இதுவும் சேதுராமனின் guest post. டோண்டு இவர் சென்னை புதுக் கல்லூரி (New College) தமிழ்த துறை முதல்வர் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.

நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாலூரிலே, வேளாளர் குலத்திலே, 1908ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14ம் தேதி பிறந்தவர். பெற்றோர்கள் துரைசாமி முதலியார், மாணிக்கம்மாள். துரைசாமி முதலியார் செந்தமிழ்ப் பற்றும், சிவபிரானிடத்திலே பேரன்புமுடையவர். தம்முடைய புதல்வருக்கும் இவை இனிதமைய வேண்டுமென்று பெரிதும் முயன்றவர்.

கண்ணப்பர், பள்ளிக் கல்வியைக் கற்று முடித்த பிறகு, செந்தமிழ்க் கல்வி கற்பதிலே சிந்தையைச் செலுத்தினார். சென்னை கலாநிலைய இதழாசிரியர் டி.என்.சேஷாசல ஐயர் இவருக்கு ஆங்கிலத்தையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நன்கு கற்பித்தார். மேலும் மே.வீ. வேணுகோபால பிள்ளையிடம் நன்னூல் விருத்தி, தண்டியலங்காரம், திருவிளையாடற் புராணம், அஷ்டப் பிரபந்தம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களைப் பயின்றார். இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த போதகாசிரியரான கோ.வடிவேல் செட்டியாரிடம் திருக்குறள், திருவாசகமும், சூளை வைத்தியலிங்கம் என்பவரிடம் தேவாரத்தையும் இசையுடன் கற்றார். சித்தாந்த நூல்களை தாமே பயின்றார், வேண்டுமளவு சைவ சித்தாந்த நூலறிவையும் பெற்றுத் தம் அறிவைப் பெருக்கிச் சிறந்த தமிழறிஞரானார்.

நல்ல தமிழ்ப் புலமையை அடைந்த இவர், பின்னர் ஆசிரியத் தொழிலில் ஈடுபடலானார். புரசைவாக்கம் லூதெரன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் துணைத் தமிழாசிரியராக எட்டாண்டுகள், முத்தியால்பேட்டை உயர் நிலைப்பள்ளியில் நான்காண்டுகள், திருவல்லிக்கேணி கெல்லட் உயர் நிலைப் பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் தொடக்க காலத்தில் இருந்து பதினாறாண்டுகள் வரை தமிழ்த்து ைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கினார்.

சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பல பணிகள் புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழுவிலும் சிறந்த முறையில் நற்பணியாற்றினார்.

தெய்வானையம்மையார் என்பவரை மணம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்தியவருக்கு ஏழு பெண்மக்கள் தோன்றினர். ஆசிரியராகப் பலருக்குக் கல்வி கற்பித்ததோடு நிற்காமல் பின் கண்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

பொய்யடிமையில்லாத புலவர் யார்? — திருமணம் — தமிழ் நூல் வரலாறு — அமலநாதன் — தமிழிலக்கிய அகராதி — திருக்குறள் அறத்துப்பால் உரை நடை — வள்ளுவர் கண்ட அரசியல் — மாணவர் திருக்குறள் விளக்கம் — கவி பாடிய காவலர்கள் — சங்க கால வள்ளல்கள் — தொழிலும் புலமையும் — அதிகமான் — தமிழர் போர் முறை — கட்டுரைக் கதம்பம் — கட்டுரைக் கொத்து —
தமிழ்ப் புதையல் — மாணவர் தமிழ்க் கட்டுரை — அறுசுவைக் கட்டுரைகள் —- ஜான்சன் வாழ்க்கை வரலாறு — புதுமை கண்ட பேரறிஞர் — கலை வல்லார் — பழமை பாராட்டல் — பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் — தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் — வையம் போற்றும் வனிதையர் — நானே படிக்கும் புத்தகம் — இன்பக் கதைகள் — அன்புக் கதைகள் — சிறுவர்
கதைக் களஞ்சியம் — நீதி போதனைகள் — நகைச் சுவையும் கவிச்சுவையும் — கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள் — தமிழ்த் தொண்டர் — இலக்கிய வாழ்வு — இலக்கியத் தூதர்கள் — சீவகன் வரலாறு — மாண்புடைய மங்கையர் — தமிழ்ப் புலவர் அறுவர் — சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம் — தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் — நடு நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் —
உயர் நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் — பூந்தமிழ் இலக்கணம் — புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும் — நடு நிலை வகுப்பு குமுத வாசகங்கள் — உயர் நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு — உயர் நிலை வகுப்பு தமிழ்ப் புதையல் — திருவெம்பாவை உரை — திரு ஈங்கோய் மலை எழுபது உரை — தமிழ் மந்திர உரை — சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை — திருவருள் முறையீடு உரை — பல்சுவைப்
பாமாலை குறிப்புரை — இங்கிதமாலை உரை.

கண்ணப்ப முதலியார் தம்முடைய இறுதிக் காலத்தில், சென்னை பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பணி நிறைவேறு முன்னரே தமது அறுபத்திரண்டாம் வயதில் 1971ம் ஆண்டு மார்ச்சு 29ம் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

(தகவல் — “தமிழ்ப் புலவர் வரிசை” பத்தாம் பகுதி, இருபத்தியொன்பதாம் புத்தகம் — ஆசிரியர் திரு சு.அ.இராமசாமிப் புலவர் — வெளியிட்டோர் ‘திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் – சென்னை 1973)

ஆர்வி: இவரது எழுத்துகளை எல்லாம் அரசே பதிப்பித்தல் ஒழிய திரும்பி வருவது அபூர்வம்தான். பதித்தாலும் நான் படிக்கப் போவதில்லை என்பது அடுத்த விஷயம்.

Advertisements