நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். நான் சொல்வது தமிழ் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா இல்லையா என்று தெரியாது.

பார்ப்பனர்கள் அடுத்தவர் காலில் விழும்போது அபிவாதயே என்று தொடங்கும் சுய அறிமுகத்தை செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. நான் இந்த கோத்ரத்தில் பிறந்தவன், இந்த இந்த ரிஷிகள் என் மூதாதையர்கள், என் தாத்தா இவர், என் அப்பா இவர், எங்கள் குடும்பம் இந்த வேதத்தை பரம்பரை பரம்பரையாக ஓதி வந்திருக்கிறது, என் பெயர் இது என்ற அர்த்தம் வரும் – சமஸ்கிருதத்தில் இருந்தாலும் சுலபமாக புரியும்.

எனக்கும் சொல்லி கொடுத்தார்கள், ஆனால் மறந்துவிட்டது. நான் விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவன். விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவர்கள் எந்த எந்த ரிஷிகளை மூதாதையர்கள் என்று சொல்வார்கள் என்று சமீபத்தில்தான் சேதுராமன் எடுத்து சொன்னார். நாங்கள் யஜுர் வேதத்தை ஓதி வந்திருக்கிறோமோம். என் அம்மாவின் அப்பா குடும்பத்தினர் சாம வேதத்தை ஓதி வந்திருக்கிறார்களாம். (எனக்கு தெரிந்த வரை என் உறவினர்கள் யாரும் எந்த வேதமும் தெரிந்தவர்களில்லை.)

ரிக்வேத பாரம்பர்யம் உள்ள குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதர்வண வேத பாரம்பரியம் உள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இன்னும் இருக்கிறார்களா? யாருக்காவது தெரியுமா? இந்த வேதம் இருக்கிறதா? அனேகமாக பார்ப்பனர்களை விட பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்!

ஐயங்கார்கள், குறிப்பாக தென்கலை ஐயங்கார்கள் சமஸ்கிருதத்தை விட தமிழை, தமிழில் உள்ள நூல்களை அதிகமாக ஓதுபவர்கள். அவர்கள் இந்த மாதிரி ஏதாவது வேதம் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்வார்களா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வட நாட்டில் த்விவேதி(இரண்டு வேதம் தெரிந்தவர்), த்ரிவேதி(மூன்று வேதம்), சதுர்வேதி(நான்கு வேதம்) என்று பெயர் வைத்துக் கொள்வது உண்டு. குறைந்த பட்சம் இந்த சதுர்வேதிகள் நான்கு வேதமும் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்களா?

நான்கு வேதங்களில் அதர்வண வேதம் ஒன்றுதான் கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் மருத்துவம் எல்லாம் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அதுதான் எல்லாவற்றையும் விட வேகமாக வழக்கொழிந்திருக்கிறது! ஆச்சரியம்!

Advertisements