லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி மறைந்துவிட்டதாக படித்தேன். லக்ஷ்மி சத்தியமூர்த்தியின் ஒரே மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர். எமர்ஜென்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பு உருவாக உழைத்தவர். 77-இல் தென் சென்னையில் எம்.பி. தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அப்போது மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இவருக்காக பிரச்சாரம் செய்து கேட்டிருக்கிறேன். (ஃபெர்னாண்டஸ் மிக அருமையான பேச்சாளர்.) அவரை நான் அந்த ஒரு சமயத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருக்கு அப்போது ஐம்பது வயது இருந்திருக்கலாம். ஒல்லியாக, ஒரு நாற்பது வயதுக்காரர் மாதிரி இருந்தார்.

அவரை பற்றி இந்த தளத்தில் நான் எழுத ஒரே காரணம்தான். வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பை அவர் அறுபதுகளில் உருவாக்கினார். நாங்கள் வசித்த கிராமங்களில் வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் மிக அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் புத்தகங்களை என் அம்மா மிக ஆர்வத்தோடு படிப்பார். நல்ல முறையில் அச்சிடப்பட்டிருக்கும். (சாதாரணமாக நூலகங்களில் புத்தகங்களின் க்வாலிடி சொல்லும்படி இருக்காது, சுலபமாக கிழிந்துவிடும்.) தி. ஜானகிராமன், லா.ச.ரா. ஆகியோரின் புத்தகங்களை கேட்டு வாங்கி பதித்தார் என்று ஞாபகம். எனக்கு பர்சனலாக ஞாபகம் இருப்பது சாயாவனம் மட்டுமே. நல்ல இலக்கியத்தரம் உள்ள புத்தகங்களை பதிக்க ஒரு குழுவினர் முயற்சி செய்கிறார்கள் என்று என் அம்மா சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

பிற்காலத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என் அம்மாவுக்கு வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்களை பார்த்து ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் உருவாகிய முயற்சியை பற்றி இங்கே பேசுகிறார். மிக அருமையான பேட்டி, மிஸ் செய்யாமல் படியுங்கள்! வீட்டை எல்லாம் அடகு வைத்து புத்தகம் வெளியிட்டிருக்கிறார்!