நாட்டுடமை ஆன எழுத்துகள் வேர்ப் பதிவு இங்கே.

இவரை பற்றி திண்ணை தளத்தில் வந்த ஒரு கட்டுரை இங்கே.

சேதுராமனின் அடுத்த பதிவு தொடர்கிறது.

தமிழ் வளர்ந்த வரலாற்றில் செட்டி நாட்டிற்குத் தனி இடமுண்டு. கடல் கடந்து தமிழ் வளர்த்த பெருமையும், திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற சொற்றொடரை உருவாக்கிய பெருமையும் நகரத்தார்களுக்கே. வெளி நாடுகளில் வணிகத்தை வளர்த்தவர்கள் அதனோடு தமிழ் மொழி, பண்பாடு முதலியவை நிலைத்து வளரவும் வித்திட்டார்கள். இத்தகைய பெருமைகளைப் பெற்ற நகரத்தார் குடியில் தமிழறிஞர்கள், தமிழ் வளர்த்த சான்றோர்கள் பலர் இருந்தனர். அந்தத் தமிழறிஞர்களில் சிறப்பு பெற்ற ஒருவர்தான் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில், நகரத்தார்களின் தொண்ணுற்றாறு ஊர்களில் ஒன்றாக விளங்கும் மகிபாலன்பட்டி என்ற சிற்றூரில் 1881ம் வருடம், அக்டோபர் மாதம் பதினாராம் தேதி பிறந்தவர் கதிரேசன். இவருடைய பெற்றோர், திரு. முத்துக் கருப்பன் செட்டியார், சிவப்பி ஆச்சி என்பவர்கள்.

கதிரேசன் பிறந்து இரண்டாண்டுகள் வரை நல்ல உடல் நலத்தோடுதானிருந்தார். மூன்றாம் வயதில் அவரை இளம்பிள்ளைவாதம் தாக்கியது. இந்த நோய் காரணமாக கதிரேசன் அடுத்த நான்கு ஆண்டுகள் பள்ளிகளில் சேர முடியவில்லை.. அதன் பிறகே அவர் ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆயினும் உடற் குறை காரணமாகவும். குடும்பச்சூழல் காரணமாகவும் பண்டிதமணியால் தொடர்ந்து பள்ளி சென்று படிக்க முடியவில்லை. எனினும் தாமாகவே முயன்றும் தக்க ஆசான்களின் உதவியுடனும் பல நூல்களைப் படித்தார். சோழவந்தான் அரசன் சண்முகனார் பண்டிதமணியின் ஆசான்களில் முக்கியமானவர். சண்முகனார் தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களின் நுணுக்கங்களை ஆராய்ந்து உணர்த்துவதில் ஆற்றல் வாய்ந்தவர். தன் ஆசான் சண்முகனாரைப் பற்றி பண்டிதமணி குறிப்பிடுகிறார் – “இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு யான் பொருளுணர்ந்து கொண்டேனெனினும் தொல்காப்பியம் முதலிய நூல்களோ, சேனாவரையர் போன்றோரின் உரைகளோ என் அறிவிற்கெட்டாத ஆழமுடையனவாக இருந்தன. பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தன. இவ்வியல் நூல்களை ஐயந்திரிபறக் கற்றாலன்றி புலமை நிரம்பியதாகாதெனவும் அறிந்து கொண்டேன். ஆசிரியரை யான் அவாவியிருந்த காலத்தே, திருவருளின் உதவியால் அரசன் சண்முகரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நுண்மாணுழை புலத்தையும், இயல் நூலறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன்.”

சண்முகனார் மூலம் மு.ரா. கந்தசாமிக் கவிராயர், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், மறைமலையடிகள் போன்ற சான்றோருடன் பண்டிதமணி தொடர்பு கொண்டார். அக்காலத்தில் தலை சிறந்த சொற்பொழிவாளர் என அனைவராலும் பாராட்டப் பெற்ற ஞானியார் அடிகளை, மறைமலையடிகள் மூலம் அறிமுகம் பெற்றவர் ஞானியாரின் சொல் இனிமையும் கருத்தாழமும் நிறைந்த பேச்சுக்களைக் கேட்ட பின்னர், தாமும் அவ்வாறு பேச வேண்டும் என்று விரும்பிய பண்டிதமணி, ஞானியாரின் பாணியிலேயே தாம் பேசும் ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் உரிய குறிப்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கும் முறையையும், குறிப்பெடுத்து நிரல் படப் பேசும் வழக்கத்தையும் மேற்கொண்டார்.

பண்டிதமணி தமிழ்மொழியையும், சைவ சமயத்தையும் போற்றியவர். சைவ சமய சாஸ்திரங்களையும், சிவாகம நூல்களையும், அத்துறையில் வல்லவரான ஒருவரிடம் முறையே கற்க வேண்டும் என விரும்பி, அப்போது சிறந்து விளங்கிய காரைக்குடி சொக்கலிங்கனாரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சமயப் பெரு நூல்களைப் பயின்று, சமய அறிவும் நிரம்பப் பெற்றார்.

தமிழ் மொழியிலுள்ள பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த பண்டிதமணி, சிவஞான யோகிகளின் சிவஞான போதப் பேருரை முதலான தோத்திர நூல்களை நன்கு கற்றறிவதற்கு வட மொழிப் பயிற்சி இன்றியமையாதது என்று உணர்ந்தார். வட மொழியில் வல்லுநரான தருவை நாராயண சாஸ்திரியார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஐந்தாண்டுகள் வட மொழியில் உள்ள உயர்ந்த காவியங்கள், நாடகங்கள் முதலான பல்வேறு இலக்கியங்களையும், பாணினி, வியாகரணம் போன்ற இலக்கண நூல்களையும் கற்றார்.

