சிதம்பரம் கோவிலை பற்றி வினவு தளம் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு விவாதத்தை கிளப்பி இருக்கிறது. கோவில் சம்பிரதாயங்களை மாற்றலாமா? மாற்றலாம் என்றால் யார் யார் மாற்றலாம்? யார் தலையிடக் கூடாது?

பழைய கோவில்கள் – சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருப்பதி மாதிரி – எந்த ராஜாவோ கட்டி வைக்க, புகழ் பெற்று விளங்கும், பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வரும் கோவில்கள் எல்லாம் பொது சொத்து. இவற்றை கட்டுபடுத்த ஒரு அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. சிதம்பரம் கோவிலுக்கு பராந்தக சோழன் பொன் கூரை வேய்ந்தான். யார் வீட்டு பணம்? தீட்சிதர்கள் பணமா? அதனால் அரசு அரசியல் சட்ட விதி தரும் வழிகாட்டுதல்படி கோவில் விதிகளை மாற்றலாம், தவறே இல்லை. மக்களுக்கு நல்லது என்று அதற்கு தோன்றுவதை, மதசார்பில்லாமல், அரசியல் சட்டத்துக்கு புறம்பாக போகாமல் கோவில்களில் கொண்டு வரலாம். தமிழில் பாடுவது தவறு என்று சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் பிரைவேட் கிளப் ஆக இருக்க வேண்டும். ஒரு பொது அமைப்பில் இப்படி ஒரு வழிமுறையை தீட்சிதர்கள் கொண்டு வர முயற்சித்திருக்க கூடாது.

அதே நேரத்தில் எனக்கு தீட்சிதர்களின், அவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களின், மன நிலை புரிகிறது. கோவில் போன்ற அமைப்புகளின் பலமே காலம் காலமாக வரும் சம்பிரதாயங்கள்தான். திருப்பதி வெங்கடாசலபதிக்கு முகம் மறையும்படிதான், மூக்கு வரை நாமம் போட வேண்டும். அவர் முகத்தை பக்தர்களுக்கு காட்டுகிறேன் என்று சின்ன நாமம் போட்டால் அவருக்கு இருக்கும் கெத்து குறைந்துதான் போகும். கேரளா கோவில்களுக்கு போனால் சட்டையை கழற்ற சொல்கிறார்கள், தவறு ஒன்றும் இல்லையே?

இந்த ஆதரவாளர்களுக்கு, இன்றைக்கு தமிழில் அர்ச்சனை, நாளைக்கு தண்ணி அடித்துவிட்டு வந்து அர்ச்சனை செய்வான், இன்னும் கொஞ்ச நாள் போனால் மாத விலக்கான பெண்கள் அர்ச்சனை செய்வார்கள் என்று பயம். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், மாத விலக்கான பெண் அர்ச்சனை செய்தால் ஒரு தவறும் இல்லை என்று என் அறிவுக்கு தெரிகிறது, கடவுள் மாத விலக்கான பெண்களை ஒதுக்கினால் அவர் கடவுளே இல்லை. ஆனால் என் மனம் கூசத்தான் செய்கிறது. என் அறிவு சொல்வதை ஏற்றுக் கொள்வது என் மனதுக்கு கஷ்டம். இன்னும் மூன்று நான்கு ஜெனரேஷன் போனால் இது சாதாரண விஷயமாக தெரியலாம். தெரிய வேண்டும்.

நான் இப்படி யோசிப்பவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். உடன்கட்டை, குழந்தை திருமணம், தலித்கள் கோவிலுக்குள் வரக்கூடாது எல்லாம் ஒரு காலத்தில் சரியாகத்தான் தெரிந்தன. அவை எல்லாம் தவறு என்று மாற்றும்போது அன்றும் மத விஷயங்களில் தலையிடுகிறார்களே என்று பலருக்கும் உறுத்தி இருக்கும். அன்றைய “முற்போக்காளர்கள்”, இது சரிதான், ஆனால் இதை அனுமதித்தால் இன்னும் என்னென்ன சீரழிவுகள் ஏற்படுமோ என்று பயந்திருப்பார்கள். என் முப்பாட்டன் காலத்தில் கிராப் வைத்தால் சீரழிவு. அதற்கு என்ன செய்வது? இப்போது நடப்பது உங்களுக்கு அறிவுபூர்வமாக சரியாக இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். மனது உறுத்தினால் அதை புறந்தள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

நாத்திகர்கள் ஆடு நனைகிறதே என்று ஏன் அழ வேண்டும் என்று விஜயராகவன் கேட்கிறார். இது முற்றிலும் தவறான வாதம். தவறை யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. அப்புறம் கிருத்துவ நீதிபதிகள் ஹிந்து குடும்ப சட்ட கேஸ்களை விசாரிக்கலாமா? ஹிந்து மெஜாரிட்டி சுப்ரீம் கோர்ட் ஷா பானோ மாதிரி முஸ்லிம் சிவில் கேஸ்களை விசாரிக்கலாமா? ரஞ்சியில் கூட விளையாடாத ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் பற்றி எப்படி பேசலாம்? மு.மு. இஸ்மாயில் எப்படி கம்ப ராமாயணத்தில் திளைக்கலாம்? இலங்கைக்கு டூர் கூட போகாத நான் எப்படி பிரபாகரனை பற்றி எழதலாம்? பெரியார் மிக சிறந்த தர்மகர்த்தாவாக விளங்கினார் என்பதை நினைவூட்டுகிறேன்.

