இக்கட்டு்ரை நண்பர் சேதுராமன் அவர்கள் எழுதியது.

நம் தமிழ் நாட்டிலுள்ள இரு கழகங்கள் போட்ட பிரச்சாரக் கூக்குரலில், 1946ம் வருடத்திலேயே “ஈழம் உள்பட்ட ஒரு புதிய தமிழகம்” என்று குரல் எழுப்பிய ஒரு தமிழரை எல்லோருமே மறந்து விட்டனர்.  ஆம், தீவிர காங்கிரஸ்காரராக இருந்து, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய திரு ம.பொ.சிவஞானம் தான் அவர்.

புதிய தமிழகம் என்ற தலைப்பில் எழுதப்பெற்ற கட்டுரை சிதறுண்டு கிடந்த தமிழ் வழங்கும் பிரதேசங்களையும், எல்லைகளையும் விரிவாக வரையறை செய்துள்ளது முதல் முயற்சியாகும்.  ‘முதல் முயற்சி’ என்று குறிப்பிட்டதன் காரணத்தை ம.பொ.சி.யின் பின் வரும் எழுத்துகளில் இருந்து அறிய முடிகின்றது “” இதனை யான் எழுதிய நாளிலே, தமிழ் மாகாணம் படைக்கவும், அதன் வடக்கு-தெற்கு எல்லைகளை மீட்கவும், சென்னையம்பதியைக் காக்கவும், வேறொரு அரசியல் தலைவரோ, அரசியல் கட்சிகளில் எதுவுமோ குரல் கொடுத்ததில்லை என்பதை யான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்”   —  கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பின் வருவன:

*** தமிழ் நாட்டின் நீண்ட கால இலக்கியங்களில் காணப்படும் வரலாறுகளின்படி, தமிழ் நாட்டின் வடக்கெல்லை திருப்பதி என்பது திருத்தத்திற்கு இடமில்லாத ஒரு தீர்ப்பாகவே கொள்ள வேண்டும்.   *****

*** பிரிட்டிஷ் காலனியாக விளங்கும் இலங்கையில் ஒரு பகுதி யாழ்ப்பாணம்.  ஆனால் இந்தச் சிறு தீவு தமிழ் நாட்டிற்கும், இலங்கைக்கும் மத்தியில் இருக்கின்றது.  இந்தத் தீவில் வாழ்வோர் அனைவரும் தமிழர்களே. யாழ்ப்பாணத்தைப் பற்றிய  வரலாறுகளைத் தமிழிலக்கியங்களில் படிப்போர் எவரும் அதைத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே ஒப்புக்கொள்வர்.  எனவே யாழ்ப்பாணத்தை இலங்கையோடு விட்டு வைப்பதா, அல்லது தமிழ் நாட்டுடன் சேர்ப்பதா?  என்ற விஷயத்தில், அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் காலம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். *****

1946ல் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துக்கள் குறித்து ம.பொ.சி. பின்னர் “எனது போராட்டம்” என்ற நூலில் பின் வருமாறு விளக்கமளித்துள்ளார்:

*** இலங்கையின் வட பகுதியும், இந்தியத் தமிழகத்தை அடுத்தாற்போலுள்ளதும், தமிழர் மிகுதியாக வாழ்வதுமான யாழ்ப்பாணத்தின் மீதும் உரிமை கொண்டாடியிருந்தேன்.  இலங்கையில் தமிழர் மிகுதியாக வாழும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளைப் பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லையாதலால், யாழ்ப்பாணத்தை மட்டுமே கோரியிருந்தேன்…  அந்நாளில், இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் ஆட்சியே நடைபெற்று வந்ததால், இந்த இரண்டு நாடுகளிலுள்ள மக்களுக்குக் குடியுரிமை ஒன்றாக இருந்தது..  அதாவது இந்தியாவிலிருந்து இலங்கை செல்லவும், இலங்கையிலிருந்து இந்தியா வரவும் “பாஸ்போர்ட்” “விசா” பெற வேண்டிய சங்கடங்கள் இருக்கவில்லை.  இந்தியாவில் வாழும் எனக்கு இலங்கை அயல் நாடாகத் தோன்றவில்லை –  ஆம், யாழ்ப்பாணத்தை அயல் நாடொன்றின் உட்பகுதியாக நான் கருதவில்லை..  அதனால், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பிரிட்டிஷார் வெளியேறவிருந்த தருணத்திலே, மொழி அடிப்படையில், இந்திய-இலங்கை எல்லைகளைத் திருத்தி அமைக்குமாறு கோருவது தவறென்று நான் கருதவில்லை.

இந்தியாவையும் இலங்கையையும் கடல் நீர் பிரித்து நிற்பதை நான் அப்போது அறியாமலில்லை.. அறிந்தும், நிலத் தொடர்பற்ற யாழ்ப்பாணத்தின் மீது உரிமை கொண்டாடக்காரணமிருந்தது.  அப்போது இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் நிலங்கள் கொண்ட பாகிஸ்தானை முஸ்லிம் லீக் கோரி வந்தது.  வடமேற்கில் உள்ள பஞ்சாப்-சிந்து எல்லைப்புற மாநிலங்களும், அதற்குச் சுமார் ஆயிரம் கல் தொலைவிலுள்ள  வங்க மாநிலமும் இணைந்ததே முஸ்லிம் கோரிய “பாகிஸ்தான்”  — நிலத் தொடர்பற்ற – ஆயிரம் கல் இடைவெளியைக் கொண்ட இருவேறு பகுதிகளை இணைத்துப் பாகிஸ்தான் அமைக்கப் படலாமென்றால், ஒரு மனிதன் எளிதில் நீந்திக் கடக்கக் கூடிய அளவேயுள்ள கடல் பரப்பால் பிரிக்கப்படும் யாழ்ப்பாணத்தையும், இந்தியத் தமிழகத்தையும் பிணைத்துப் “புதிய தமிழகம்” படைப்பதில் தவறில்லையென்றே நான் கருதினேன்.  ஆனால், பிற்காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய கோரிக்கையை நான் அடியோடு கைவிட்டு விட்டேன், ஆம் – பிரிட்டிஷார் வெளியேறிய பின்னர், இலங்கை முற்றிலும் அயல் நாடாகி விட்டதல்லவா?

(பெ.சு.மணி எழுதிய “தமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி.யின் தமிழ் முரசு” – மே 2000 – பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர் சென்னை 600004 — புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டவை)

Advertisements