சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

*** சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் என்னைப் பார்க்க வந்தார்கள். நான் மாடியில் இருந்தேன். என் பெண்கள் அவர்களை ‘மேலே இருக்கிறார், போங்கள்” என்று அனுப்பி வைத்தனர். மாடிக்கு வந்த மாணவிகள் என்னைப் பார்த்து “சாண்டில்யனைப் பார்க்க வந்தோம்” என்றனர். “என்ன வேண்டும்” என்று கேட்டேன் — மாணவிகள் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள், சற்றுக் குழம்பினார்கள் – ‘இல்லை, அவரைப் பார்த்துத்தான் பேச வந்தோம்” என்றனர். நான் என்ன பதில் சொல்ல? நான், கதை எழுதும் சாண்டில்யனாக இருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு, அவர்கள் வந்ததற்குக் காரணமும் இருந்தது. யவன ராணியையும், கடல் புறாவையும் படித்துவிட்டு அவற்றைப் பற்றி சந்தேகம் கேட்க வந்தவர்கள் நெற்றியில் நாமத்தைப் போட்டுக்கொண்டு, எட்டு முழம் வேட்டி இடையில் கட்டி, மேலே ஒரு மூன்று முழத்துண்டுடன் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தால் அந்தக் கதைகளுக்கு ஆசிரியன் இவன்தான் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

நானும் மெல்ல வெட்கத்தை விட்டு மெல்லப் புன்முறுவல் கொண்டு “நான்தான் சாண்டில்யன், என்ன வேண்டும்”? என்று அறிமுகம் செய்து கொண்டேன். நீங்களா? வியப்பு அவர்கள் முகத்தில் நன்றாகக் காட்சி அளித்தது. ‘ஆம் நானேதான்” – “எப்படியெப்படியோ கதை எழுதுகிறீர்களே” என்றாள் அந்த மாணவி – “என்ன செய்வது, அப்படித்தான் எழுத வருகிறது” – “உங்கள் வர்ணனை தான்…” என்று மாணவி தொடங்கினாள். இப்போது மற்ற மூவர் மௌனமும் ஆரம்ப அதிர்ச்சியும் கலைந்தன – இன்னொரு மாணவி, முதல்வளின் சொற்களைப் பாதியில் வெட்டி ‘தத்ரூபமாயிருக்கிறது” என்று பாராட்டினாள். (போராட்டங்கள் என்ற தன் சுய சரிதையில், நாவலாசிரியர் சாண்டில்யன்) ***

தமிழ் நாடு திருக்கோயிலூரில், திரு. இராமானுஜம் ஐயங்கார், திருமதி பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு ஒரே மகனாக, 1910ம் வருஷம் நவம்பர் மாதம் 10 தேதி பிறந்தவர் சாண்டில்யன். பெற்றோர் இட்ட பெயர் பாஷ்யம். குடும்பத்தினருடைய சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திரு இந்தளூர் என்ற கிராமம்.

இளமைக்கல்வி, நன்னிலம் பண்ணைனல்லூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு சென்னை பச்சையப்பன் பள்ளி, சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் தொடர்ந்தது. கல்லூரிக் கல்வி திருச்சி செயின்ட் ஜோசஃப் காலேஜில். திருச்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1930ல் ராஜாஜியின் விஜயம் இவரை சட்டமறுப்பு இயக்கத்தில் ஈர்த்தது. தந்தைக்கு ஒரே மகன் என்ற காரணத்தால், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட வேண்டாம், நிர்மாணப் பணியில் ஈடுபடுங்கள் என்ற ராஜாஜியின் அறிவுரை, இவரைக் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக்கியது. துயிலி வேஷ்டியையும், பாப்ளின் சட்டையையும், கதருக்கு மாற்றிக்கொண்டார்.

