சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்

Advertisements