நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.

எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரெக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?

நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.

அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்னவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.

கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்னவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.

பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?

ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான். 🙂 இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.

எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.

திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.

சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.

தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்

Advertisements