கல்லூரியில் படிக்கும்போதே 1929ம் வருஷம் ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் மகள் ரங்க நாயகியை மணம் புரிந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னை தியாகராய நகரில் வாசம் தொடங்கியது. இவர் வீட்டுக்கெதிரில் ராமசாமி தெருவில், கல்கியும், சற்றுத் தள்ளி உஸ்மான் ரோடில் வெங்களத்தூர் சாமினாத சர்மாவும் வசித்து வந்தனர். சர்மா அப்போது திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்களின் நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவையுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்த சாண்டில்யனை ஏதாவது கதை எழுதலாமே என்று ஊக்குவித்த போதிலும், எனக்கு எழுத வராது என்று இவர் மறுத்து விட்டார். இந்த சால்ஜாப்பு அவர்களது இன்னொரு நண்பரும் திராவிடன் என்ற பத்திரிகையின் ஆசிரியருமான தோழர் சுப்பிரமணியத்திடம் எடுபடவில்லை. அவரது கட்டாயத்தின் பேரில் சாந்த சீலன் என்ற காங்கிரஸ் பின்னணி கொண்ட ஒரு கதை எழுதிப் பிரசுரமும் ஆனது. அக்கதை கல்கிக்கும் பிடித்துப் போகவே, இவரை எழுதச் சொல்லி கண்ணம்மாவின் காதல், அதிர்ஷ்டம் முதலிய கதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார் கல்கி.

ஆரம்ப முதல் சம்ஸ்கிருதமே படித்திருந்தவருக்கு, தமிழின் இந்த ருசி பிடித்துப் போயிற்று. முப்பதிலிருந்து ஒரு நான்கு வருஷங்கள் திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்ற வித்துவானிடம் தமிழ் பயில ஆரம்பித்து, திருவாய் மொழி ஆயிரமும், நம்பிள்ளையின் முப்பத்து ஆறாயிரப்படி வியாக்கியானத்துடன் மற்றும் பல தமிழ்க் காப்பியங்களையும் கற்றார்.

சுதேசமித்திரன் வாரப்பதிப்பிலும் சிறுகதைகள் எழுதி வந்த சாண்டில்யனுக்கு பத்திரிகையில் சேர வாய்ப்பு கிடைத்தது. 1935ம் வருடத்திலிருந்து 1942ம் வருடம் வரை, சுதேசமித்திரன் பத்திரிகையில் நிருபரானார். நாற்பத்து மூன்றில் ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நிருபர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஹிந்துஸ்தான் டைம்சில் துணை ஆசிரியரானார். அந்த நேரம், சண்டே டைம்சின் ஆசிரியரான திரு கே.ஆர்.நாராயணன் இவரை, வாகினி பி.என்.ரெட்டிக்கும், சித்தூர் வி.நாகையாவுக்கும் அறிமுகம் செய்து வைத்த பின், சினிமா உலகிலும் பிரவேசித்து, திரைக் கதை எழுதத் தொடங்கினார். ஸ்வர்க சீமா, என் வீடு என்ற படங்களின் திரைக் கதைகளின் உருவாக்கத்தில் இவருக்குப் பங்கிருந்தது. தொடர்ந்து நாகையாவின் ரேணுகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான வித்துவானாக மாறினார்.

அஹிம்சைக் கொள்கைக்கும், பலாத்காரத்துக்குமுள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், சத்தியாக்கிரக இயக்கத்தைப் பின்னணியாக வைத்தும், இவர் எழுதிய பலாத்காரம்தான் தமிழகத்தின் முதல் அரசியல் நாவலாகும். சத்தியமூர்த்தியின் முகவுரையுடன், சொந்த செலவில் தானே அந்தப் புத்தகத்தைப் பிரசுரம் செய்தார்.

மித்திரன் ஸ்ரீனிவாசன் இவரைத் திரும்ப அழைத்ததும், மித்திரனில் சேர்ந்தவர், அப்பத்திரிகையின் விசேஷப் பகுதிகள் அனைத்தையும் திருத்தி அமைத்து, மித்திரனின் வாசகர் வட்டத்தையும், சர்குலேஷனையும் அதிகரித்துக் காட்டினார். சி.ஆர்.எஸ். இவரை வெளியிலும் எழுதலாம் என்று அனுமதித்த பிறகு, அமுதசுரபியில் தன் கதைகளை வெளியிடலானார். பாலைவனத்துப் புஷபம், சந்த தீபம் என்ற இரு சரித்திரக்கதைகளுக்குப் பிறகு, வே.லக்ஷ்மணனின் விருப்பத்தின் பேரில் ஜீவ பூமி என்ற தொடர்கதையையும் எழுதினார்.

