பிரபாகரன்

பிரபாகரன்

பிரபாகரனின் குறைகள் என்னவென்றுதான் பல நாளாக கத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் நிறைகளே இல்லாத மனிதர் இல்லை. புலிகளின் நோக்கங்களும் தவறானவை இல்லை.

எண்பதுகளில் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சில ஆயிரம் பேர் கொண்ட படை இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். லாஜிஸ்டிக்சுக்கு தமிழக ஆதரவு இன்றியமையாததாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும், ராவும், இந்திராவும் ராஜீவும் அவர்கள் பின்னால் நின்றிராவிட்டால் கஷ்டம்தான்.

ஒரு பக்கம் பலம் வாய்ந்த ஒரு எதிரி; இன்னொரு பக்கம் தான் சொன்னபடி நடக்க வேண்டும் என்று மிரட்டும் அதிக பலம் வாய்ந்த “நண்பன்”. நண்பனின் ஆதரவுக்காக தன்னை போன்ற பலரிடம் பலத்த போட்டி. சுய பலம் கம்மி. பலம் என்று ஒன்றுதான் இருந்தது – தன் குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத தன்மை. ஒரு நல்ல தலைவனுக்கு அது அவசியம்.

அந்த கனவுக்கு பின்னால் பல இலங்கை தமிழர்கள் வந்தார்கள். அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். தான் பட்ட காயங்களுக்கு அவர் மட்டுமே பழி வாங்க முடியும் என்று நினைத்தார்கள். அவர் சொன்னால் உயிரையும் கொடுக்க சித்தமாக இருந்தார்கள் – கொடுத்தார்கள்.

இலங்கை தமிழர்கள் மட்டும் இல்லை, இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார். ராஜீவ் கொலை வரைக்கும அவரை எதிர்த்து கருத்து சொல்லும் தமிழர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆரின் ஆதரவு அவருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞருக்கு நிச்சயமாக எம்ஜிஆர் ஆதரிக்கும் மனிதர் என்பது மனக்குறையாக இருந்திருக்கும் – ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை. அவரது வழக்கமான வாய்ச்சொல் வீரம் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. IPKF-ஐ எதிர்த்து ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டார். பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டால் என்ன, பத்மநாபா செத்தால் என்ன, பிரபாகரனின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டேதான் போனது. (பகத் சிங் அபுல் கலாம் ஆசாத்தை கொன்றால் அவரை கொண்டாடுவோமா என்ன?) அவரை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு கதி இல்லை என்ற இமேஜ் வளர்ந்துகொண்டே போனது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

அவருக்கு இந்தியாவிலிருந்து ஏற்பட்ட முதல் பின்னடைவு ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம். அது நல்ல விஷயம் என்பது என் உறுதியான கருத்து. அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே நிறைவேறி இருந்தால் இன்றைக்கு அளவுக்கு விஷயம் மோசமாக போயிருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களும் புலிகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று காரண்டி கொடுக்க ராஜீவ் யார்? இந்தியா யார்? ராஜீவுக்கு நோபல் பரிசு கனவு இருந்திருக்க வேண்டும், ஜெயவர்த்தனாவுக்கு குஷியாக இருந்திருக்கும். அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்த்தன மாட்டிவிட்டுவிட்டார்.

கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், தன் ஈகோவை மறந்து செயல்பட்டிருந்தால், பிரபாகரன்தான் இலங்கைக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும் தலைவரகா வந்திருப்பார். ஆனால் அப்போதே பிரபாகரனுக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு, இதெல்லாம் நடக்காத விஷயம் என்று உறுதியாக தோன்றி இருக்க வேண்டும். அவரது சிந்தனை தவறு என்று சொல்வதற்கில்லை, மிக ஆழமான காயங்களை சுமந்தவர் அவர். ஒப்பந்தம் நடக்க ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் பெருமூச்சு விடலாம், ஆனால் காயங்களை நான் சுமக்கவில்லை. நெருப்பு எப்படி சுடும் என்று தீக்குளித்தவனுக்குத்தான் தெரியும். சிங்களர்களை நம்ப முடியாது என்று பிரபாகரன் நினைத்திருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஒப்பந்தத்தால் இந்தியா பட்ட நஷ்டங்களுக்கு நான் ராஜீவைதான் பொறுப்பாக்குவேன், பிரபாகரனை அல்ல.

சக போராளிகளை கொல்வது பாட்டுக்கு நடந்துகொண்டேதான் இருந்தது. சிரிசபாரத்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட். அதை பற்றி எதிர்கருத்து தெரிவித்தவர்கள் மிக கம்மி. அந்த தைரியத்தில்தானோ என்னவோ, ராஜீவை கொல்ல ஆள் அனுப்பினார். அது பெரிய முட்டாள்தனம். கொஞ்சம் கூட அறிவில்லாத செயல். இந்திய தமிழர்களின் ஆதரவு ஒரே நாளில் முக்கால்வாசி கரைந்துவிட்டது. ஒரு தாக்குதலால் தன் இயக்கத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். அது தெரியாத பிடிவாதக்காரரால் இயக்கத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.

ஆனால் காப்பாற்றினார். பெரும் அளவுக்கு இந்திய ஆதரவு கரைந்துபோனாலும், தாக்கு பிடித்தார். இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். தனி ஈழம் என்று ஒரு நாடு உருவாகவில்லையே தவிர significant நிலப் பரப்பை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் சர்வ தேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவில், பணத்தில், இன்னும் தமிழ் நாட்டில் எஞ்சி இருந்த ஆதரவில் சமாளித்தார்.

அவர் மீது எனக்கு பலமான எதிர்ப்பு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவர் மறைவு ஈழத்தமிழர்களுக்கு நஷ்டம் என்றே கருதுகிறேன். அவர் உயிரோடு இருக்க மாட்டாரா என்ற நப்பாசை எனக்கு கொஞ்சம் இருந்தது, ஆனால் இப்போது புலிகளே சொல்லிவிட்டார்கள்.

பெரும் லட்சிய வேகம் உள்ளவர், வீரர், கொண்ட கொள்கையை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். ஆனால் எதிர்ப்பு காட்டும் ஒவ்வொருவரையும் வஞ்சம் வைத்து அழிக்கும் தன்மையும், சக போராளிகளை, சொந்த சகோதரர்களை அதிகாரத்துக்காக கொல்லும் கயமையும், எங்கேயோ இருக்க வேண்டிய ஒரு தலைவனை வீழ்த்திவிட்டன. அவர் சைமன் பொலிவர் போன்று, கரிபால்டி போன்று சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவர். இப்படி முடிந்தது பெரிய துரதிருஷ்டம். ஆனால் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும், பல ஈழத் தமிழர்களுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் ஈழத் தமிழர்களுக்கு ஹீரோதான். ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே கடைசி வரை போராடியவர் என்பதை என்னை போன்ற எதிர்ப்பாளர்களும் மறுக்க முடியாது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு