ராமகிருஷ்ணனின் லிஸ்ட் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன். அப்புறம் கொஞ்சம் புத்தக அலமாரியை புரட்டி பார்த்தேன். பாஸ்டன் பாலா ஒரு லிங்க் கொடுத்திருந்தார். இன்னும் ஞாபகம் வந்தவை.

மௌனியின் பிரபஞ்ச கானம் – இந்த கதை ஏதோ கொஞ்சம் புரிகிறது. ஆனால் பிரமாதமாக ரசிக்கவில்லை.

கு.ப.ராவின் விடியுமா? – எனக்கு நேராக கதை சொல்லாவிட்டால் பல நேரங்களில் புரிவதில்லை. இந்த கதையில் அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா?

தி. ஜானகிராமனின் பாயசம் – பொறாமையை, அசூயையை இந்த கதையை விட பிரமாதமாக வெளிப்படுத்தி விடமுடியாது. அண்ணன் பையன் தலையெடுத்து சித்தப்பாவுக்கு எல்லாம் செய்தாலும் சித்தப்பாவுக்கு ஈகோவும் பொறாமையும் படுத்துகிறது. கல்யாணத்தில் பாயசத்தில் எலி என்று சொல்லி அண்டாவை கவிழ்த்து விடுகிறார்.

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு – அன்பளிப்பு அற்புதம். தன்னை மட்டும் விட்டுவிட்டார் என்ற மனநிலையை அருமையாக எழுதி இருக்கிறார். இருவர் கண்ட ஒரே கனவு ஓகே, ஆனால் பிரமாதம் இல்லை.

கி. ராஜநாராயணனின் கோமதி, கதவு – கோமதி gay சமையல்காரன் பற்றியதுதான். நன்றாக எழுதி இருக்கிறார். கதவு வீட்டில் ஜப்தி செய்யப்பட வீட்டு குழந்தைகள் விளையாடும் கதவு பற்றி. நன்றாக வந்திருக்கிறது. கி.ரா.வுக்கு கேட்க வேண்டுமா?

சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் – பிரசாதம் அருமை. நான் இதை விவரிக்க விரும்பவில்லை. படித்து அனுபவியுங்கள். ரத்னாபாயும் நன்றாக இருக்கிறது. விகாசம் பற்றி எஸ்.ரா. சொல்லி இருக்கிறார், நான்தான் கவனிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த சு.ரா. கதை இதுதான். கோவில் காளையும் உழவு மாடும் என்ற ஒரு நல்ல கதையும் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் – மனிதர் ஜீனியஸ். டெக்னிக் மிக அற்புதம். இதையும் விவரிக்க முடியாது.

ஜெயகாந்தனின் குரு பீடம், முன் நிலவும் பின் பனியும் – இரண்டும் மிக நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம்.

ஆதவன் சிவப்பா உயரமா மீசை வெச்சுக்காமல் – பாஸ்டன் பாலா லிங்க் கொடுத்து உதவினார். நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம். பகுதி 1, பகுதி 2, பகுதி 3

வண்ணநிலவனின் எஸ்தர், மிருகம், பலாப்பழம் – எஸ்தர் மிக அருமை. மிருகம் புரியவே இல்லை. பலாப்பழம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. கொஞ்சம் subtle ஆன எழுத்தாளர்.

ராஜேந்திர சோழனின் புற்றில் உறையும் பாம்புகள் – ஓகே. ஆனால் பிரமாதம் இல்லை.

வண்ணதாசனின் நிலை – ஓகே.

ி. நாகராஜனின் டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள் – ஓடிய கால்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. டெரிலின் ஷர்ட் ஓகே.

பூமணியின் ரீதி – தண்ணீருக்கு தவிக்கும் இரு சிறுவர்கள். நன்றாக இருந்தது.

சுப்ரபாரதிமணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – மட்டன் சமையலை பற்றி விலாவாரியாக எழுதிக்கொண்டே பொய் திடீரென்று ஓ. ஹென்றி ஸ்டைலில் முடிக்கிறார். நல்ல எழுத்து.

அழகிய பெரியவனின் வனம்மாள் – பரவாயில்லை. மரங்களை நேசிக்கும் ஒரு வயதான பாட்டி.

சுயம்புலிங்கத்தின் ஒரு திருணையின் பூர்வீகம் – என்னிடம் இருக்கும் கலெக்ஷனில் ஒரு திருணையின் கதை என்று ஒன்று இருக்கிறது. பரவாயில்லை.

சம்பந்தம் உள்ள பிற பதிவுகள்
100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணனின் லிஸ்ட்
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

Advertisements