தேவகாந்தன்

தேவகாந்தன்

எனக்கு மகாபாரதத்தில் பெரும் பித்து உண்டு. எனக்கு மூன்று நான்கு வயது இருக்கும்போதே இறந்து போன என் பாட்டியை பற்றி எனக்கு இருக்கும் ஒரு நினைவு அவள் மடியில் உட்கார்ந்து மகாபாரத கதைகள் கேட்டதுதான். சிறு வயதில் பீமன் பெரிய ஹீரோ. முதன் முதலாக ராஜாஜியின் வியாசர் விருந்தை படித்தபோது ஏற்பட்ட த்ரில் மறக்க முடியாதது. மகாபாரதத்தை வைத்து என்ன வந்தாலும் எனக்கு கட்டாயமாக பிடிக்கும். ஷ்யாம் பெனகலின் கல்யுக், பீட்டர் ப்ரூக்ஸின் ஒன்பது மணி நேர மகாபாரதம், ஐராவதி கார்வேயின் யுகாந்தர், எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்செயலாக தேவகாந்தன் என்பவர் எழுதிய கதாகாலம் புத்தகத்தை பற்றி இங்கே மற்றும் இங்கே படித்தேன். எனக்கு இந்த புத்தகம் நிச்சயமாக பிடிக்கும். இந்த பதிவுகளை வைத்தே எல்லாருக்கும் சிபாரிசும் செய்கிறேன். ஆனால் இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. யாராவது படித்திருக்கிறீர்களா? தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

பிறகு கூகிளில் தேடி பார்த்தபோது இந்த என்.கே. மகாலிங்கம் எழுதிய இந்த பதிவும் கிடைத்தது. புத்தகமே pdf வடிவில் இங்கே கிடைக்கிறது. (160 பக்கங்கள் உள்ள புத்தகம், எனக்கு இதை கம்ப்யூட்டரில் படிப்பது கஷ்டம்.)

தேவகாந்தனின் தளம் இங்கே இருக்கிறது. இவர் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் என்றும் டோரண்டோவில் வசிக்கிறார் என்று தெரிகிறது. பொதுவாக ஈழத்தமிழ் எழுத்தாளர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை. சிறு வயதில் டாமினிக் ஜீவாவின் சில கதைகளை படித்திருக்கிறேன், பிறகு ஜெயமோகன் சிபாரிசு செய்ததால் முத்துலிங்கத்தின் பிரமாதமான எழுத்துகளை படித்தேன். தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் எழுத்துகளை பற்றிய பிரக்ஞை ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது? (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)

தொடர்புடைய பதிவுகள்
சொல்வதெல்லாம் உண்மை தளப் பதிவு 1, 2
என்.கே. மகாலிங்கத்தின் பதிவு
தேவகாந்தனின் தளம்
நூலகம் தளத்தில் கதாகாலம் புத்தகம்