பூரணலிங்கம் பிள்ளை

பூரணலிங்கம் பிள்ளை

சேதுராமனின் அடுத்த guest post.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவானதொரு திறனாராய்ச்சிப் புத்தகம் முதன் முதலாக எழுதியது இவராகத்தானிருக்கும். 1904ம் வருடம் “A Primer of Tamil Literature” என்ற புத்தகம்தான் இவர் முதலில் எழுதியது. இதன் மறுபதிப்பு 1929ல் வெளி வந்தபோது அப்புத்தகத்திற்கு “Tamil Literature” எனப் பெயரிடப்பட்டது.

திருநெல்வேலிக்கருகேயுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற சிற்றூரிலே 1866ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் பூர்ணலிங்கம். அவ்வூர்ச் சிவன் கோயிலுள்ள பெருமானின் பெயர் பரிபூர்ணக்ருபேசர் அல்லது பூர்ணலிங்கம் என்பது. அங்கு வாழும் மக்கள் தம் குழந்தைகளுக்கு பூரணலிங்கம் என்ற பெயரிடுவது இன்னமும் வழக்கில் உள்ளது. இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை என்பவர்கள்.

இளம் வயதில் ஊரிலுள்ள திண்ணைப் பள்ளியில், செல்லப் பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். பூரணலிங்கத்தின் தந்தையும் செல்லப் பெருமாளிடமே கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு அருகிலுள்ள மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் சுந்தரம்பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கணமும், திருக்குறளும் மனதிலே நன்றாகப் பதியும்படி பாடம் கேட்டுத் தேர்ந்தார். அடிப்படைத் தமிழ்க் கல்வி முடிந்ததும் தருவையிலுள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார். தனது ஹைஸ்கூல் படிப்பை, இன்று ஹிந்து கல்லூரி என்றழைக்கப்படும், ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியிலே படித்துத் தமது பதினைந்தாவது வயதில் நடுப்பள்ளித் தேர்வில் வெற்றிபெற்று, அதற்கடுத்த ஆண்டு இரட்டைத் தேர்வு பெற்று, மெட்ரிகுலேஷன் படிப்பும் முடித்தார்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்ணலிங்கம் மேலே தொடர்ந்து படிக்க முடியாமல், பரமக்குடியிலுள்ள முன்சீஃப் கோர்ட்டிலே எழுத்தாளராகப் பணியாற்றத்தொடங்கினார். இந்த விஷயம் அறிந்து ஹிந்து கல்லூரி பேராசிரியர் விங்க்ளேர் இவர் பட்டப் படிப்பை முடித்தாக வேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டு அதற்கு ஆவன செய்து எஃப்.ஏ. தேர்வில் வெற்றியடையச் செய்தார். அப்போது கல்லுரியில் நடந்த மில்லர் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்தார். டாக்டர் மில்லரே இவர் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடங்கள் எடுத்தவர். பி.ஏ.பட்டம் பெற்ற பின் பூரணலிங்கம் தனது சகோதரி திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பியவர் முதலில் எழுத்தாளராக, நெல்லை மாவட்டக் கலெக்டர் காரியாலயத்திலும், பின்னர் பாளையம் கோட்டையிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தார்.

திருநெல்வேலியில் பணி புரிந்த போது, தாயம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டக் கலெக்டர் வேண்டுகோளின்படி எட்டயாபுரம் ஜமீன் இளவரசுக்குக் கல்வி கற்றுத் தரத் தொடங்கி அப்பணியை இனிதே முடித்தார். வாழ்க்கை முன்னேற்றம் கருதி, பணியில் இருந்தவாறே சட்டப் படிப்பு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தார். இவர் சென்னை வந்த செய்தி கேட்டு டாக்டர் மில்லர் கிறிஸ்தவக்கல்லூரியிலும், உயர் பள்ளியிலும் ஆசிரியப்பணி தந்து ஆதரித்தார். கல்லூரியில் இவர் வேலை பார்க்கும்போது (1894-1899) அங்கு தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) இவருக்கு ஒப்புயர்வற்ற நண்பரானார். இவ்விருவரும் சேர்ந்து சென்னைக் கடற்கரையினில் செய்து கொண்ட முடிவின் பயனாக எழுந்தவைதான் தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்கள். பரிதிமால் கலைஞரால் எழுதப் பெற்றது தமிழ்மொழி வரலாறு – தமிழ் இலக்கிய வரலாறைப் பூரணலிங்கம் ஆங்கிலத்தில் எழுதினார்.

1900ம் வருஷம் முதல் 1904ம் வருஷம் வரை கோயம்புத்தூர் செயிண்ட் மைக்கேல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், 1904 முதல் 1911 வரை திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பணி புரிந்தார். 1912 முதல் 1919 வரை சென்னையில் இருந்தபோது சொந்தமாக கெமிசிசு என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அதே காலத்தில் JUSTICE என்ற ஆங்கிலத்தாளுக்குத் துணையாசிரியராகவும் இருந்தார்.

