பூவை எஸ். ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம்

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

பூவை எஸ். ஆறுமுகம் ஒரு சிறந்த எழுத்தாளர். பிறந்த ஊருக்குப் புகழ் ஊட்டியவர். “பூவை” என்ற சொல்லைத் தனது பெயருடன் இணைத்துக் கொண்டு, தமிழகத்திலும், தமிழகத்திற்கு அப்பாலும் ஊரின் பெயரை நிலை நாட்டியவர். பூவை ஊரில் மலர்ந்து, புகழ் பெற்ற எழுத்தாளராக வளர்ந்து, உமா, “பொன்னி, காதல் மனிதன் போன்ற தரமான பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் எழுத்துப் பணி மூலம் அண்ணா, கலைஞர், காமராசர் போன்ற அரசியல் தலைவர்களின் நட்பையும் பெற்றவர்.

பூவை ஆறுமுகம் 1927ம் வருஷம் ஜனவரி 31ம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தனது கல்வி முடிந்தவுடன், ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலர் ஆகப் பதவி ஏற்றுக் கொண்டார். “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியர்.

சிறந்த கதாசிரியர், இருனூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும் எழுதித் தஞ்சை மண் வாசனையைப் பரப்பியவர். இவரது எழுத்தில் சமூக நீதியும், சமுதாய வளர்ச்சிக் கருத்துக்களும் நர்த்தனமாடும்.

இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகம், ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகம். கல்கி முதல் அகிலன் வரை என்ற இவரது திறனாய்வு நூல் வெகு சிறப்பானது. இவரது படைப்பான இன்னொரு கீதை தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்ட சிறந்த நாடகம். இதனால் இவருக்கு ஏற்பட்ட பெருமையை விட, இவரது சொந்த ஊரான பூவைக்கு ஏற்பட்ட பெருமைதான் அதிகம். தங்கச் சம்பா என்ற இவரது நாவல், வட்டார மணம் வீசும் வளமானதொன்று. ஐம்பது அறுபது எழுபதுகளில் யாவரும் போற்ற எழுதிக் குவித்தவர்.

தமிழக முதலமைச்சர்களாக இருந்த மாண்புமிகு எம்.பக்தவத்சலம், மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி, மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் தனது நாவல், நாடகம், சிறுகதைகளுக்காக தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். ஒரே சமயம், நாடகம் மற்றும் நாவலுக்காக டாக்டர் எம்.ஜி.ஆரிடம் தமிழக அரசின் விருதுகளைப் பெற்ற ஒரே எழுத்தாளர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இருவரையும் தனது கூண்டுக்கிளி என்ற திரைப் படத்தில் நடிக்க வைத்து, திரையுலக எழுத்தாளர் வரிசையிலும் இணைந்து முத்திரை பதித்தவர்.

இவரது சிறுகதைகள், நாவல்களுக்கென்று, சென்னை கன்னிமாரா நூலகத்தில், ஒரு தனி அலமாரியே அமைக்கப்பட்டுள்ளது.

இவரது படைப்புகள் :
சிறுகதைத் தொகுப்புகள்: கடல் முத்து, அமிர்தம், பூவையின் கதைகள், வேனில் விழா, அந்தித் தாமரை, இனிய கதைகள், திருமதி சிற்றம்பலம், தாய் வீட்டுச் சீர், அரண்மனைக் கோழிமுட்டை, சுட்டும் விழிச் சுடர் முதலானவை.
நாவல்கள்: ஒற்றை ரோஜாப்பூ, வாழும் காதல், ஜாதி ரோஜா, பத்தினித் தெய்வம், அன்னக்கிளி, பூமணம், தாய் மண், வசந்த பைரவி, நாத வீணை, நீ சிரித்த வேளை, மருதாணி நகம், சமுதாயம் ஒரு சைனா பஜார், கீழ் வானம், பத்தினிப் பெண் வேண்டும், நித்தியவல்லி, அக்கினி சாட்சி, அறம் வளர்த்த நாயகி, காதலிக்க ஒருத்தி, கற்பின் கொழுந்து, கரை மணலும் காகித ஓடமும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, மற்றும் பல.

தகவல் ஆதாரம்:
1. மது. ச. விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு – 1987
2. ஆனந்த விகடன் தகவல் வங்கி – புகைப்படத்திற்கும், வரலாற்றுக் குறிப்பிற்கும், ஆனந்த விகடன் குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி)

ஆர்வி: நான் இவர் எழுதிய எதையும் படித்ததில்லை. அதனால் எதுவும் சொல்வதற்கில்லை. கூண்டுக்கிளி படம் தயாரித்து இயக்கியது டி.ஆர். ராமண்ணா என்று நினைவு. கதை வசனம் விந்தன் என்று நினைக்கிறேன். இவரது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை.

Advertisements