சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவர் எனக்கு நன்றி சொல்கிறார், நான்தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். காஷுவலாக நீங்கள்தான் விவரங்கள் கொடுங்களேன் என்று சொன்னதற்காக அரும்பாடுபட்டு, பல வாரிசுகளை தேடி கண்டுபிடித்து, புத்தகங்களிலும் வலைத் தளங்களிலும் தேடி, விவரங்களை ஒரு முறைக்கு இரண்டு முறை டைப் செய்து இந்த சீரிசை எழுதி இருக்கிறார். அரசு செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராக நின்று செய்திருக்கிறார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

ஓவர் டு சேதுராமன்!

திரு. முருகுசுந்தரம் அவர்கள் குறிப்புகளுடன், நாட்டுடைமை – அறிமுகங்கள் நிறைவு பெறுகிறது. மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கியதிலிருந்து, இன்று வரை இப்பணியில் எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முதலாக என்னை விருந்தினராயேற்று, தனது வலைத்தளத்தில் இக்குறிப்புகளைப் பிரசுரம் செய்ததற்கு, திரு ஆர்.வி. அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் எனது நன்றிகள்.  பின்னர் பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிய எனது தேடலில், உதவிய பல அன்பர்களுக்கும் மனங்கனிந்த எனது நன்றி – இவர்களுள் முக்கியமானவர்கள் – சண்முகா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. சண்முகம், பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு அமர் ஜோதி (இவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி – இவரிடமிருந்த தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம்தான் அவ்வளவு விவரங்களைச் சேகரிக்க உதவியது)

புலவர் தேவராசன் (இவர் சொல்லிய பிறகே எனக்கு மது.ச. விமலானந்தம் எழுதியுள்ள தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தெரிந்தது), ஆனந்த விகடன் வீயெஸ்வீ, திரு ஜி.ராமச்சந்திரன் (ஃபோட்டோக்களில் உதவி), சேலம் டிங்கு ட்ராவல்ஸ் திரு ராகவன், மதுரை தேவராசன் (இவ்விருவர் உதவி இல்லாவிடில் திரு. முருகுசுந்தரத்தின் வாரிசுகளைக் கண்டு பிடித்திருக்க முடியாது), காஞ்சி பச்சையப்பா கல்லூரி நூலக மேலாளர் திருமதி அன்னம்மாள் அவருடைய நண்பர் திருமதி அனுராதா (இவர்கள் இருவரும்தான் திரு முருகுசுந்தரத்தின் மகள் திருமதி வனிதா அம்பலவாணனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தனர்).

ஒரு பெரிய மனத்தாங்கல் – மார்ச்ச முதல் வாரத்திலிருந்து தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கும், மற்ற அரசு வாரியங்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சல்கள் இன்றுவரை பதில் ஈட்டவில்லை. மின்னஞ்சல் முகவரி என்பது அரசுக்கு ஒரு அலங்காரப் பொருள்தான் போலிருக்கிறது.

முதலிலேயே சுந்தர ராமசாமி, கண்ணதாசன் வாரிசுகள் நாட்டுடைமையை நிராகரித்தவிட்டதால், தேடல் இருபத்தாறு அறிஞர்களுடைய படைப்புகளுடன் நின்றது. இவர்கள் இருவரும், நாடறிந்தவர்கள், ஏன், உலகமேயறிந்தவர்களாகையால், இவர்கள் பற்றிய குறிப்புகளைத் தேடவில்லை! இதன் பின்னர், லக்ஷ்மி, சாண்டில்யன், மு.வரதராசன் அவர்களது வாரிசுகளும் நாட்டுடைமையை நிராகரித்தனர். மீதமுள்ள இருபத்துமூன்று பேர்களில், ிரு. ஜமதக்னி, திரு ஜே.ஆர். ரங்கராஜு இருவருடைய ‘நாட்டுடைமை’ இன்னம் முற்றுப்பெறவில்லை என தமிழக அரசு குறிப்பு தெரிவிக்கிறது.

முடிக்குமுன், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மகனும், காலச்சுவடு பதிப்பாளரான கண்ணன் தெரிவித்துள்ள கீழ்க்கண்ட சில கருத்துக்கள்/உண்மைகள்  (தினமலர் 17-3-2009) தமிழன்பர்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

எழுத்தாளர்கள் படைப்புகளை நாட்டுடைமையாக்கும் மரபு, உலகிலேயே, தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இந்தியாவிலும், பிற மாநிலங்களில், இந்த வழக்கம் இல்லை. காந்தி, நேரு, தாகூர் படைப்புகள் கூட இங்கு நாட்டுடைமையாக்கப்படவில்லை. இன்றைய தமிழக அரசுக்கு, காப்புரிமை பற்றிய புரிதல் இல்லை. ஒரு எழுத்தாளரின் படைப்புகள், அவர் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தானாகவே பொதுவுடைமையாகி விடுகின்றன. இது கூடத் தெரியாமல், ஏற்கனவே பொதுவுடைமையாகி விட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையே, மீண்டும் விலை கொடுத்து வாங்கி அரசு நாட்டுடைமையாக்குவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. அரசே தன்னிச்சையாகவும், ரகசியமாகவும், ஒரு எழுத்தாளர் பட்டியலைத் தயாரிக்கும். பின்னர் அதை சட்ட சபையில் அறிவிக்கும். இந்த அறிவிப்பைப் பார்த்து எழுத்தாளர் குடும்பங்கள் மறுத்தால், விட்டு விடுவராம்!! இதுதான் பெருந்தன்மையா?

வணக்கம் – சேதுராமன்
ஜூன் 8, 2009

Advertisements