சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

நாற்பத்தைந்து ரூபாய் எழுத்தராக வருவாய்த் துறையில் நுழைந்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர் திரு. பாஸ்கரத் தொண்டைமான். தான் பணியாற்றிய பகுதிகளில் கலை ஆய்வு மேற்கொண்டவர். கோயிற்கலையில் இவருக்கு இருந்த ஈடுபாடும், இவரது பெருமுயற்சியும் தான் தஞ்சைக் கலைக்கூடத்தை உருவாக்கியது. ஆட்சித் துறையினைக் கலை அழகும் இலக்கிய மணமும் கொள்ளச் செய்தவர். நல்ல எழுத்தாளர், வல்ல பேச்சாளர், சிறந்த ரசிகர் (மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு)

அண்மையில் 2005ல் நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவின் போது தொகுத்து வெளியடப்பட்ட கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் – கலைக் களஞ்சியம் என்ற புத்தகத்தில் அவரது மகள் ராஜேஸ்வரி நடராஜன் எழுதுவதைப் படிக்கலாமா?

** திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற நெல்லை மாநகரில் 1904ம் வருடம் ஜூலை மாதம் 22ம் தேதி, திரு தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஐவர். நல்ல தமிழ்ப் புலமையும், கலைஞானமும் செறிந்த குடும்பம்.. தந்தையார் முத்தையா தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.. ( தந்தை வழி பாட்டனார் திரு சிதம்பரத் தொண்டைமானும் நல்ல தமிழ்ப் புலவர் – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடத்தில் முறையாகத் தமிழ் பயின்றவர்)

பாஸ்கரத் தொண்டைமானுடைய மாணவப் பருவம், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கழிந்தது. அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, அவரது திருமணமும் நடந்தேறியது. முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மூத்த இருவரும் உள்ளனர்.

கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதுமே, வேலையும் தேடி வந்தது. இப்போது வனவளத்துறை என்றழைக்கப்படும் காட்டிலாகாவில் முதலில் சேர்ந்து பின்னர் வருவாய்த்துறை ஆய்வாளரானார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், உதவி மாவட்ட ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்து, ஐ.ஏ.எஸ்.ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்த பின்னர், 1959ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து பரம்பரை வீட்டில் தங்கி தனது இலக்கியப் பணியை மேற்கொண்டார்.

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப் பிள்ளையவர்கள் தூண்டுதல் பேரில், கல்லூரி நாட்களிலேயே ஆனந்தபோதினி பத்திரிகையில், கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதியவர். பின்னர் ரசிகமணி திரு டி.கே.சிதம்பரநாத முதலியாரவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, முழுக்க முழுக்க ரசிகமணியின் பிரதம சீடராகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.

தஞ்சையில் பணி புரிந்த போது அங்கு கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு, அவற்றைச் சேகரித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்து விட்டார். ஓய்வு பெற்ற பின், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலை நயம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். இந்தக் கட்டுரைகளை, வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கல்கி பத்திரிகை பெருமை அடைந்தது.

திருநெல்வேலியின் ஒரு பகுதியான வண்ணாரப் பேட்டையில் ரசிகமணி டி.கே.சி.யின் வீட்டில் நடு முற்றமாக இருந்த, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு அமைப்பில் தான் அன்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள்.. இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேலை நாட்டில் டாக்டர் ஜான்சனின் Literary Club க்கு எவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் உண்டோ, அந்த அளவுக்கு இந்த திருநெல்வேலி வட்டத்தொட்டிக்கும் உண்டு. வட்டத்தொட்டியின் தலைவரும், ஸ்தாபகரும் ரசிகமணி என்றால், அதைத் தாங்கி நின்ற கற்றூண் செயலாளர் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான் தான். பாஸ்கரத் தொண்டைமான் ரசிகமணியுடன் தனக்குள்ள தொடர்பின் அடிப்படையில் ரசிகமணி டி.கே.சி என்றோர் அருமையான புத்தகம் எழுதியுள்ளார். இன்னூல் மட்டுமன்று, ரசிகமணி தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் திரட்டி, ரசிகமணியின் கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூலும் வெளியிட்டுள்ளார். மூதறிஞர் ராஜாஜியிலிருந்து, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, திருப்புகழ் மணி, டாக்டர் திருமூர்த்தி, கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு போன்ற பல நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரசிகமணி எழுதிய கடிதங்கள் இதில் உள்ளன. (தொண்டைமானின் மகள் ராஜேஸ்வரி நடராஜன் அவர்கள் ரசிகமணியின் கடிதங்கள் – நண்பர் பாஸ்கரத் தொண்டைமானுக்கு — பேசும் கடிதங்கள் (இரு பகுதிகள்) என்று தொகுத்து வெளியிட்டுள்ளார்)

