தற்செயலாகத்தான் இந்த ப்ளாகை பார்த்தேன். ஜீவி என்பவர் எழுதுகிறார். சில எழுத்தாளர் அறிமுகங்கள் என்னை கவர்ந்தன.

ஜீவிக்கு பிடித்த எழுத்தாளர்களில் எனக்கு பிடித்தவர்கள் குறைவுதான். அவரது அறிமுகங்களும் ஓரளவு சம்பிரதாயமானவைதான். பாட புத்தகங்களில் வரும் கட்டுரைகள் மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது. அதனால் என்ன? அவருடைய எழுத்தில் காணப்படும் உண்மையான உணர்வு இந்த குறைகளை போக்கி விடுகிறது.

கீழே இருப்பது அவரது அறிமுகங்கள் லிஸ்ட், என் சிறு குறிப்புகளுடன். பேரை க்ளிக் செய்தால் ஜீவியின் பதிவை காணலாம்.

எஸ்.ஏ.பி. – எஸ்.ஏ.பி குமுதம் ஆசிரியர், குமுதத்தை மிக பெரிய முறையில் வெற்றி பெற வைத்தவர். அவர் எழுபதுகளிலேயே கதைகள் எழுதுவதை குறைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கும் ஒரு தொடர்கதையில் ஆளவந்தார் என்ற ராசியான போலி டாக்டர் ஹீரோ. அப்போது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஜீவி அவரது காதலெனும் தீவினிலே, நீ, பிரமச்சாரி, சொல்லாதே, இங்கே இன்றே இப்பொழுதே, ஓவியம், நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று போன்ற நாவல்களை சிலாகிக்கிறார். ஜெயமோகன் தமிழின் சிறந்த social romances லிஸ்டில் அவரது சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.

பி.எஸ். ராமையா – ராமையாவை நான் அதிகம் படித்தத்தில்லை. படித்த கொஞ்சமும் (பூவிலங்கு என்ற நாடகம், பாக்யத்தின் பாக்யம் என்ற சிறுகதை தொகுப்பு) சொல்லும்படி இல்லை. படித்ததில் ஓரளவு பிடித்தது குங்குமப் போட்டு குமாரசாமிதான். அதுவும் சிறு வயதில் கிராம நூலகம் ஒன்றில் படித்தது. (என் படிப்பு அனுபவத்தில் கிராம நூலகங்களின் பங்கு பற்றி இந்த பதிவில் காணலாம்.) ஜீவி கு.பொ. குமாரசாமி, மலரும் மணமும், தேரோட்டி மகன், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி எங்கேயோ இவர் நல்ல எழுத்தாளர் இல்லை என்றும் சி.சு. செல்லப்பா இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது ஏனென்று புரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனும் இவரை நல்ல எழுத்தாளர் என்று நினைக்கவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் இவர் எழுதிய பூச்சூட்டல் என்ற சிறுகதை தான் தமிழ் சிறுகதைகளை தொகுத்தால் அதில் இடம் பெறும் என்று சொல்லி இருக்கிறார். ஜெயமோகன் இவரது பிரேம ஹாரம் என்ற நாவலை சிறந்த social romance லிஸ்டில் சேர்க்கிறார்.

ஜெகசிற்பியன் – இவரையும் நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில புத்தகங்கள் மேலும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைக்கவும் இல்லை. நந்திவர்மன் காதலி, திருச்சிற்றம்பலம் நினைவிருக்கிறது. இவருக்கு சாண்டில்யன் பரவாயில்லை என்று நினைத்ததும் நினைவிருக்கிறது. ஜீவி இவரது பல நாவல்களை குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இவரது திருச்சிற்றம்பலத்தை Historical Romances லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

ஆர்வி – ஆர்வியையும் நான் அதிகமாக படித்ததில்லை. ஒரு வெள்ளிக்கிழமையில் என்ற சிறுகதை தொகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். அதிலும் எனக்கு ஒரே ஒரு கதைதான் தேறியது – வரவேற்பு. காதலித்து கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் பந்தம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயமோகன் அணையாவிளக்கு நாவலை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். ஜீவி ஒரு வெள்ளிக்கிழமையில், அணையாவிளக்கு தவிரவும் பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

சிவசங்கரி: ஒரு காலத்தில் சிவசங்கரி விகடன் போன்ற பத்திரிகைகளின் தொடர்கதை ராணி. அவரது மார்க்கெட் பெண்கள். அப்போதெல்லாம் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். அப்பவே ஆனால் பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, என் அம்மாவின் சிநேகிதி பெண்கள் எல்லாரும் இவரை விழுந்து விழுந்து படிப்பதால், அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இவரது தொடர்கதைகளை விடாமல் படித்தேன். பெண்களிடம் உருப்படியாக பேசவும் முடியவில்லை என்பதுதான் சோகமான விஷயம். ஒரு மனிதனின் கதை, பாலங்கள், அருண் ஹீரோவாக வரும் ஒரு முக்கோணக் காதல் கதை போன்றவை பாப்புலராக இருந்தன. ஜெயமோகனும் ஒ.ம. கதை, பாலங்கள் ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் குறிப்பிடுகிறார். ஜீவி பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

தி. ஜானகிராமன்: தி.ஜாவை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்லிவிட போவதில்லை. மனிதர் ஜீனியஸ், அவ்வளவுதான். அவருடைய எழுத்துகளில் படிப்பவரை அதிர்ச்சி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் விருப்பம் தெரிகிறது. எனக்கு மோக முள் தமிழின் டாப் டென் நாவல்களில் ஒன்று. அம்மா வந்தாள் முக்கியமான ஒரு நாவல். ஜெயமோகனுக்கும்தான். எஸ். ராமகிருஷ்ணனும் தமிழின் சிறந்த நாவல்களாக இவற்றை குறிப்பிடுகிறார்.

நா. பார்த்தசாரதி: நா.பா. கொஞ்சம் உபதேசம் செய்பவர். இருந்தாலும் குறிஞ்சி மலர், சத்திய வெள்ளம் மாதிரி சில நாவல்கள் நன்றாக வந்திருக்கின்றன. ஜெயமோகன் ராணி மங்கம்மாள், மணிபல்லவம் ஆகிய இரண்டு நாவல்களையும் historical romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். மங்கம்மாள் சுமார்தான். மணிபல்லவம் நினைவில்லை. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, சமுதாய வீதி ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். சமுதாய வீதி சுமார்தான். அதில் வில்லனாக வருபவர் சிவாஜி கணேசனை வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதுதான் கொஞ்சம் அதிசயம். ஜீவி அவரது தீபம் பங்களிப்பை புகழ்ந்து எழுதி இருக்கிறார்.

விந்தன்: விந்தனின் எழுத்துகள் என்னை கவரவில்லை. நான் படித்ததும் கொஞ்சம்தான் – மனிதன் மாறவில்லை என்ற நாவல். அவரது பாலும் பாவையும் நாவலை ஜீவி சிலாகிக்கிறார்.

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காலத்தில் பேசப்பட்டவர்கள். பாப்புலராக இருந்தவர்கள். ஆனால் தி.ஜா. ஒருவர்தான் இந்த லிஸ்டில் மறக்க முடியாதவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:
ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
எஸ். ராமகிருஷ்ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்

Advertisements