நான் ஓரளவுக்கு தமிழ் படிப்பவன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. தமிழ் இலக்கியம், கவிதைகள் ஆகியவற்றில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும், பல குறள்களை கோனார் நோட்ஸ் இல்லாமல் இன்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருந்தும் இன்னும் வாழும் மொழி என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமிதம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் பேராவது தெரியும், மறைமலை அடிகள், பரிதிமால் கலைஞர், தேவ நேயப் பாவாணர், சி.வை. தாமோதரம் பிள்ளை என்றால் யாரென்று தெரியும்.

இந்த வருஷம் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்புகளை எழுதியவர்களின் லிஸ்டை கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். பொதுவாக எனக்கு இதில் பெரிதாக ஆர்வம் இருப்பதில்லை. இந்த லிஸ்டில் வருபவர்கள் தமிழ் பண்டிதர்கள், தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்று அழுத்தி சொல்பவர்கள், கல்லாடம், கில்லாடம் மாதிரி நூல்களுக்கு உரை எழுதுபவர்கள் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதிலெல்லாம் எனக்கு ஆர்வம் குறைவுதான், அதனால் இந்த மாதிரி செய்திகளை ஹெட்லைனோடு விட்டுவிடுவது வழக்கம்.

லிஸ்டை முழுதாக படித்த போது தமிழ் பற்றி ஓரளவு தெரிந்தவன் என்ற என் எண்ணம் காலியாகிவிட்டது. முக்கால்வாசி பேர் யாரென்று தெரியவில்லை. சில பேர்கள் கேட்டவையாக இருந்தாலும் – புலியூர் கேசிகன், பாஸ்கரத் தொண்டைமான் மாதிரி – அவர்களை பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களை பற்றி இணையத்திலும் அதிகமாக செய்திகள் இல்லை.

குறையை தீர்க்க வந்தவர் சேதுராமன். விடாமல் ஒவ்வொருவரையும் பற்றி தேடிப் பிடித்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். புலியூர் கேசிகனின் மகளிடம் பேசி இருக்கிறார். பூரனலிங்கத்தின் பேரனை தேடி கண்டுபிடித்திருக்கிறார். அயராமல் ஒவ்வொருவரைப் பற்றியும் தமிழில் தட்டச்சு செய்து எனக்கு அனுப்பி இருக்கிறார். அவரது ஊக்கமும், முயற்சியும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.

அவர் செய்திருக்கும் அத்தனையும் இந்த அரசு செய்திருக்க வேண்டும். ஒருவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்றால், அவரது எழுத்துக்கள் ஏன் முக்கியமானவை என்று ஒரு சிறு விளக்கம், அவரை பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு, என்ன பணம் வழங்கப் பட்டது என்ற தகவல் இவை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இந்த சின்ன விஷயத்தைக் கூட இவ்வளவு அமெச்சூர்தனமாக செய்வது கடுப்பாக இருக்கிறது. சேதுராமன் ஜமதக்னி பற்றி தெரிந்து கொள்ள எதோ அரசு துறையை தொடர்பு கொண்டாராம், அவர்களுக்கும் தெரியவில்லையாம்!

அவரது முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. இன்னும் ஒரு ஆறேழு பேரை பற்றியாவது விவரம் திரட்டுவார் என்று நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!

எனது தளத்துக்கு ரீச்சும் வீச்சும் அதிகம் கிடையாது. ஆனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வேறு பதிவுகளிலும் எழுதினால் – டோண்டு, பாஸ்டன் பாலா, பத்ரி, பா.ராகவன், ஜெயமோகன், நாகார்ஜுனன் – போன்றவர்கள் எழுதினால், இன்னும் பலரும் இது சரி என்று நினைத்தால், ஒரு வேளை இந்த அரசு காதில் விழுமோ? ஒரு நப்பாசைதான்.

Advertisements