சில மறுமொழிகளை பார்த்ததும் எழுந்த எண்ணங்கள் – பத்து பாயிண்ட்கள்:

1. இன்றைய நிலையில் இலங்கை அரசுக்கு உட்பட்ட ஈழம் என்பதுதான் ப்ராக்டிகல்.

2. நான் தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்று நம்புபவனில்லை. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. விடிந்தால் சரி. கஷ்டங்கள் தீர்ந்தால் சரி. தேசங்களை பிரிக்கும் கோடுகள் எல்லாம் செயற்கையானவை.

3. நான் பேசுவது லாஜிக். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அநேகம் பேர் ஏதோ ஒரு விதத்தில் இழப்பை சந்தித்தவர்கள். இலங்கையில் இந்த போரில் ஐம்பதாயிரம் பேராவது இறந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காயம் பட்டவர்களுக்கு சிங்களர்களோடு ஒன்றாக ஒரு நாளும் வாழ முடியாது, தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர்களின் இழப்பு கடந்த காலம். அவர்கள் நிலை காம்புகளில் வாழும் தமிழர்களின் நிலையை விட பல மடங்கு பெட்டர்.

4. இன்றைய முக்கிய பிரச்சினை புலம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் இழப்புகள் இல்லை – இலங்கையில் வாழும் அகதிகளாகிவிட்ட தமிழர்கள்தான், அவர்கள் கஷ்டங்கள்தான் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களின் காயங்களுக்காக பழி வாங்குவதை விட, அவர்களுக்கு ஆறுதல் தேடுவதை விட, இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மாறுவது மிக முக்கியம். அது நடந்த பிறகுதான் அடுத்ததை யோசிக்க வேண்டும்.

5. புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை கஷ்டம்தான். ஆனால் புலிகளால் இழப்பை சந்தித்தவர்களும் தமிழர்களில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புலிகள் கூடவே கூடாது என்று நினைக்கத்தான் செய்வார்கள். நாம் அனைவரும் கடந்த கால கசப்புகளை தாண்டி செல்ல வேண்டிய நேரம் இது.

6. இந்த நிலையில் இந்தியாவுக்கு கடமை இருக்கிறது. இந்தியத் தமிழர்களுக்கு கடமை இருக்கிறது. இலங்கை அரசுக்கு இத்தனை நாள் வால் பிடித்தாகிவிட்டது. இலங்கை அரசு ஜெயித்தாகிவிட்டது. இனப் படுகொலைக்கு சின்ன அளவிலாவது இந்தியாவும் உதவி செய்தாகிவிட்டது. இலங்கை அரசை ஐ.நா. கண்டிக்க விடாமல் உதவி செய்தாகிவிட்டது. இப்போது ராஜபக்சே மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய காலம்.

7. காம்ப் தமிழர்களுக்கு உதவுதல், செஞ்சிலுவை சங்கம், வாலண்டியர்கள் சுலபமாக காம்ப்களுக்கு செல்தல், காம்பில் உள்ள குடும்பங்களை இணைத்தல், காம்பில் உள்ளவர்களுக்கு உணவு+உடை+மருத்துவம்+கல்வி, தமிழர்கள் வீடு திரும்புதல், போரில் ஈடுபட்டவர்களுக்க் பொது மன்னிப்பு, தமிழர்களுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் கிடைக்க வைப்பது, முதலில் இவற்றுக்கெல்லாம் வெளிப்படையான டைம் டேபிளை அறிவித்தல் இதற்கெல்லாம் ராஜபக்சே மீது அழுத்தம் இருக்க வேண்டும்.

8. இத்தனை நாள் சும்மா இருந்தோம, சரித்திரம் அதற்கே நம்மை – இந்திய அரசை – எல்லாம் மன்னிக்குமா தெரியாது. ஆனால் புலிகள், இந்தியாவில் நுழைந்து ஒரு முன்னாள் பிரதமரையே கொன்றவர்கள், எந்த விதத்திலும் பயனடையக் கூடாது என்று நினைத்தோம் என்று ஒரு சாக்காவது சொல்லலாம். அது சரியோ தவறோ, ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது. இனி அதுவும் இல்லை. இப்போதும் நாம், இந்திய அரசு சும்மா இருந்தால் சரித்திரம் நம்மை எந்த நாளும் மன்னிக்காது. இதற்கான அழுத்தத்தை, ஆக்க பூர்வமான முயற்சிகள் இப்போதே ஆரம்பித்தாக வேண்டும். ஏற்கனவே கால தாமதம் ஆகிவிட்டது.

9. தேஷமிண்டே மட்டி காது, மனுஷ்யலு என்றார் பிரபல தெலுகு கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ. (தேசம் என்றால் மண் இல்லை, மனிதர்கள் என்று அர்த்தம்) இந்திய அரசு என்றால் நாம்தான். மன்மோகன் சிங் மட்டும் இல்லை. குறைந்த பட்சம் உங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு நம் கவலைகளை சொல்ல முயற்சிக்கலாம். பிரபல தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள பிரபல பத்திரிகைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் க்ரானிகில், இந்தியா டுடே, வீக், போன்றவை என்னதான் சொல்கின்றன என்பதை தமிழர்களுக்கு சொல்ல முயற்சிக்கலாம். தமிழகத்துக்கு வெளியே என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால்தான் அவர்களை influence செய்ய முடியும். நிறைய பேருக்கு இலங்கை என்றால் புலிகள்தான், ராஜீவ் கொலைதான். அதற்கு மேலும் பிரச்சினை இருக்கிறது என்று தெரிய வைக்கும் பொறுப்பு தமிழர்களுடையது. அவர்களுக்கு தெரியவில்லை என்றால் தவறு அவர்களுடையது இல்லை, நம்முடையது. நம் கண்ணோட்டத்தையே ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருந்தோம் என்றால் மேலே எப்படி செல்வது? முடிந்தால் ஆங்கிலத்தில் பிளாக் எழுதலாம். (யார் படிப்பார்கள் என்பது அடுத்த விஷயம்) ஸ்டாலின், இன்றைய வெளிநாட்டு உறவு உதவி மந்திரி சஷி தரூர் போன்றவர்களின் தளங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதலாம். ஆக்க பூர்வமாக வேறு என்ன செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்களேன்! நானும் அதை வைத்தே இன்னும் இரண்டு மூன்று பதிவு ஓட்டி விடுகிறேன்!

10. நீங்கள் புலிகளை முழு மூச்சாக ஆதரிப்பவராக இருந்தாலும் இப்போதைக்கு அடக்கி வாசிப்பது நல்லது. சாம பேத தான தண்டம் என்று சொல்வார்கள். தண்டம் இப்போது தோற்றுவிட்டது. பேத தானத்துக்கு இப்போது வழி இல்லை. சாமம் (நல்ல விதமாக பேசி பார்ப்பது) மட்டும்தான் இப்போதைக்கு மிச்சம் இருக்கும் வழி.

பின் குறிப்பு: விகடன் பொதுவாக புலிகள் ஆதரவு நிலை எடுத்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் நான் மீள்பதிவு செய்த விகடன் கட்டுரை இலங்கை அரசுக்கு உட்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகள் என்ற நிலையில்தான் பேசுகிறது. இனி செய்ய வேண்டியவை என்று குறிப்பிடப்பட்டிருப்பவை இலங்கை அரசு செய்ய வேண்டியவையே. இலங்கை அரசுக்கு இவற்றை செய்ய இந்திய அரசு பிரஷர் கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு government-in-exile அமைக்க முயற்சிப்பதை தவறு என்று கூட சொல்கிறது. தனி ஈழம் வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு

Advertisements