இரண்டு மூன்று முறை அபிவாதயே பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்படி என்றால் என்ன என்று சேதுராமன் மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திரர் – மஹா பெரியவர் என்று அழைக்கப்படுபவர் – அளித்த விளக்கத்தை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

நம் ஊரில் நிச்சயதார்த்த, கல்யாண நிகழ்ச்சிகளில் ஓலை வாசிக்கும்போது இன்னாரின் பேரனும், இன்னாரின் மகனும் ஆன மாப்பிள்ளையும் இன்னாரின் பேத்தியும் இன்னாரின் மகளும் ஆன பெண்ணும் என்று படிப்பார்கள். வட மாநிலங்களிலும், குறிப்பாக ஜாட் பிரிவினரிடம் ராம் சிங் வல்து தசரத் சிங் வல்து திலீப் சிங் (திலீப் சிங்கின் மகன் தசரத் சிங்கின் மகன் ராம் சிங் என்று அர்த்தம்) மாதிரி சொல்லிக் கொள்வதை கேட்கலாம். பத்திரங்களிலும் இப்படி எழுதுவது சகஜம். இங்கே இரண்டு மாற்றங்கள் – ஒன்று உடனடி மூதாதையரை விட, புராண கால மூதாதையரை அறிவிப்பது. அப்புறம் சாகை, சூத்ரம் (சூத்ரம் என்றால் என்ன என்று விளக்கத்தை படித்த பிறகும் சரியாக புரியவில்லை.) என்று இன்னும் விவரங்கள்.

அபிவாதனம் என்று முதலில் சொன்னேனே, அதன் வாசகத்தைப் பற்றிக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுகிறேன்.

அபிவாதனம் சொல்வதில் முதலில் ஒருத்தன் என்ன கோத்திரமோ, அதை ஆரம்பித்து வைத்தவர்களான மூல ரிஷிகளின் பெயர்கள் வரும். இதற்கு ப்ரவரம் என்று பெயர். ரிஷி என்றால், வேதங்களில் அது வரை லோகத்துக்கு வந்திருக்காத ஒரு புது மந்திரத்தை அகண்ட ஆகாசத்திலிருந்து கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தவர். இப்படி ஒவ்வொரு கோத்ரத்திலும் மூலவர்களாக ஒன்றிலிருந்து ஐந்து வரை ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். அந்த ரிஷிகளிலும் யார் ரொம்ப முக்கியமானவரோ, அவர் பெயரிலேயே கோத்ரம் இருக்கும். ஆங்கீரச கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த முதல் ரிஷியான ஆங்கீரசர் பெயரில்
இருக்கிறது. கௌன்டின்ய கோத்ரம் என்பது அந்த வம்ச ஆரம்பத்தில் வந்த மூன்று ரிஷிகளில், மூன்றாமவரான கௌண்டின்யரின் பெயரில் இருக்கிறது. இதற்குச் சில விலக்கும் உண்டு. அந்த சமாசாரம் இப்போது வேண்டாம்.

ப்ரவரத்தில் சொல்கிற ரிஷிகளில் – பெரும்பாலான கோத்ரங்களில் மூன்று ரிஷிகளின் பெயர் வரும். அப்படிப்பட்ட ரிஷிகளில் – எவர் பெயரில் கோத்ரமிருந்தாலும், அந்த ரிஷிகளின் பரம்பரை க்ரமம், lineage, ஆதி முதலில் இருந்த ரிஷி, அப்புறம் அவருடைய பிள்ளை ரிஷி, அதற்கப்புறம் அந்தப் பிள்ளையின் பிள்ளை ரிஷி என்பதாகவே வரும். (பித்ரு தர்ப்பணத்திலோ இதற்கு மாறாக நம் வம்சத்தில் முடிவாக நமக்கு முன்னால் வந்த மூன்று பேரைச் சொல்லி அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது: அதிலும் கடைசி கடைசியாய் வந்த அப்பாவில் ஆரம்பித்து, அப்புறம் அவருடைய அப்பா, அதற்கப்புறம் அவருக்கும் அப்பா என்று வரிசைப்படுத்திக் கொடுக்கிறது) கல்யாணங்களில் கன கோஷமாக ப்ரவ்ரம் சொல்கிறது வழக்கம். வதூ-வரர் என்ற கல்யாணப் பெண்ணும் பிள்ளையும் சகோத்ரமாக இல்லாமல் வெவ்வேறு கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது முக்கியமான விதியாதலால், அந்த விதியை அனுசரித்தே ஒரு விவாஹம் நடக்கிறது என்று சபைக்கு ப்ரகடனம் செய்யும் உத்தேசத்துடன் இப்படி கன கோஷமாக ப்ரவரம் சொல்லுவது. அதன்போது, அபிவாதனத்தில் சொல்லுவது, தர்ப்பணத்தில் சொல்லுவது ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவார்கள். முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.

அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள் வரும் என்பது தான் இங்கே முக்கிய விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.

இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – சரி வரச் சொல்லுகிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன் என்று நேர் அர்த்தம் – தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டிச் சொல்கிறேன் என்று நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.

ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.

(தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி (கடைசிப் பகுதி) – தொகுப்பு ரா. கணபதி – வானதி பதிப்பகம் – 2000)

தொடர்புடைய சில முந்தைய பதிவுகள்:

அதர்வ வேதம் பற்றி சந்திரசேகரேந்திரர்

அதர்வ வேதம்

விஸ்வாமித்ர கோத்ரம்

Advertisements