பாஸ்கரத் தொண்டைமானின் உற்ற நண்பர்கள் கம்பர் அடிப்பொடி சா.கணேசன், மு. கு. அருணாசலக் கௌண்டர் (திருத்திய நா. கணேசனுக்கு நன்றி!), ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, ஏ.சி. பால் நாடார் ஆகியோர். இலக்கிய உலகில் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களும், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களும் முக்கிய நண்பர்கள். முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சிதம்பர ரகுநாதன், தொண்டைமானுடைய இளைய சகோதரர். ‘எதைச் செய்வது என்பது முக்கியமல்ல, எப்படிச் செய்வது என்பதே முக்கியம்’ என்ற கோட்பாட்டுடன் தன் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டவர், பாஸ்கரத் தொண்டைமான்.

பாஸ்கரத் தொண்டைமான் 1965 ம் வருடம், மார்ச்சு மாதம் 31ம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் எழுதிய பல நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கீழே:
வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன)
வேங்கடத்துக்கு அப்பால்
பிள்ளைவாள்
தமிழறிஞர் முதலியார்
ரசிகமணி டி.கே.சி.
கலைஞன் கண்ட கடவுள்
கல்லும் சொல்லாதோ கவி
அமர காதலர்
தென்றல் தந்த கவிதை
இந்தியக் கலைச் செல்வம்
தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்)
மதுரை மீனாட்சி
ஆறுமுகமான பொருள்
பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையார்
கம்பன் சுயசரிதம்
கம்பன் கண்ட இராமன்
அன்றும் இன்றும்
சீதா கல்யாணம்
பட்டி மண்டபப் பேருரைகள்
————-

தகவல் ஆதாரம்:
1. கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம், பாஸ்கரத்தொண்டைமான் நினைவு அறக்கட்டளை – வெளியிட்டவர் ராஜேஸ்வரி நடராஜன், சரோஜினி சுப்பிரமணியம்.
2. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம் – 1987
3. புகைப்படம் கலைக்களஞ்சியத்திலிருந்து

ஆர்வி: எனக்கு தொண்டைமானைப் பற்றி அதிகம் தெரியாது. நான் அவர் எழுதிய எதையும் படித்ததில்லை. வட்டத்தொட்டி என்ற பேர் ஏதோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் இவரை போன்றவர்களின் தாக்கம் அசாதாரணமானது. அது அவர்கள் எழுதிய புத்தகங்களை விட பெரியது. ரசிகமணியும் வெகு சில புத்தகங்களையே எழுதி இருக்கிறார். ஆனால் அவரது தாக்கம் மிக மிக பெரியது. இவர் எழுத்துகள் தாமதமாக நாட்டுடமை ஆகி இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. குறிப்பாக இந்த வேங்கடம் முதல் குமரி முதல் புத்தகம் இன்னும் கிடைக்கிறதா?

ஜெயமோகன் எங்கேயோ இவர் பரணீதரனின் கோவில் உலா கட்டுரைகளுக்கு இவரே முன்னோடி என்று குறிப்பிட்டிருக்கிறார். பரணீதரன் யாரென்று உங்களுக்கு தெரியாவிட்டால் எனக்கும் உங்களுக்கும் ஒரு பத்து பதினைந்து வயதாவது வித்தியாசம் இருக்கும். அவரை அறிமுகப்படுத்தும் ஆட்டத்துக்கு நான் இப்போது வரவில்லை, ஜூட்!

Advertisements