தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்

தங்கர் பச்சானின் இரண்டு சிறுகதை தொகுதிகளையும் ஒரு நாவலையும் நான் இது வரை படித்திருக்கிறேன். குடி முந்திரி, வெள்ளை மாடு, ஒன்பது ரூபாய் நோட்டு. ஒ.ரூ. நோட்டு நேற்று இரவுதான் தூக்கம் வராமல் படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சிலே படித்து முடித்தேன்.

ஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். தமிழிலே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார். படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். இந்த படத்தை இப்போது தேடி பிடித்து பார்க்க வேண்டும்.

குடி முந்திரியில் டைட்டில் கதை பிரமாதம். விவசாயக் குடும்பம். ஒரு பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இதை அற்புதமாக சொல்லி இருப்பார். தமிழின் சிறந்த கதைகளில் ஒன்று. நான் என்றாவது ஒரு தமிழ் கதை ஆந்தாலஜி தொகுத்தால் இந்த கதை நிச்சயம் இடம் பெறும்.

வெள்ளை மாடு புத்தகத்திலும் டைட்டில் கதை அருமை. வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை நினைவுபடுத்துகிறது. (பிரேம்சந்த் கதை டைட்டில் ஏறக்குறையதான் ஞாபகம் இருக்கிறது.)

இரண்டு புத்தகம் என்னிடம் இருக்கிறது. சவுத் பே, ஈஸ்ட் பே பகுதியில் உள்ளவர்கள் இரவல் வாங்கி படிக்கலாம். வெள்ளை மாடு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.