக்குள் செல்லலாம் என்று சொல்கிறார்கள். காசியில் கூட அப்படித்தானாம். அங்கும் நான் பார்த்த நகர்புறக் கோவில்களில் பூணூல் போட்டிருக்கிறானா, அப்போதுதான் கருவறைக்குள் வரலாம் என்று பார்ப்பதில்லை. சில விஷயங்களை கோவிலின் சம்பிரதாயம் என்று விட்டுவிட வேண்டும். ஏன் சிதம்பரம் கோவிலில் கடா வெட்டுவதில்லை, ஏன் ஸ்ரீரங்கம் கோவிலில் விபூதி கொடுப்பதில்லை என்றெல்லாம் கேட்பதில் அர்த்தமில்லை. கோவில் என்ன McDonald’s-ஆ, எல்லா கோவிலிலும் ஒரே மாதிரி இருக்க? பிறப்பால் வித்தியாசம் பார்க்கவில்லை என்றால் போதும்.

அப்புறம் கரிகுலம் Reformation பற்றி கொடுத்த தகவல் தவறு. விஜயராகவனும் இதை சுட்டி காட்டி இருக்கிறார்.

வித்தகன் கேரளாவில் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்கு வர வேண்டும் என்று சொல்வது பூணூல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கத்தான் என்கிறார். இது எனக்கு கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

ஹரிஜன் என்றால் “ஹரிஜன்களுக்கு” patronizing ஆக இருக்கிறது, தலித் என்றால் அப்படி இல்லை, அதனால் தலித் என்று மாற்றி சொல்ல சொல்கிறார்கள். ஒரு காலத்தில் மால்கம் எக்ஸ் கூட நீக்ரோ என்றுதான் பேசினார். இன்று ஆஃப்ரிகன் அமெரிக்கன் என்று சொல்கிறோம். இது கேட்பவர்கள் மன நிலையை பொறுத்தது. அவ்வளவுதான், விஜயராகவன்! எனக்கு (இன்னும் பலருக்கும்) பார்ப்பனீயம் என்ற வார்த்தை தவறனாதகவும் offensive ஆகவும் தெரிகிறது. அதற்கு பதிலாக ஜாதீயம் என்று சொல்லலாம் என்று பல முறை சொல்லி பார்த்தேன். ஆனால் அதை வினவு குழுவினரும் அரை டிக்கெட்டும் விடுவதாக இல்லை, அதுதான் கொஞ்சம் சோகமாக இருக்கிறது. 🙂

கரிகுலம், தமிழில் எழுதுங்களேன்! தமிழ் பற்றி இவ்வளவு தூரம் பேசும் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது ironical ஆக இருக்கிறது. அப்புறம் நீங்கள் சொல்வது போல எல்லா இடங்களிலும் தாய்மொழி வழிபாடு வென்றுவிடவில்லை. யா இலாஹா இல்லல்லாஹா மொஹம்மதுல்லா சூலுல்லாஹி என்றுதான் சொல்கிறார்கள், யாரும் குரானை தமிழில், ஆங்கிலத்தில், சமஸ்கிருதத்தில் ஓதி கேட்டிருக்கிறீர்களா என்ன? தமிழில் வழிபட உரிமை மறுக்கப்படுகிறது என்பதற்காக எதிர் தரப்பை தவறாக ஏணியில் ஏற்றாதீர்கள்! சமஸ்கிருதத்தில் வழிபடுவது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். எனக்கு நிச்சயமாக இல்லை. நானும் தமிழன்தான். என் கண்ணில் சமஸ்கிருதம் தேவ பாஷை இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது என் preference. சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால் நான் காதை மூடிக்கொள்ள மாட்டேன். Generalize செய்யாதீர்கள். அப்புறம் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்கள் சமஸ்கிருத வழிபாட்டையே விரும்புவார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் தமிழுக்கு வோட்டு போடுவேன், ஆனால் அது அவரவர் இஷ்டம். நான் விரும்பினால் தமிழில் வழிபாடு நடக்கும் என்ற நிலையை – என்ற நிலையை மட்டுமே – நான் வேண்டுகிறேன். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது எல்லாம் வேண்டாம் – தமிழ் நாட்டில் விருப்பபட்டால் தமிழில் வழிபாடு என்பது கிடைத்தால் போதும். அப்புறம் சாதாரண மக்கள் ஒரு தவறான தலைவனால் வழி தவறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான கருத்தை எடுத்து சொல்லுங்கள்!

வித்தகன், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விரும்பி நான் ஒரு முறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். வருபவர்கள் அனேகமாக வயதான ரிடையர் ஆன பார்ப்பனர்கள் மட்டுமே. 🙂 ஒரு காலத்தில் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்திருக்கலாம். அப்போது கூட வேதம் படிப்பதற்குத்தான் கட்டுப்பாடு இருந்தது என்று சொல்கிறார்கள், சமஸ்கிருதம் படிக்க இல்லை. வால்மீகி பார்ப்பனர் இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்புறம் நீங்களே இப்படி உங்களுக்கு கலைஞர்தான் சரி, இதனால்தான் பிராமணர்கள் அமேரிக்கா சென்றுவிடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினால் நான் யாரை நொந்து கொள்வது?

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பதிவுகள்:
சிதம்பரம் கோவில் I
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்

Advertisements