இதில் பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் வேறு வேறு வித ஓட்டுரிமை வேறு! இந்த ஜனநாயக முறையை வைத்துதான் நந்தனார் உள்ளே வரக்கூடாது என்று முடிவெடுத்தார்களா? எந்த stakeholder-ஐ கேட்டு இன்றைய “விதிகள்” அமைக்கப்பட்டுள்ளன? அப்புறம் தமிழில்தான் அர்ச்சனை என்பதில்லை, தமிழிலும் விருப்பப்பட்டால் அர்ச்சனை என்பதுதான் கேட்கப்படுகிறது. ஆறுமுகசாமி தேவாரம் பாட உரிமை வேண்டும் என்று கேட்கிறார்; எல்லாரும் தேவாரம் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்கவில்லை. என்னை பொறுத்தவரையில் உருதுவில் கூட அர்ச்சனை நடத்தலாம். எல்லாம் வல்ல தில்லை நடராஜனுக்கு மொழி தேவை இல்லை, பக்தர்களுக்குத்தான் மொழி தேவை. துலுக்க நாச்சியாரின் அன்பை பெருமாள் நிராகரித்துவிடவில்லையே?

பெரியார் போராடினார் என்பது வாஸ்தவம்தான். ராஜாஜி சட்டம் இயற்றினார் என்பதும் உண்மைதான். ஆனால் இன்னும் கண்டதேவி, கிண்டதேவி மாதிரி நிறைய நடக்கின்றன. இந்த stakeholders-ஐ கேட்டு எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

அதே நேரத்தில் வேலூரில் ஒரு தங்கக் கோவில் கட்டி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது ஒரு private enterprise போல தெரிகிறது. அது உண்மையிலேயே private enterprise ஆக இருந்தால், அந்த கோவிலுக்கு அரசு எந்த சலுகையும் காட்டாத பட்சத்தில், அங்கே போய் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்யக் கூடாது என்று யாரும் தலையிட முடியாது. இந்த சலுகை என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம். கோவிலால் வேலூர் மாநகராட்சிக்கு நல்ல வருமானம் வருகிறது, அதனால் சலுகை தருவோம் என்று மாநகராட்சியோ, தமிழக அரசோ முன் வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு லாபம் தரும், வரிப்பணம் தரும் தொழிலுக்கு சலுகை காட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் அது strictly business ஆக இருக்க வேண்டும்; மதச்சார்பு எங்கே ஆரம்பிக்கிறது, தொழில் எங்கே முடிகிறது என்று திட்டவட்டமாக வரையறுப்பது கொஞ்சம் கஷ்டம்.

நான் சொன்ன அத்தனையும் சர்ச்களுக்கும் மசூதிகளுக்கும் குருத்வாராக்களுக்கும் பொருந்தும். வேளாங்கண்ணி கோவில், சாந்தோம் சர்ச், டெல்லி ஜும்மா மசூதி, அமிர்தசரஸ் தங்கக் கோவில் எல்லாம் பொதுச்சொத்துதான். அரசு பிற மதங்களை கண்டு பம்முகிறது என்பதால் அரசுக்கு உரிமை இல்லை என்பதில்லை.

உரிமை மட்டுமில்லை, கடமையும் இருக்கிறது. கும்பகோணம் குளம் மகாமகத்துக்கு மகாமகமாவது அரசு செலவில் சுத்தம் செய்யப்பட வேண்டும். வந்து போகும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பஸ் வசதி, குடிக்க தண்ணீர், ஓரளவாவது சுத்தமான கோவில் மற்றும் கோவிலை சுற்றிய இடங்கள், பாதுகாப்பு முதலிய அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இதை அரசாங்கம் மறந்துவிடுவதுதான் பெரிய சோகம்.

பின் குறிப்பு: வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளும், சமீபத்தில் வந்த தசாவதாரம் படமும் ஒரு சோழ அரசன் கோவிந்தராஜ பெருமாள் சிலையை தூக்கி கடலில் எறிந்ததாக சொல்கின்றன. அதுவும் அரசு தலையீடுதான் என்பதை தீட்சிதர்கள் மறந்துவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பக்கங்கள்:
இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதி
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்

Advertisements