பத்திரிகைக்காரர்கள் சம்மேளனத்துக்கு இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. பெரிய வித்துவான்கள் பாட்டுக்கச்சேரிகள் வைத்து, சம்மேளனக் கட்டடத்திற்குப் பணம் திரட்டினார். பத்திரிகையாளர் சங்கத்தை தொழிற்சங்கமாக மாற்ற இவர் எடுத்த முயற்சிகள் இனிப்பையும் கசப்பையும் கலந்தே ஈர்த்தன. பத்திரிகைத் தொழில் பற்றி இவர் எடுத்த முதல் செய்திப் படம் Birth of a Newspaper எல்லோரது பாராட்டையும் பெற்றது. தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.

தான் சரியென்று நினைத்ததை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற இவரது மனப்பான்மை, பல முன்னாள் நண்பர்களின் மனக்கசப்புக்குள்ளாகியது. இவர் எழுதிய சினிமா/நாடக விமர்சனங்களாலும், சர்ச்சைகள் உண்டாகியன. ராஜாஜியின் பரம பக்தராக இருந்தவர், ராஜாஜியின் 1952 சினிமா எதிர்ப்புக் கொள்கையைக் கடுமையாகவே விமர்சித்தார். கல்கி, கி.வா.ஜ., ஆர்.வி., டி.கே.ஷண்முகம் போன்றோரும் இதில் உள்ளடங்குவர்.

இவரது குடும்பத்தினர் – இரு பிள்ளைகள் – பேராசிரியர் சடகோபன், பேராசிரியர் கிருஷ்ணன். ஐந்து பெண்கள் – வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி.

இவரது படைப்புகள் விவரம் வருமாறு:
இலக்கியத் திறனாய்வு – கம்பன் கண்ட பெண்கள் – திருப்பாவை விளக்க உரை

வாழ்க்கை வரலாறு – ஸ்ரீ இராமானுஜர் – போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை)

சிறுகதைத் தொகுப்பு – ராணியின் கனவு

சமூக நாவல்கள் – புரட்சிப்பெண் (பலாத்காரத்தின் மறுபதிப்பு) – செண்பகத் தோட்டம் – மனமோகம் – நங்கூரம் – மதுமலர்

சரித்திர நாவல்கள் – கடல் புறா (மூன்று பாகங்கள்) – ஜல தீபம் (மூன்று பாகங்கள்) – யவன ராணி (இரண்டு பாகங்கள்) – ராஜ பேரிகை – ராஜ திலகம் – கன்னி மாடம் – மன்னன் மகள் – சேரன் செல்வி – கவர்ந்த கண்கள் – மலை வாசல் – ஜீவ பூமி– மஞ்சள் ஆறு – மூங்கில் கோட்டை – சித்தரஞ்சனி – மோகினி வனம் – இந்திர குமாரி – இளைய ராணி – நீள் விழி – பல்லவ திலகம் – நாக தீபம் – உதய பானு – அவனி சுந்தரி – மங்கல தேவி – நிலமங்கை – ஜலமோகினி – ராஜ முத்திரை (இரு பாகங்கள்) – கடல் ராணி – மலை அரசி – மோகனச் சிலை – ராஜ யோகம் – ராணா ஹமீர் – நீலவல்லி – நாக தேவி – விலை ராணி – சந்திரமதி – பாண்டியன் பவனி – ராஜ்யஸ்ரீ – வசந்த காலம் – விஜயமஹாதேவி

தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ 1987 –
2. போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை – முற்றுப் பெறாதது)
3. பேராசிரியர் சடகோபன் (நேர் காணல்)
4. வானதி பதிப்பகம் பட்டியல்
5. வலைத்தளக் கட்டுரைகள்

ஆர்வி: பதிவு கொஞ்சம் பெரியதாக இருப்பதால் என் கருத்துகளை இன்னொரு பதிவாக எழுதி இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை சீரிஸ்

தொடர்புடைய பதிவுகள்:
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல்
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு