சரித்திர நாவல்களுக்கு பல சுவாரசியமான மறுமொழிகள் வந்தன. அவற்றிலிருந்து எடுத்த விவரங்கள், பரிந்துரைகள், மற்றும் இணையத்தில் கிடைத்த பரிந்துரைகள் கீழே.

ஞானியும் வீரபாண்டியன் மனைவியை பரிந்துரைக்கிறார். இப்போது இந்த புத்தகம் கிடைக்கிறதா?

மாலன் டணாய்க்கன் கோட்டை என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறார்.

பிரபஞ்சன் எழுதிய மானுடம் வெல்லும் என்ற புத்தகத்தை ஜெயமோகன் தனது டாப் டென் புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். நான் சரித்திர நாவல் பகுதியை பார்த்துவிட்டு, இதை பார்க்காமல் கோட்டை விட்டுவிட்டேன். மானுடம் வெல்லும் பற்றி அவர் சொல்வது:

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப் படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரேசமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.
1991ல் பிரசுரமாயிற்று.

நண்பர் நந்தாவும் மானுடம் வெல்லும், உடையார் ஆகியவை பற்றி மறுமொழி எழுதினார். (நந்தா மேல் எனக்கு கொஞ்சம் காண்டு உண்டு. அவர் ரமணி சந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு ரமணி சந்திரன் புத்தகமாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.:-) ) நந்தா சொன்ன மற்ற புத்தகங்கள்
1. சேது நாட்டு வேங்கை, இந்திரா சௌந்தர்ராஜன் – சேது நாட்டு வேங்கை கிழவன் சேதுபதியைப் பற்றியது. ராமேஷ்வரம் மற்றும் ராமலிங்க விலாசம் என்று அந்த அரண்மனையப் பற்றி நன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. பொன் அந்தி, எஸ்.பாலசுப்ரமனியம்மருதநாயகத்தை வைத்து எழுதப்பட்டது.
3. காஞ்சிபுரத்தான், ரா.கி.ரங்கராஜன் – பாளையத்தார்கள் காலத்திய முழுக்க முழுக்க கற்பனைக் கதை. நடை நன்றாய் இருக்கும்.
4. பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி

விஜயராகவன் ஜெயமோகன் குறிப்பிடும் ரோமாபுரி பாண்டியன் வேஸ்ட் என்று சொல்கிறார். அவர் ராஜா ராணி பாதுஷாக்கள் இல்லாத கதைகளை – சரித்திர பின்னணி கொண்ட கதைகளை – விரும்புபவர் போல தெரிகிறது. அப்படி எனக்கு தெரிந்து எழுதுபவர் பிரபஞ்சன்தான். மானுடம் வெல்லும் பற்றி ஜெயமோகன் எழுதி இருப்பதை படித்து பாருங்கள். அதை தவிரவும் அவர் சில கதைகள் – அனேகமாக பாண்டிச்சேரி பின்னணி கொண்டவை – எழுதி இருக்கிறார். பாலகுமாரனும் இப்படி சிலவற்றை எழுதி இருக்கிறார். இப்போது நாவல் பேர் எதுவும் ஞாபகம் வரவில்லை – ஜெம்பை கோவில் கல்வெட்டு, மயிலை, சுசீந்திரம் கோவில்கள் பற்றி எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

எஸ். ராமகிருஷ்ணன் தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அவர் சிபாரிசு செய்யும் நாவல்களில் சரித்திர நாவல்கள் நான்குதான். பொன்னியின் செல்வன், வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், உடையார். அவருடைய ஸ்டாண்டர்ட் என்னுடையதை விட கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருக்கிறது. 🙂

ம.தி.மு.க. தலைவர் வைக்கோ சரித்திர நாவல்களைப் பற்றி ஒரு சம்பிரதாயமான உரை ஆற்றி இருக்கிறார். அதை இங்கே காணலாம். அவர் இங்கே சிவகாமியின் சபதம் பற்றி நீண்ட அறிமுகம் செய்து வைக்கிறார்.

Advertisements