தாம் வாழும் செட்டி நாட்டுப் பகுதியில் தமிழை வளர்ப்பதற்கும் சமயப்பணி புரிவதற்கும் ஒரு சங்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்த விரும்பிய பண்டிதமணி 1909ம் ஆண்டு சன்மார்க்க சபை என்ற அமைப்பை சோழவந்தான் புலவர் அரசன் சண்முகனார் தலைமை தாங்க, நிறுவினார். கூடியிருந்த அவையோரின் விருப்பப் படி இச்சபை மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை எனப் பெயரிடப் பட்டது. செட்டி நாட்டில் நிறுவப் பட்ட முதல் சபை இது. சபையின் உயர்ந்த நோக்கங்களில் சில – சிறந்த புலமையாளர்களை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்தல், மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி பயிற்றுவித்தல், தமிழ் வட மொழிகளில் சிறந்த நூல்களைத் தொகுத்துரைத்தல், கல்வி ஒழுக்கம் பற்றிய கருத்துக்களை அச்சிட்டு இலவசமாக வழங்குதல், இலக்கண இலக்கிய சமயத் தொடர்பான இதழ்களை வருவித்துப் படிக்கத் தூண்டுதல்.. பண்டிதமணியின் முதல் நூலாகிய நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம் சபையின் இரண்டாவது ஆண்டு வெளியிடப் பெற்றது.

பண்டிதமணி தனது முப்பத்தியிரண்டாவது வயதில் தனது அத்தையின் மகள் மீனாட்சியை மணந்து கொண்டார். பண்டிதமணி மீனாட்சி தம்பதிகளுக்கு, நான்கு மகன்களும், மூன்று பெண்களும் பிறந்தனர்.

1929ம் ஆண்டு செட்டி நாட்டரசர், தமது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குப் பேராசிரியராக வரும்படி டாக்டர் உ.வே.சாமிநாதையரைக் கேட்டுக் கொண்ட போது, அவர் “தங்கள் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் தகுதியுடையவர்கள் இருவர் – ஒருவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மற்றொருவர் ரா. ராகவையங்கார் – இருவருமே இரு மொழிப் புலமை படைத்து விளங்கும் தமிழ்ப் பேராசிரியர்கள்” என்றதும், செட்டி நாட்டரசர் பண்டிதமணியை விரும்பியழைத்தார். அழைப்பை மறுத்த
பண்டிதமணியை முதலில் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கு அறிவுரை கூறும் குழுவில் நியமித்தார். பின்னர் 1934ம் ஆண்டு பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பதவியேற்றார். 1946ம் ஆண்டு வரை பன்னிரண்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திறம்படப் பணியாற்றினார் பண்டிதமணி.

1925ல் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையளித்த பட்டம் தான் பண்டிதமணி – 1942ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு மகா மகோபாத்தியாய என்ற பட்டமளித்தது. 1951ல் குன்றக்குடி ஆதீனம் இவருக்கு சைவ சித்தாந்த வித்தகர் என்ற பட்டத்தையும், தமிழ்ப் புலவர் மகா நாடு முது பெரும் புலவர் என்ற பட்டத்தையும் வழங்கின.

ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் தம் வாழ் நாள் பணிகளாகக் கொண்டு வாழ்ந்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 1953ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

பண்டிதமணி இயற்றிய நூல்களின் விவரம்:
உரை நடைக் கோவை (முதற்பகுதி) சமயக் கட்டுரைகள் *
உரை நடைக் கோவை (இரண்டாம் பகுது) இலக்கியக் கட்டுரைகள்*
மணிமலர்த் திரட்டு (முதல் நான்கு) கட்டுரைகள்
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம் (1911)
திருவாசகம் விளக்கம் *
திருச்சதகம் விளக்கம் *
நீத்தல் விண்ணப்பம் *
திருவெம்பாவை விளக்கம் *
பதிற்றுப்பத்தந்தாதி

மொழிபெயர்ப்புகள்:
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் (கௌடலீயம் – பொருணூல்)
சுக்கிர நீதி *
மண்ணியல் சிறு தேர் (ம்ருச்ச கடிகம்)
உதயன சரிதம் *
சுலோசனா *
மாலதி மாதவம்
(* இக்குறியிட்ட நூல்கள் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையினால் வெளியிடப்பட்டவை)

தகவல் நன்றி:
1. திரு. சுப்பிரமணியம் (பண்டிதமணியின் பேரர்)
2. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் – ஆசிரியர் திருமதி நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி வெளியீடு 2006
3. புதுவை ஞானம் திண்ணை.காம் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை
4. பண்டிதமணி அவர்கள் திருவுருவச் சிலை திறப்பு விழாமலர் 1974) — புகைப்படம் நன்றி திரு. சுப்பிரமணியம்
5. சேதுராமன் சொல்லி, விட்டுப் போன ஒரு ரெஃப்ரென்ஸ் – வ்லைத் தளத்தில் பண்டிதமணி பற்றிய தகவல்கள் தேடுகையில், முதலில் தென்பட்டது, அவரது ஃபோட்டோ தான் – my great grand father என்ற குறிப்புடன் – இந்தப் புகைப்பட காலரியில், மகிபாலன்பட்டி கிராமத்திலுள்ள பண்டிதமணியின் இல்லம், செட்டி நாட்டு வீட்டு அமைப்புகள், அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அலங்கார/கைவினைப் பொருள்கள் முதலியவை உள்ளன. 1974ல் திறக்கப்பட்ட பண்டிதமணியின் சிலையும் இருக்கிறது.