1920 முதல் 1922 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர் 1926 வரை திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரித் தலைவர் கார்டினர் வேண்டுதலின் பேரில் ஆங்கிலத் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தவர், ஓய்வு பெற்று முந்நீர்ப் பள்ளம் திரும்பினார்.

ஓய்வு காலத்தில் தமிழ்ப் பணியிலும், ஆங்கிலத்திலும் தமிழிலும் பேருரைகள் நிகழ்த்துவதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இடைவிடாது படித்துக் கொண்டே இருப்பார். சட்டம் பயின்றும், வழக்குரைஞர் வாழ்க்கையில் பற்றில்லாமையால் பி.எல்.தேர்வினை எழுதாது விட்டுவிட்டார். யாரையும் எளிதில் நம்பும் தன்மையுடையவர். எவரும் வியக்கும் வண்ணம் பல வகைத் துன்பங்களையும் புறங்கண்டு, எவர் துணையினையும் எதிர்பாராமல் வாழ்ந்தவர், தனது எண்பத்தோராவது வயதில் (1947ல்) காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு.

பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் முப்பத்திரண்டு நூல்களும், தமிழில் பதினெட்டு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். ஆங்கில நூல்கள் வருமாறு:

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய பல்கலைக் கழக வினாக்கள் — ஷேக்ஸ்பியர் பாடல்கள் — கோல்ட்ஸ்மித்தின் கதைகள் — கார்லைல் எழுதிய அபட்டு சாம்சன் — ஆங்கில இலக்கிய விளக்கத் தொகுப்பு — ஆங்கிலத்தில் பயிற்சிகள் — ஆங்கிலத்தில் பேச்சு முறை — மெட்ரிகுலேஷன் வாசகம் — மெட்ரிகுலேஷன் முன்வகுப்பு வாசகம் — ரிப்பன் ஆரம்பம் – இளைஞர் முதியவர் வாசகங்கள் — நடுத்தர வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத் திரட்டு — இந்திய வரலாறு (இளைஞர்களுக்கு) — இங்கிலாந்து வரலாறு (முதியவர்களுக்கு) — பி.ஏ.வகுப்பிற்கு சாக்ரடிஸ் பிளேட்டோ வரலாறுகள் — ஜூலியஸ் சீசர் உரை — ஒதெல்லோ உரை — எஃப்.ஏ., பி.ஏ. ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு விரிவான உரைகள் — ரோமன் சட்டத் தொகுப்பு — மேயின் பழங்காலச் சட்டம் – சட்ட முறைமைகளின் சுருக்கம் — மேயின் பழங்காலச் சட்டச் சுருக்கம் — ஒப்பந்தச் சட்டம் — இன உதவிச் சட்டம் — திருக்குறள் உரையுடன் — இலங்கைப் பெருமன்னன் இராவணன்

தமிழ் நூல்கள்
ஔவை குறள் — ஆயிரத்து ஐம்பத்தைந்து செய்யுட்களையுடைய ‘செய்யுள் கோவை’ — விவேக விளக்கம் – இராயர் அப்பாசி கதைகள் — வாசகத் திரட்டு — இரு சிறு கதைகள் — கதையும் கற்பனையும் நீதிக் கதைகள் — வீரமணி மாலை — தமிழ்க் கட்டுரைகள் — பன்னிரு பெண்மணிகள் — நபி நாயகமும் கவி வாணர்களும் — மருத்துவன் மகள் — தமிழரும் தமிழ்ப்புலவர்களும் — தப்பிலி — காமாட்சி என்ற நவ நகை நாடகம் — ஐரோப்பியப் போர் — நவராத்திரி விரிவுரைகள் — சூரபதுமன் வரலாறு

(தகவல் ஆதாரம் – நெல்லைத் தமிழ்ப் புலவர்கள் — புத்தகத்திலிருந்து பிள்ளையவர்கள் வரலாற்றைத் தந்து உதவியவர்கள் – அவரது பிள்ளை வயிற்றுப் பேரர்களான மு.சி.பூரணலிங்கம், மு.சி.சந்திரன் திருநெல்வேலி, வலைத்தளத்தில் வி.சுந்தரம் ஐ.ஏ.எஸ்.கட்டுரை)

ஆர்வி: சேதுராமன் எப்படியோ பூரணலிங்கம் பிள்ளையின் பேரன்களை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு இந்த விவரங்களை சேகரித்திருக்கிறார். மிக பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

பூரணலிங்கம் பிள்ளை எழுதிய ஆங்கில நூல்கள் அந்த காலத்து ஆங்கிலக் கல்விக்கு பாடப் புத்தகங்களாகவோ, இல்லை கோனார் நோட்சாகவோ பயன்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய தமிழ் புத்தகங்களின் தலைப்புக்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஒரு முன்னோடி முயற்சியாக இருந்திருக்க வேண்டும். அது மீண்டும் பதிவு பெற்றால் நன்றாக இருக்கும்.

சமீபத்தில் பரிதிமால் கலைஞர் எழுதிய மதிவாணன் என்ற புத்தகத்தை படித்தேன். தாங்க முடியாத போர் கதை என்பது வேறு விஷயம். அதன் முகவுரையில் அவர் இந்த புத்தகம் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.