ஓராண்டு நிறைவு பெற்ற வினவு தளத்துக்கு வாழ்த்துகள்.

வினவு தளம் ம.க.இ.க. சார்புடையது. ம.க.இ.க.வினர் தீவிர கம்யூனிஸ்டுகள். அதுவும் ஸ்டாலினை தெய்வமாகவே கொண்டாடுபவர்கள். அவர்களுடைய பல கருத்துகள் எனக்கு ஏற்புடையவை இல்லை. அவர்கள் தளத்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் தமிழ் பதிவர் உலகத்தில் வினவின் பதிவுகள் முக்கியமானவை என்றும் நினைக்கிறேன். சரியோ தவறோ, சமூகத்தை, அரசியலை, மதத்தை, நாடுகளை விமர்சித்து, விளக்கி, ஏறக்குறைய தினமும் ஒரு பதிவு வெளி வருகிறது. அது பல சமயம் விவாதங்களை தூண்டுகிறது. இது பாராட்ட வேண்டிய விஷயம்.

ம.க.இ.க.வினர்+வினவு தளம் பதிவு எழுதுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தீட்சிதர்கள் மேல் கேஸ் போட்டு, தமிழில் பாடும் உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள். சிதம்பரம் கோவில் நம் அனைவருக்கும் சொந்தமானது, தீட்சிதர்களுக்கு மட்டும் இல்லை என்பது என் உறுதியான கருத்து. அங்கே தமிழில் பாடக் கூடாது என்று சொல்வது பெரிய அநியாயம். அதை நிறுத்தியதால் எனக்கு அவர்கள் மீது மரியாதை இருக்கிறது.

வினவு குழுவினரின் பெரிய குறை அவர்கள் எடுக்கும் இரட்டை நிலைதான். அவர்களுக்கு ஸ்டாலின் ஒரு holy cow. அதனால் ஸ்டாலின் ஆட்சி பொற்காலம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள். ஸ்டாலின் ஆட்சியில் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று தயங்காமல் சொல்வார்கள். கம்யூனிச ஆட்சி மக்கள் விருப்பத்துக்கேற்ப நடக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் கம்யூனிச ஆட்சியை சான்ஸ் கிடைத்தவுடன் ரஷியர்களும் லாட்வியர்களும் எஸ்தோனியர்களும் உக்ரேனியர்களும் கிழக்கு ஜெர்மானியர்களும் நிராகரித்துவிட்டார்களே, பிறகு எப்படி கம்யூனிசம் மக்கள் விருப்பத்துக்கேற்ப நடந்தது என்று சொல்கிறீர்கள் கேட்டால், அந்த தோல்வியை புரிந்து கொள்ள நிபுணத்துவம் வேண்டும், கம்யூனிஸ்டுகளால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய தோல்வி அது என்று வாதிடுவார்கள். இந்த கம்யூனிசத்துக்கும், எல்லாம் பிரம்மம், அதை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்று பேசும் வேதாந்தத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சுப்ரமணிய சாமிக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை, ஆனால் அவர் மேல் முட்டை வீசுவது எங்கள் கருத்து சுதந்திரம், அதை யாரும் தடுக்கவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என்று வாதிடுவார்கள். பார்ப்பன ஜாதியில் பிறந்த அயோக்கியர்களை விமர்சிக்கும்போது காட்டமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள், மற்ற ஜாதி மதத்தில் பிறந்திருந்தால் அவர் ஜாதி மதத்தை குறிப்பிட மாட்டார்கள் (உதாரணம் ஜேப்பியார்), இல்லை அடக்கி வாசிப்பார்கள்.

ஆனால் குறைகள் இல்லாத மனிதர் யார்? சும்மா பதிவு எழுதும் என்னை விட களத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் உயர்ந்தவர்களே! இன்று இருக்கும் குறைகளையும் களைந்து, ஒரு consistent value system-த்தை அடிப்படையாக கொண்டு, மேலும் வளர வாழ்த்துகள்!

Advertisements