அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பா

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

அரசு மரபு அழிந்து அன்னிய ஆட்சி அமைந்த கால கட்டத்தில் தமிழகக் கோயில்களைக் காத்துத் திருப்பணிகள் புரிந்து, புதுவதாகத் திருக்கோயில்கள் எழுப்பி ஒரு புதிய கட்டிடக் கலைப்பாணியையே உருவாக்கிய பண்பட்ட சமூகம் நகரத்தார் எனும் நனி நாகரிகச் சமுதாயம்.. தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இவர்களின் பங்கும் பணியும் பெரியது – பாரியது. சமயத்தையும் செந்தமிழையும் இரு கண்களாகக் கொண்டு அளப்பரிய அருந்தொண்டாற்றிய சின்னஞ்சிறு சமூகம் ( 1 – 1.25 இலட்சம் மக்கள் தொகை) – ஒவ்வொரு துறையிலும் இவர்களின் பங்களிப்பு அருமையது, பெருமையுடையது. எங்கும் தெரிவது இவர்தம் திருத் தொண்டே செட்டி நாட்டுத் தமிழ், என்றே தனி நூல் அமையும் தகையது (பேராசிரியர் மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு – அபிராமி பதிப்பகம், சென்னை)

அழ.வள்ளியப்பா இந்த வரிசையில் நான்காவது நகரத்தார் – ராயவரம் மண்ணிலிருந்து வந்த படைப்பாளிகளில் நாட்டுடைமை பெற்ற மூன்றாவது அறிஞர்.

வள்ளியப்பா புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் என்ற ஊரில், 1922ம் வருடம் நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பெயர், அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி. இளமைக் கல்வி எஸ்.கே.டி.காந்தி பள்ளியில் – பின்னர் கடியப்பட்டியிலுள்ள பூமேஸ்வரஸ்வாமி ஹைஸ்கூலில். கடியப்பட்டி பள்ளி இவரது ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் இருக்குமாம் – போகும் வழியெல்லாம்
தன் கற்பனைத் திறன் கொண்டு கவி பாடிச் செல்வாராம். தனது பதின்மூன்றாம் வயதிலேயே கவிதை இயற்றத் தொடங்கினாராம். இவர் தமிழ் பயின்றது பேராசிரியர் மதுரை முதலியார், இளவழகனார், மற்றும், டாக்டர் ராசமாணிக்கனார்ஆகியோரிடம்.

வாழ்க்கை நிமித்தம் 1940ல் சென்னை வந்த வள்ளியப்பா சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்து, திரு வை.கோவிந்தனிடம் பணியாற்றினார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. ஊக்குவிப்பின் காரணமாக சக்தியிலே எழுத ஆரம்பித்தார். சக்தியில் இருந்த காலத்திலே இவருக்கு இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள்.

சக்தியில் இவர் பணி புரியும்போது, இந்தியன் வங்கி விடுத்த அழைப்பை ஏற்று 1941ல் வங்கியில் சேர்ந்தார். வங்கியில் இருந்து கொண்டே கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர், வங்கியிலிருந்து 1982ல் ஓய்வு பெற்றும், கவிதைப் பணியிலிருந்து மட்டும் ஓய்வு பெறவில்லை

1944ல் வள்ளியப்பா வள்ளியம்மையை மணம் புரிந்தார். இத்தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகள் – அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள், தெய்வானை.

வங்கி பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு பத்திரிகைகளுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983ல் இருந்து 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் எல்லாக் குழந்தை எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி 1950ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். சக்தி வை.கோவிந்தன் தான் இச்சங்கத்தின் முதல் தலைவர். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல
பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

ஃபோர்ட் ஃபௌண்டேஷன் சென்னையில் தென்மொழிப் புத்தக டிரஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியபோது, அதன் விருப்பத்துக்கிணங்க, இந்தியன் வங்கி வள்ளியப்பாவை டிரஸ்டில் ஸ்பெஷல் ஆஃபீசராக நியமித்தது. முதலில் ஒரு வருடம் தான் என்றிருந்த போதிலும், வருடா வருடம், இந்தப் பணியைத் தொடர இந்தியன் வங்கி அனுமதித்தது. தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நூல்கள் வெளிவர வள்ளியப்பா தான் காரணம்.

வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் 1979ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை சொற்பொழிவாற்றியவர், 1981ல் ஐந்தாவது உலகத் தமிழ் மகா நாட்டிலும் அதே தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல், என்றெல்லாம் போற்றப்பட்டவர், 1982ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்று கௌரவிக்கப்பட்டார்.

குழந்தைகளுக்காக இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும், ஆயிரத்திற்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

வள்ளியப்பா 1987ல் காலமானார். இவரது படைப்புகளில் சில கீழே:

ஈசாப் கதை பாடல்கள் — ரோஜாச் செடி — உமாவின் பூனை — அம்மாவும் அத்தையும் — மணிக்கு மணி — மலரும் உள்ளம் — கதை சொன்னவர் கதை — மூன்று பரிசுகள் — எங்கள் கதையைக் கேளுங்கள் — பர்மா ரமணி — எங்கள் பாட்டி — மிருகங்களுடன் மூன்று மணி — நல்ல நண்பர்கள் — பாட்டிலே காந்தி கதை — குதிரைச் சவாரி — நேரு தந்த பொம்மை — நீலா மாலா — பாடிப் பணிவோம் — வாழ்க்கை வினோதம் — சின்னஞ்சிறு வயதில் — பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

தகவல் ஆதாரம்:
1. தமிழ் விக்கிபீடியா தகவல்கள்
2. கூகிள் புக்ஸ் வலைத்தளம்
3.சோம.லெ. எழுதிய செட்டி நாடும் செந்தமிழும் வானதி பதிப்பகம் 1984
4. பேராசிரியர் மது.ச.விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு 1987

ஆர்வி: அழ. வள்ளியப்பா சிறுவர்களுக்காக எழுதினார் என்பதைத் தவிர எனக்கு அதிகமாக தெரியாது. சிறுவர்களுக்காக எழுதுபவர்கள் தமிழில் குறைவு, அந்த ஒரு காரணத்துக்காவே இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்படுவது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. (ஞாபகம் வரும் மற்றவர்கள் – பெரியசாமி தூரன், வாண்டு மாமா, பூவண்ணன் ஓரளவு)
இவரைப் பற்றி ஒரு அருமையான தளம் இங்கே.

Advertisements