இந்தத் தளத்தின் பதிவுகளில் இது மிகப் பிரபலமானது. இதை மேம்படுத்தி ஒரு சீரிசாகவே சிலிகன் ஷெல்ஃப் தளத்தில் மீள்பதித்திருக்கிறேன்.

சாண்டில்யன் பற்றிய பதிவில் சாண்டில்யன் பல தளங்களில் – கரிகால் சோழன் காலம், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், ராஜஸ்தானம், பல்லவர்கள், கதம்பர்கள், மராத்தியர்கள், குப்தர்கள் – கதை எழுதியவர் என்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார். உண்மைதான். அது சாண்டில்யனின் ப்ளஸ் பாயின்ட்தான். அதனால்தானோ என்னவோ தமிழின் சரித்திர நாவல் என்றாலே சான்டில்யன்தான் என்று ஆகிவிட்டது. ஆனால் அவரது கதைகள் இரண்டாம் தரமானவைதான்.

தமிழில் முதல் தரமான சரித்திர நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். கதை பின்னல் என்றால் இந்த கதைதான். எத்தனை முடிச்சுகள், எத்தனை பலமான பாத்திரங்கள்? சிறு ரோல்களில் வரும் பார்த்திபேந்திரன், கந்த மாறன், சின்ன பழுவேட்டரையர், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், ஏன் குடந்தை ஜோதிடர் கூட மிக நுண்மையாக செதுக்கபட்டிருப்பார்கள். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, மந்தாகினி, ஆதித்த கரிகாலன் போன்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். இதை விட சிறந்த சரித்திர நாவலை நான் படித்ததில்லை. விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபில்ஸ் இதற்கு சமமானது என்று சொல்லலாம். ஆனால் ஹ்யூகோ எழுதும்போது இது ஒரு சம காலத்திய நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்.

கல்கியின் சிவகாமியின் சபதம் பொ. செல்வனுக்கு அடுத்தபடி சொல்ல வேண்டிய நாவல். முதன் முதலாக படித்தபோது ஒரு வாரம் நாக நந்தி கனவில் வந்தார். தூக்கத்தில் திடீர் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொள்வேன். ஆயனர், மகேந்திர வர்மர், புலிகேசி, பரஞ்சோதி, கண்ணபிரான், நரசிம்ம வர்மர் எல்லாம் மிக அற்புதமான பாத்திரங்கள். சிவகாமி அருமையான படைப்பு.

கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கக் கூடியதுதான். சாண்டில்யனின் பெஸ்ட் நாவல்களுக்கு இணையான தரம். கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரியும். கல்கியின் முதல் சரித்திர நாவல் இதுதான். இதை ப்ராக்டிசுக்காக அவர் எழுதி இருக்க வேண்டும்.

இந்த மூன்று நாவல்களையும் வைத்து சொல்கிறேன், கல்கிதான் தமிழின் மிக சிறந்த சரித்திர நாவலாசிரியர்.

சாண்டில்யனை இதற்கு அடுத்தபடி சொல்லலாம். அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

ஞாபகம் வரும் வேறு சிலர்:
அகிலன் – கயல்விழி. மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இந்த நாவல் பிடிக்காததால், நான் வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும. ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. கபாடபுரம் பெரிய ப்ளேடு.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்: படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கோவி. மணிசேகரன்: குற்றாலக் குறிஞ்சி என்று ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் ஏதாவது ஒரு ராகம் பற்றி இருக்கும். அது மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.

கௌஸிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

படிக்க விரும்புபவை: யாரோ அனுஷா என்பவர் காவிரி மைந்தன் என்று பொ. செல்வனுக்கு ஒரு sequel எழுதி இருக்கிறாராம். பாலகுமாரனின் உடையார் என்ற புத்தகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இவை இரண்டையும் படிக்க விரும்புகிறேன்.

இவர்களைத் தவிர விக்ரமன், அரு. ராமநாதன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன், மு. மேத்தா, தாமரை மணாளன், ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை. கண்ணதாசனின் விருது பெற்ற சேரமான் காதலி என்ற புத்தகத்தில் என்னால் ஐம்பது பக்கத்தை தாண்டமுடியவில்லை.

தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னால் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்! இந்த தளத்தில் நான் எழுதுவதே அடுத்தவர்கள் சொல்வதை கேட்கலாம் என்றுதான்…

Advertisements